Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Wednesday, April 01, 2009

LTTE asks India Support


இந்திய அரசின் முழு ஆதரவு தேவை : புலிகள் வேண்டுகோள்

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் பத்மநாதன், புலிகள் ஆதரவு இணைய தளத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் கொள்கைகளுக்கு விடுதலைப் புலிகள் என்றுமே எதிராக இருந்தது இல்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எங்களின் தேசிய உணர்வுகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச தமிழ் சமுதாயம் இதை எதிர்பார்க்கிறது.

தமிழக மக்கள் எங்கள் மீது காட்டி வரும் இரக்கத்துக்கு இலங்கைத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர். எப்போதெல்லாம் எங்கள் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனரோ அல்லது, கொல்லப்படுகின்றனரோ அப்போது அவர்களின் முதல் விருப்பம் இந்தியாவுக்கு அகதியாக செல்வதாகத் தான் இருக்கும். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு நடத்த வேண்டும் என இலங்கை அரசு கூறுவதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், பிரச்னைக்கு போரால் மட்டுமே தீர்வு கண்டு விட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே, சர்வதேச சமுதாயம் சண்டையை நிறுத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

சண்டை நடக்கும் பகுதிகளில் தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதாக தொடர்ந்து எங்கள் மீது புகார் கூறப்படுகிறது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி எங்களுடன் தங்க வைக்கவில்லை. தமிழ் மக்கள் அவர்களாக விரும்பியே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். கொழும்பு செல்வதற்கும், முகாம்களுக்குச் செல்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தாலும் கூட, எங்களுடன் இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் தமிழர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தியபோதெல்லாம், இலங்கை ராணுவம் அதை வன்முறையால் ஒடுக்கியுள்ளது. இவ்வாறு பத்மநாதன் கூறியுள்ளார்.



இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

"ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டது.

இந்தநிலையில் எப்படி அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து நாம் திட்டமிட முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன்.

அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றுகூறியுள்ளார். அத்துடன் ""தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் திட்டம் இப்போதுகூட அரசாங்கத்திடம் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.

இதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஜெனிவாவில் நடந்த இறுதிச் சுற்றுப் பேச்சின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் பேசலாம், என்றனர் புலிகள்.

அப்போது அரசதரப்புப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. தமது தரப்பு பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக, தமிழர் தரப்பே அரசியல் தீர்வுக்கு தடையாக இருப்பதான குற்றச்சாட்டை அரசாங்கம் இப்போது முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அது புலிகள் சார்பில்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர அண்மையில் கூறியிருந்தார்.

இன்னொரு புறத்தில் புலிகள் சார்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வராததால்தான் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேவேளை நாட்டில் இனப்பிரச்சினையே கிடையாது. பயங்கரவாதப் பிரச்சினை தீர்ந்தால் சரி என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்ய முடியாது என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியல்தீர்வுக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய பின்னர் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றோர் இன்னொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

முதலில் புலிகளை அழித்து பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்குப் பின்னர் தான் அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது போர் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றி எந்தப் பேச்சும் கிடையாது என்பதே அவர்களின் கருத்து.

இதில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர், சகோதரர். அதிகாரம் மிக்க அமைச்சர்களைவிட சக்திவாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர். அவருக்குத்தான் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அரசாங்கம் இப்போதே அரசியல் தீர்வுக்குத் தயாராக இருப்பது போன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதற்குக் குறுக்கே இருப்பது போன்ற தொனியையும் வெளிப்படுத்துகிறது.

அதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் கருத்துக்கள், போர் முடிவுக்கு வராமல் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாதென்ற தொனியில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் அரசாங்கத் தரப்புக்கே அரசியல் தீர்வு பற்றிய தெளிவான முடிவு இல்லை.

குழப்பத்தின் உச்சியில் இருக்கின்ற அரசாங்கத் தரப்புக்கு வெளியுலக நெருக்கடிகள் வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழி போட்டுத் தப்பிக்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து இப்போது அரசியல் தீர்வு பற்றிய கருத்துகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் கூடுதல் அதிகாரங்களுடனான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று அண்மையில் கூறியிருக்கிறார்.

ஆனால், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் அதற்கான பழியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முற்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் நியாயமானதாகவோ, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவோ இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கத் தேவையில்லை. ஏன் புலிகள் கூட வேண்டியதில்லை. அரசாங்கமே அதைச் செய்து விட்டுப் போகலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை.

அரசியல் தீர்வு பற்றிய பேச்சு என்று காலத்தை இழுத்தடிக்க இப்படியான நடைமுறைகள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற குண்டுச் சட்டிக்குள் தான் அரசியல் தீர்வு என்ற குதிரையை ஓட்டுவதென்று தீர்மானித்து விட்டது அரசாங்கம்.

இதற்கு அப்பால் அரசாங்கம் வரத் தயாராக இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழர் தரப்பில் இருந்து வேறொருவரையோ வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதென்று உறுதியான முடிவை எடுத்தால் முதலில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வைத் தேடுவதற்குத் தயாராக வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதென்பது, எந்தக் காலத்திலும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.

Sunday, March 22, 2009

LTTE Prabhakaran now - சாதாரண உடையில் பிரபாகரன் நடமாட்டம் : இலங்கை ராணுவம் தகவல்


"இலங்கை புதுக் குடியிருப்பில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி பலமுறை சாதாரண உடையில் வெளியே வந்துள்ளனர்' என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் வெறும் 26.5 சதுர கி.மீ., பரப்பளவிலான நிலப்பகுதி மட்டுமே இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. அப்பகுதியையும் புலிகளிடமிருந்து கைப்பற்ற கடும் தாக்குதலில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் ஆண்டனி புதுக்குடியிருப்பில் உள்ள தாக்குதலுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது

இதுகுறித்து இலங்கை ராணுவம் கூறியிருப்பதாவது:புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி இருவரையும், புதுக்குடியிருப்பில் உள்ள துப்பாக்கிச்சூடு நடத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் பலமுறை பார்த்ததாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வந்த தமிழர்கள் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பதுங்குகுழியில் இருப்பதாகவும், அடிக்கடி சாதாரண உடையில் வெளியே வந்து ராணுவத்திற்கு எதிராக போரிடுவதன் அவசியம் குறித்து படையில் சேராத தமிழர்களிடையே பிரசாரம் செய்துள்ளனர்.

சாதாரண உடையில் வருவதன் மூலம் தமிழர்களுடன் கலந்த இருவரும், தங்களை சுற்றி பயங்கர ஆயுதங்களுடன் உள்ள சிறப்பு பாதுகாவலர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். புலிகளின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மனின் டிரைவரை 58வது பிரிவு கைது செய்துள்ளது. புலிகளின் தலைவர்கள் பற்றி பல ரகசிய தகவல்களை அவன் ராணுவத்தின் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.இவ்வாறு ராணுவம் கூறியுள்ளது.

நேற்று முன்தினம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய ஆயிரத்து 185 தமிழர்களை மீட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தற்போது நடந்து வரும் சண்டையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி ராணுவத்திடம் அடைக்கலம் புகுந்த தமிழர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முல்லைத்தீவில் படிக்கரைக்கு தெற்கே நடந்த சண்டையில் புலிகளின் கடற்பிரிவு மூத்த தலைவர் சிந்து கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.இரணைப்பாலையில் செந்தூரன் சிலையடி, அமலன் வெதுப்பகச்சந்தி, டயர் கடைச்சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சிவன் கோவிலடி ஆகிய இடங்களில் முன்னகர்ந்த ராணுவத்தினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பாதுகாப்பு வளையப் பகுதிகளில் ராணுவம் நடத்திய தாக்குதலில், நேற்று 46 பேர் உட்பட கடந்த மூன்று நாட்களில் 102 தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.வன்னிக்கு கடந்த 4 மாதங்களாக மருந்துகள் அனுப்பப்படாத நிலையில், மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக கிளிநொச்சியை சேர்ந்த டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை சங்க கப்பல் இரு தடவைகளில் 850க்கும் அதிகமான நோயாளிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நன்றி - தினமலர்

Wednesday, February 11, 2009

Arindam Chaudhuri in Srilanka issue - இலங்கையில் இனப்படுகொலையே


பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே என்று இந்தியாவின் மேநேஜெமேன்ட் குரு என்றழைக்கப்படும் தி சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. ஆரிந்தம் சவுத்திரி அவர்களின் கட்டுரை கீழே ....


படத்தை கிளிக் செய்து தெளிவாக பார்க்கவும்



நன்றி - தி சண்டே இந்தியன்



Sunday, January 18, 2009

திருமாவின் புலி ஆதரவு எல்லை மீறுகிறது


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

திருமாவளவனுக்கும்
, காங்கிரஸுக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்தான் என்ற நிலையில், இதில் இன்னொரு வில்லங்கமாக வந்து முளைத்திருக்கிறது ஒரு சி.டி! அது புலிகளை ஆதரித்து திருமா வெளியிட்டுள்ள `எகிறிப் பாய்' என்ற சி.டி.

கடந்த டிசம்பர் மாதம் 26-ம்தேதி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய `தமிழீழ அங்கீகார மாநாட்டில் வெளியிடப்பட்ட குறுந்தகடு அது. இதற்காக திருமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பலருக்கும் புகார் அனுப்பியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளரான பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.

``திருமாவளவனின் புலி ஆதரவு எல்லைமீறிப் போய்க்கொண்டே இருக்கிறது. `கடுமையான நடவடிக்கை எடுப்போம்!' என்று வைகோ, சீமானை எல்லாம் கைது செய்த முதல்வர், திருமாவிற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை? முன்பு புலிகளுக்கு ஆதரவாக வெறும் பிரசாரம் மட்டுமே செய்து வந்த திருமா, இன்று சி.டி. போட்டு பிரசாரம் செய்ய யார் இடம் தந்தது? அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? வேண்டாமா? `எகிறிப்பாய்' என்ற அந்தக் குறுந்தகடை வாங்கி நானும் கேட்டேன். அதில், தொடக்கத்திலேயே மூன்று நிமிடங்கள் உரையாற்றுகிறார் திருமா.

`விடுதலையைக் கேட்டதற்கு சிங்களவன் இனப்படுகொலையைச் செய்கின்ற செய்தி கேட்டு- வீரமுள்ள மறத்தமிழா இன்னுமிங்கே விழிமூடிக்கிடக்கின்றாயே? நியாயம்தானா? இளம் தமிழா எழுந்து வாடா போருக்கு! -உன் இனப்பெருமையை எடுத்துச் சொல்லு பாருக்கு! நிரந்தரமாய் நாடு வேண்டும் யாருக்கு? நம் நேசமுள்ள தமிழர்களின் வாழ்வுக்கு!' என்று அதில் சீறுகிறார்.

இப்படிச் சொல்லி இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரிவினை வாதத்தை திருமா தூவுகிறார். நிரந்தரமாய் நாடு வேண்டும் என்கிறார். யாருக்கு என்றால் இலங்கையில் உள்ள தமிழனுக்கு. அங்கே தனிநாடு கேட்பது யார்? விடுதலைப் புலிகள்தானே? தடைசெய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படி இங்கே பிரசாரம் செய்தால் தமிழ்நாட்டில் அல்லவா அமைதி கெடும்? அது மட்டுமல்ல, அந்தக் குறுந்தகட்டில் வரும் முதல் பாடலே பிரபாகரனைப் போற்றிப் புகழ்ந்து பிரசாரம் செய்வதாக உள்ளது.

`பழந்தமிழன் வீரம் இன்னும் செத்துப் போகவில்லை! தமிழ்ப் பரம்பரைக்கே சரணாகதிப் பழக்கமென்றுமில்லை! பாருக்கதை உணர்த்துகிறான் தம்பி வேலுப்பிள்ளை! அவன் பக்கம் செல்லும் தகுதி நம்மில் யாருக்குமே இல்லை!' என உள்ளது அந்தப் பாடல். அதை எழுதியவர் திருமாதான். பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமான பிரபாகரனின் பின்னால் செல்லும் தகுதி இங்கே யாருக்கும் இல்லை என்று கூறி இங்குள்ள தமிழ் மண்ணின் தலைவர்களை, மைந்தர்களை கேவலப்படுத்துவதாக உள்ளது அந்தப் பாடல். அதே பாடலில்...

`தமிழனென்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. தலைநிமிர்ந்து நடப்பதற்கே கூச்சமாக இருக்கிறது. தமிழன் தலை ஈழத்திலோ ரத்தஆற்றில் மிதக்குது!- இந்தத் தமிழ்நாட்டு தறுதலைகள் திரையரங்கில் கிடக்குது!' என்ற வரிகளும் உள்ளன.

என்ன கொடுமை இது? `வெட்கமாக இருக்கிறது, கூச்சமாக இருக்கிறது' என்று எந்தத் தமிழனை இங்கே இவர் கூறுகிறார்? தமிழக முதல்வரையா? அல்லது காங்கிரஸ்காரர்களையா? அது மட்டுமல்ல, திரையரங்கில் கிடப்பவர்களெல்லாம் தறுதலைகளா? அவர்கள் தறுதலைகள் என்றால் சினிமாவில் நடிப்பவர்கள் யார்? திருமா இதையெல்லாம் விளக்க வேண்டும்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த திலீபனுக்காகவும் திருமா அந்த சி.டி.யில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதைப் பாடியிருப்பவர் உன்னிகிருஷ்ணன். தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாக இப்படியெல்லாம் பிரசார பாடல் எழுதினால் என்ன அர்த்தம்? இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் புலிகள் இயக்கம். தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் வேண்டும்.

அந்தத் தமிழீழ ஆதரவு மாநாட்டிலேயே பிரபாகரன் படம் போட்ட போஸ்டர், புத்தகங்களை எல்லாம் போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது. ஆனால் இந்த `எகிறிப்பாய்' சி.டி.யை மட்டும் போலீஸ் எப்படி அனுமதித்தது என்பது தெரியவில்லை. சென்னை புத்தகக் காட்சியிலும் இது பரபரப்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடலை எழுதி வெளியிட்ட திருமா மீது நடவடிக்கை கோரி முதல்வர் கலைஞர், கவர்னர் மட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர், எங்கள் கட்சித் தலைவி அன்னை சோனியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்'' என்று குமுறி முடித்தார் பட்டுக்கோட்டை ராஜேந்திரன்.

இந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சியில் பிரபாகரன் படம் போட்ட புத்தகங்களை விற்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அந்த மாதிரி புத்தகங்களை விற்கக் கூடாது என்று கியூ பிராஞ்ச் போலீஸார் தடை போட்டிருக்கிறார்கள். சிறுத்தைகளின் புத்தகக் கடைக்குப் போய் இப்படிக் கூறியபோது, `முடியாது! நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறியிருக்கிறார்கள் அவர்கள்.

இந்த சர்ச்சை பற்றி காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்தோம்.

``தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்பதற்காக காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய டீம் காய் நகர்த்தி வருகிறது. இந்தப் போக்கை உன்னிப்பாகக் கவனித்து வரும் கலைஞரிடமும். அதற்கேற்ற கணிப்பு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் இதன் முதல்அடி தெரிந்துவிடும். இதற்குமேல் இப்போதைக்கு வெளிப்படையாக நாங்கள் எதுவும் பேச முடியாது'' என்று கூறிச் சிரித்தனர் அவர்கள்.

சரி! இந்தக் குறுந்தகடு பற்றிய குற்றச்சாட்டுக்கு திருமாவளவனின் பதில் என்ன? கேட்டோம்.

``நெஞ்சில் நஞ்சையும், வஞ்சகத்தையும் சுமந்து கொண்டு தமிழின துரோகத்தோடு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கத் துடிக்கும் இவர்கள் (காங்கிரஸார்) எல்லாம் ஒன்று சேர்ந்து இதே பிரபாகரனை பாராட்டிப் போற்றி ஆதரித்துப் பேசிய காலத்தில், 83-ம் ஆண்டில் நான் எழுதிய பாடல்கள்தான் அந்த `எகிறிப்பாய்' குறுந்தகடு. இன்று அந்த காங்கிரஸ்காரர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், நான் மாறவில்லை. அந்தப் பாடல்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் எழுதவில்லை. உலகத் தமிழர்கள் பத்தரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். தேசிய இன அடிப்படையில் அவர்களுக்காக ஒரு நாடு வேண்டும் என்றுதான் குரல் கொடுத்திருக்கிறேன். அது ஒரு ஜனநாயகக் கோரிக்கையே தவிர குற்றமாகாது.

தமிழர்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, இவர்கள் கற்பனை செய்வதைப் போல இந்தியாவிலிருந்து தனித்தமிழ் நாடு வேண்டும் என்று கோரவில்லை. தமிழினத்தை வைத்து பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு தமிழினத்திற்கு எதிராகச் செயல்படும் இத்தகைய துரோகக் கும்பலை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் தனிநாடு கோரவும் முடியாது. தமிழனுக்காகவே வாழ்ந்து தனித்தமிழ்நாடு கோரிய தமிழரசனை அடித்துக் கொன்ற மண் இந்த மண். இங்கே நாங்கள் தமிழ்ஈழம் வேண்டும் என்றுதான் சொல்கிறோமே தவிர, இந்தியாவுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பரப்பவில்லை.

காங்கிரஸ் கட்சியிலும் இனமானத் தமிழுணர்வுள்ள தமிழர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அதேபோல நாங்களும் அமரர் ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை மட்டுமின்றி உண்மையான காங்கிரஸாரை மதிக்கின்றோம். மாறாக, சிங்களத் தூதர் அம்சாவின் எடுபிடிகளாக மாறி, அம்சா தருகிற கேளிக்கை விருந்துகளுக்கும், `பரிசு'களுக்கும் மயங்கிக்கிடக்கும் சில காங்கிரஸாரின் நிலையை ஏற்க முடியாது. அப்படிப்பட்ட போலி காங்கிரஸார்தான் இப்படி சர்ச்சைகளைக் கிளப்புகிறார்கள். இவர்களுக்கு ராஜீவ் காந்தியை விட ராஜபக்ஷேதான் மானசீகத் தலைவர். ஆகவே, ராஜபக்ஷேவின் எடுபிடிகள் இப்படித்தான் பேசுவார்கள்'' என முடித்துக் கொண்டார் திருமா.
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009