Wednesday, April 01, 2009

LTTE asks India Support


இந்திய அரசின் முழு ஆதரவு தேவை : புலிகள் வேண்டுகோள்

விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் பத்மநாதன், புலிகள் ஆதரவு இணைய தளத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்திய அரசின் கொள்கைகளுக்கு விடுதலைப் புலிகள் என்றுமே எதிராக இருந்தது இல்லை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் எங்களின் தேசிய உணர்வுகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சர்வதேச தமிழ் சமுதாயம் இதை எதிர்பார்க்கிறது.

தமிழக மக்கள் எங்கள் மீது காட்டி வரும் இரக்கத்துக்கு இலங்கைத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர். எப்போதெல்லாம் எங்கள் மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனரோ அல்லது, கொல்லப்படுகின்றனரோ அப்போது அவர்களின் முதல் விருப்பம் இந்தியாவுக்கு அகதியாக செல்வதாகத் தான் இருக்கும். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு நடத்த வேண்டும் என இலங்கை அரசு கூறுவதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், பிரச்னைக்கு போரால் மட்டுமே தீர்வு கண்டு விட முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே, சர்வதேச சமுதாயம் சண்டையை நிறுத்தும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

சண்டை நடக்கும் பகுதிகளில் தமிழர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதாக தொடர்ந்து எங்கள் மீது புகார் கூறப்படுகிறது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி எங்களுடன் தங்க வைக்கவில்லை. தமிழ் மக்கள் அவர்களாக விரும்பியே எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கின்றனர். கொழும்பு செல்வதற்கும், முகாம்களுக்குச் செல்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு இருந்தாலும் கூட, எங்களுடன் இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் தமிழர்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தியபோதெல்லாம், இலங்கை ராணுவம் அதை வன்முறையால் ஒடுக்கியுள்ளது. இவ்வாறு பத்மநாதன் கூறியுள்ளார்.



இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

"ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் தான் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப்பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டது.

இந்தநிலையில் எப்படி அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து நாம் திட்டமிட முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கிறேன்.

அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றுகூறியுள்ளார். அத்துடன் ""தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் திட்டம் இப்போதுகூட அரசாங்கத்திடம் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.

இதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஜெனிவாவில் நடந்த இறுதிச் சுற்றுப் பேச்சின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் பேசலாம், என்றனர் புலிகள்.

அப்போது அரசதரப்புப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. தமது தரப்பு பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக, தமிழர் தரப்பே அரசியல் தீர்வுக்கு தடையாக இருப்பதான குற்றச்சாட்டை அரசாங்கம் இப்போது முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அது புலிகள் சார்பில்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர அண்மையில் கூறியிருந்தார்.

இன்னொரு புறத்தில் புலிகள் சார்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வராததால்தான் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேவேளை நாட்டில் இனப்பிரச்சினையே கிடையாது. பயங்கரவாதப் பிரச்சினை தீர்ந்தால் சரி என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கம் செய்ய முடியாது என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியல்தீர்வுக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய பின்னர் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றோர் இன்னொரு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

முதலில் புலிகளை அழித்து பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்குப் பின்னர் தான் அரசியல் தீர்வு பற்றிப் பேசலாம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதாவது போர் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றி எந்தப் பேச்சும் கிடையாது என்பதே அவர்களின் கருத்து.

இதில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர், சகோதரர். அதிகாரம் மிக்க அமைச்சர்களைவிட சக்திவாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர். அவருக்குத்தான் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அரசாங்கம் இப்போதே அரசியல் தீர்வுக்குத் தயாராக இருப்பது போன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதற்குக் குறுக்கே இருப்பது போன்ற தொனியையும் வெளிப்படுத்துகிறது.

அதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் கருத்துக்கள், போர் முடிவுக்கு வராமல் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாதென்ற தொனியில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் அரசாங்கத் தரப்புக்கே அரசியல் தீர்வு பற்றிய தெளிவான முடிவு இல்லை.

குழப்பத்தின் உச்சியில் இருக்கின்ற அரசாங்கத் தரப்புக்கு வெளியுலக நெருக்கடிகள் வந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழி போட்டுத் தப்பிக்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து இப்போது அரசியல் தீர்வு பற்றிய கருத்துகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் கூடுதல் அதிகாரங்களுடனான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று அண்மையில் கூறியிருக்கிறார்.

ஆனால், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் அதற்கான பழியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முற்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் நியாயமானதாகவோ, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவோ இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கத் தேவையில்லை. ஏன் புலிகள் கூட வேண்டியதில்லை. அரசாங்கமே அதைச் செய்து விட்டுப் போகலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை.

அரசியல் தீர்வு பற்றிய பேச்சு என்று காலத்தை இழுத்தடிக்க இப்படியான நடைமுறைகள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற குண்டுச் சட்டிக்குள் தான் அரசியல் தீர்வு என்ற குதிரையை ஓட்டுவதென்று தீர்மானித்து விட்டது அரசாங்கம்.

இதற்கு அப்பால் அரசாங்கம் வரத் தயாராக இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழர் தரப்பில் இருந்து வேறொருவரையோ வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதென்று உறுதியான முடிவை எடுத்தால் முதலில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வைத் தேடுவதற்குத் தயாராக வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதென்பது, எந்தக் காலத்திலும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009