Showing posts with label ஈழத்தமிழர்கள். Show all posts
Showing posts with label ஈழத்தமிழர்கள். Show all posts

Friday, January 23, 2009

Menon visit spoils Srilanka - வீணாய்ப் போனதா மேனன் விசிட்


முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 பேருக்கு மேல் காயம். எஞ்சியவர்கள் பின் வாங்கிச் சிதறியோடினார்கள்.அதற்கடுத்த நாள் புலிகள் இல்லாத காட்டுப் பகுதிக்குள் புகுந்து `படகு கட்டும்தளம் ஒன்றைக் கைப்பற்றி விட்டோம்' என்று ராணுவம் அறிவித்திருப்பதை வெறும் பகடியாகவே கருதுகிறார்கள் புலிகள்.

இதற்கிடையே ``முல்லைத்தீவு தற்போது ஐம்பத்து ஏழாயிரம் ராணுவ வீரர்களின் முழு முற்றுகையில் இருக்கிறது. புலிகள் இப்போது முப்பது சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டு விட்டனர். புலிகளின் கதை விரைவில் முடியப் போகிறது'' என்று கொக்கரித்திருக்கிறார் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

ஈழத்தின் தற்போதைய கள நிலவரம்தான் என்ன? அதை அறிந்து கொள்ள சில தொடர்பாளர்களை நாம் அணுகினோம். ``நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ராணுவக் குண்டுவீச்சு அப்பாவி பொதுமக்களைத்தான் அதிகம் காவு கொள்கிறது. புலிகள் தரப்பில் இன்னும் பெரிய யுத்தம் தொடங்கப்படவில்லை. தற்கொலைப்படையான கரும்புலிகள் இன்னும் களமிறங்கவே இல்லை. புலிகளின் முன்னணி தளபதிகளும் இன்னும் களமாட வரவில்லை. புலிகளின் முழுவேகத் தாக்குதல் தொடங்கும்போதுதான் என்ன நடக்கும் என்பது தெரியும். அதை இப்போதே கணிப்பது கடினமானது. இந்தக் கவலை ராணுவத்திற்கும் இருக்கிறது'' என்றனர் அவர்கள்.

நிலைமை இப்படியிருக்க ```யானை குழியில் விழப்போனால் தவளை கூட உதை கொடுக்கும்' என்ற பழமொழிக்கேற்ப, ஈழத்தில் ஒரு சிக்கலான போர்ச் சூழல் நிலவும் நிலையில், இங்கோ கருணாவை வைத்து நீண்ட பொய்ப்பிரசாரம் ஒன்றைக் கட்டவிழ்க்கும் முயற்சி நடக்கிறது'' என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழின ஆர்வலர்கள்.

பரபரப்பான இந்தச் சூழ்நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசன் அவர்களை நாம் பேட்டி கண்டோம்.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர மேனன், இலங்கை அதிபர் ராஜபக்ஷே சந்திப்பால் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது என்ன வகையான மாற்றம் ஏற்படும் என்று கருதுகிறீர்கள்?

``கடந்த முப்பதாண்டு காலமாக எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது இந்திய ராஜதந்திரிகள் பலமுறை கொழும்புக்கு வந்து சென்றுள்ளனர். ஆனால் தமிழ் மக்களின் பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அழிவுகள் அதிகரித்துச் செல்கின்றனவேயொழிய குறைந்த பாடில்லை. இம்முறை சிவசங்கர மேனன் வந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் இல்லாத அளவிற்கு எமது மக்கள் மீது கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலநூறு தமிழர்கள் காயமடைந்து வரும் நிலையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு அகதிகளாக காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித அவலத்தின் சின்னமாக தமிழீழ தேசம் காட்சியளிக்கிறது. சிவசங்கர மேனனின் வருகையின் போதோ அல்லது பின்னரோ எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இது எமக்கும் எம் மக்களுக்கும் மிகுந்த வேதனையளிக்கிறது.''

புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மான் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக ஒரு செய்தி பரவியதே. இது உண்மையா, வதந்தியா? புலிகள் மற்றும் உலகத் தமிழர்களின் மனதிடத்தைச் சீர்குலைக்க அப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டதா? அதன் பின்னணி என்ன?

``அது ஒரு பொய்யான வதந்திதான். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகள் போராட்டத்தைக் களங்கப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் இதுபோன்ற பரப்புரைகளை மேற்கொள்வது வழமை. எமது மக்களுக்கும் இது பழகிப்போன ஒன்று. இதனால் உலகத் தமிழினத்தின் மனதிடம் ஒருபோதும் குலையாது. மாறாக முழுத் தமிழினமும் எமக்காக ஒருமித்து ஓங்கிக் குரலெழுப்புகிறது''.

கருணா அவரது பேட்டியொன்றில், `இலங்கைத் தமிழர்களின் இந்த அழிவுக்குக் காரணமே பிரபாகரன்தான்'. நான் ஒருவன் மட்டும்தான் அவரிடம் பேச முடியும். தனிமனிதக் கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் அதைக் கேட்காமல் சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்' என்றெல்லாம் கூறியிருக்கிறாரே?

``கருணா சொல்வது அப்பட்டமான பொய். தலைவர் எம் எல்லோரையும் அடிக்கடி சந்தித்துக் கதைப்பவர். மற்றவர்களின் கருத்துகளுக்கு செவி மடுப்பவர். கருணா இயக்கத்தில் இருந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு பகுதியில் மக்கள்மீது வெறுக்கத்தக்க வன்முறை சார்ந்த செயல்களைச் செய்ததால் பலமுறை தலைவரால் கண்டிக்கப்பட்டவர் கருணா. அவரது கூற்று கேலிக்கிடமானது. தமிழ்மக்கள் ஒருபோதும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்''.

நான் எவ்வளவோ கூறியும் பிரபாகரன் கேட்காமல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, நூறுகோடி ரூபாய் மதிப்பிலான முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடினார். புலிகள் இயக்கத்தில் உள்ள தளபதி பானு அந்தத் தாக்குதலை நடத்தினார். அதுபோல இந்திய அமைதிப் படை வெளியேறிய பின் இங்கிருந்த டி.என்.ஏ. எனப்படும் தமிழ்தேசிய ராணுவத்தைச் சேர்ந்த 1200 தமிழ் இளைஞர்களை பிரபாகரனின் உத்தரவின்பேரில் பதினெட்டு நாளில் நாங்கள் கொன்றோம். பல தமிழ்த் தலைவர்களின் கொலைகளுக்கு முழுக்காரணமும் பிரபாகரன்தான்' என்று கருணா கூறியிருக்கிறாரே?

``யாழ்ப்பாண முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். எம்முடன் ரத்தமும் சதையுமாக வாழ்பவர்கள். எமது விடுதலைப் போராட்டத்துக்குக் களங்கம் ஏற்படுத்த நினைத்த சில தீயசக்திகள்தான் எமது இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி அம்மக்களை வெளியேற்றினர். எங்கள் தலைவர் அப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தூர இடமொன்றில் இருந்தார். இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் மீது பாரிய நடவடிக்கை எடுக்கக் கட்டளையிட்டார். இன்றும் அந்த மக்களை மீளவும் அவர்களது வாழ்விடத்தில் குடியேறுமாறு நாம் கூறிவருகிறோம். ஆனால் யாழ்ப்பாணம் மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகே அவர்கள் அங்கு வந்து எம் அரவணைப்பில் வாழ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.

தமிழ் தேசிய ராணுவத்தில் இருந்த இளைஞர்களையும், கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராகவும் கருணா எடுத்த நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள மக்களிடம் கேட்டால் தெரியும். கருணா அரசியல் ஞானமற்ற, பழமைக் கருத்துக்களில் ஊறிய எதையும் ராணுவவாதக் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடிய நபர். தற்போது அவர் அரசப்படை களின் ஒட்டுக்குழுவாகச் செயல்படுவதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவரது சமூக விரோதச் செயல்களுக்காக எமது தலைமைப் பீடம் நடவடிக்கை எடுக்க முயன்றபோதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்தார். எந்தவித அரசியல் தெளிவோ, கொள்கைப் பற்றோ இல்லாத, தனது சுகபோகங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ஒரு நபராகவே அவரை நாம் பார்க்கிறோம்.''

`பிரபாகரன் எந்தப் போர்க்களத்திற்கும் வந்ததே இல்லை. பிரபாகரன் ஒரு டம்மி ஆள் போலத்தான்' என்கிறாரே கருணா? அப்படியா?

``இது அவரது கனவுலக கற்பனைவாத கட்டுக் கதையாகும். எமது தலைவரின் போர்த்திறமையை அரசப்படைகளிள் தளபதிகளே வாயாறப் புகழ்ந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் தளபதிகளும் பாராட்டியிருக்கிறார்கள். கருணாவின் கூற்று சித்த சுவாதீனமற்றர்களின் பேச்சைப் போன்றதாகும்.''

`புலிகளின் ஆள்பலமே கிழக்குப் பகுதிதான். அதை நான் கலைத்து விட்டேன். நான் வெளியேறிய பிறகு புலிகளுக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை' என்று கருணா கூறியிருப்பது உண்மையா?

``தமிழ் மக்கள் முழுவதும் எம்முடன்தான் இருக்கிறார்கள். கருணா வெளியேறிய பிறகும் நாம் பல வெற்றிகளை அடைந்திருக்கிறோம். அவரது கூற்றைப் பெரிதுபடுத்த வேண்டாம்.''

`தமிழகத்தில் உள்ள தலைவர்கள் அனைவரும் புலிகளுக்காக ஆயுதம் கடத்தி பணம் பெறுபவர்கள்' என்று கருணா கூறியிருப்பது பற்றி.....?

``ஏலவே நான் கூறியது போல கருணா அரசியல் விவேகமோ, ஞானமோ அற்றவர். எமது விடுதலைக்காக அன்று தொட்டு இன்றுவரை குரல் கொடுத்து வரும் எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்தலைவர்கள் பற்றி இப்படிக் கருத்துக் கூறியிருப்பதில் இருந்தே கருணா எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.''

`இலங்கையில் தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற போர்நிறுத்தம் அவசியம். மக்கள் நலனை பிரபாகரன் கருத்தில் கொள்பவர் என்றால் அவர் சரணடைய வேண்டும்' என்றும் கருணா கூறியிருக்கிறாரே?

``தமிழக மக்களைக் கொன்றழித்து வரும் ராணுவத்தின் கருத்தும், கருணாவின் கருத்தும் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியாக இருக்கிறது. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் எம் தலைவரைச் சரணடையுமாறு கோருவது கனவில்கூட நடக்கப் போவதில்லை. அரசின் கைக்கூலியான கருணாவின் இந்தக் கூற்றுபற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.''

கருணாவிற்கு கிழக்கு இலங்கையில் ஆதரவு இருக்கிறதா? அங்குள்ள தமிழர்கள் அவரை வரவேற்கிறார்களா?

``மக்களால் முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்கப்பட்டவர் கருணா. முன்பே நான் கூறியது போல மக்கள் விரோதச் செயல்களுக்காக எமது இயக்கம் கருணா மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போதுதான் அவர் தப்பியோடி அரசப்படைகளிடம் சரணடைந்துள்ளார்.''

முல்லைத்தீவில் நிலைமை இப்போது எப்படியிருக்கிறது? `ராணுவ சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிவிட்டார்கள். போராளிகளின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது' என்கிறதே ராணுவத் தரப்பு. இதிலிருந்து எப்படி மீண்டெழப் போகிறீர்கள்?

``நாம் எவ்வித முற்றுகைக்குள் இருந்தாலும் எமது மக்களின் சுதந்திரமான சுபிட்சமான வாழ்விற்காக உலகத் தமிழினத்தின் ஆதரவோடு இறுதிவரை போராடி மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை எமக்குண்டு.''

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திருமாவளவன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள், அமைப்புகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. தமிழக மக்களின் இந்த ஆதரவை அங்குள்ள தமிழர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

``தமிழக மக்களை இங்குள்ள மக்கள் தமது உடன்பிறப்புகளாகவே, தொப்புள்கொடி உறவுகளாகவே பார்க்கிறார்கள். தாயகத் தமிழகத்தையும், தமிழீழத்தையும் ஒரு சிறிய கடல் நீரேரியே பிரித்து நிற்கிறது. இது வரலாற்று ரீதியாக யாராலும் மறுக்க முடியாத உண்மை.''

இந்தியாவில் மைய அரசியலில் பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா `புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்' என்றும் தமிழீழ மக்களுக்கு ஆதரவு என்றும் பேசி வருகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

``எமது விடுதலைப் போராட்டம் நீதியானது, நியாயமானது, தர்மத்தின்பாற்பட்டது என்ற உண்மையை அவர்கள் புரிந்துள்ளார்கள் என்பதாகவே பார்க்கிறேன்''.

மீண்டும் முதல் கேள்விக்குத் தொடர்பான இன்னொரு கேள்விக்கு வருகிறேன். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகை தவிர்க்கப்பட்டு அந்தத் துறையின் செயலாளர் இலங்கை வந்ததை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? அங்குள்ள தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?

``இங்குள்ள தமிழர்கள் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு யார் வந்தாலும் ஒரே மாதிரியாகவே பார்க்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் எவ்வளவு திறமை வாய்ந்த ராஜ தந்திரிகள் இங்கு வந்தாலும் அவர்களை சிங்கள ராஜ தந்திரிகள் ஏமாற்றி விடுவார்கள் என்ற கருத்துப்படவே பார்க்கிறார்கள்.''



நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, December 13, 2008

ஐடி இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்-வைகோ சீமான் அனல் பறக்கும் பேச்சு


தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஐயா பழ.நெடுமாறன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர்

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்


Thursday, December 11, 2008

அரசியல் கோமாளியா? புலிகளிடம் பணம் பெறுகிறீர்களா? வைகோ ஆவேச பேட்டி!



நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

அண்மையில் இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செம சூடு.

``இலங்கை ராணுவத் தாக்குதலில் தமிழர்கள் யாரும் இறப்பதில்லை என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிட்டால் அதன் மூலம் நெடுமாறன், வைகோ போன்ற அரசியல் கோமாளிகளுக்கு அந்த இயக்கம் மூலமாக வரும் `வருமானம்' நின்றுபோய்விடும். அதனால்தான் புலிகள் இயக்கத்தை இவர்கள் காப்பாற்ற முயல்கிறார்கள்'' என்று அதில் பொரிந்து தள்ளியிருந்தார் பொன்சேகா.

இலங்கைத் தளபதியின் இந்தப் பேச்சு குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ என்ன கருதுகிறார்? லண்டனில் ஈழத்தமிழர்கள் நடத்திய `மாவீரர் நாள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பியிருந்த அவரைச் சந்தித்துக் கேட்டோம்.

``சரத் பொன்சேகாவின் இந்தக் கொழுப்பெடுத்த திமிர்ப் பேச்சுக்கு, மத்திய அரசு கொடுத்த இடமே காரணம். இலங்கையில் உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்ற ஆறரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுக் கொந்தளிப்பிற்கேற்ப தமிழக சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மானமிக்க நமது சட்டமன்ற நடவடிக்கையை பொன்சேகா கேலியும், கிண்டலும் செய்துள்ளார். கேவலப்படுத்தியிருக்கிறார்.

ஒரு வல்லரசு நாடான இந்தியாவின் பிரஜைகளை - தமிழக அரசியல் தலைவர்களை சுண்டைக்காய் நாடான இலங்கையின் ராணுவத்தளபதி இப்படி இழிவுபடுத்திப் பேசியிருப்பது மண்டைக் கொழுப்பு. இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ஷே, ராணுவ மந்திரி ஆகியோரை இந்தியாவிற்கு வரவழைத்து பொது மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். அல்லது அவர்களின் தூதரகத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.

பொன்சேகாவின் வாய்க்கொழுப்பு பேச்சைக் கண்டித்து வரும் 10-ம்தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தின் முன்பு இனமான உணர்வுள்ள தமிழர்களை ஒன்றுதிரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்'' என்று கொதித்த வைகோவிடம் மேலும் சில கேள்விகளை முன் வைத்தோம்.

உங்கள் லண்டன் பயணத்தை இலங்கை துணைத் தூதரகம் தடுக்க முயற்சித்ததாக செய்தி பரவியதே?

``ஏற்கெனவே எனது நார்வே பயணத்தைத் தடுக்க முயன்று தோற்றவர்கள்தான் அவர்கள். இந்தமுறை நான் லண்டன் செல்வது இலங்கை அரசுக்குத் துளியும் பிடிக்கவில்லை. அந்த அடிப்படையில் எனது லண்டன் பயணத்தைத் தடுக்க வேண்டும் என அவர்கள் முயன்றார்கள்.''

லண்டன் பயணத்திற்காக உங்களுக்கு `விசா' மறுக்கப்பட்டதாகவும், பயணம் ரத்து என்றும் கூட செய்திகள் உலா வந்ததே?

``இதில் உண்மையில்லை. இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சார்பில் அவர்களது லெட்டா்பேடு மூலமாக எனக்கு அழைப்பு வந்தது. பொதுவாக, பன்னிரண்டு வேலை நாட்களுக்கு முன் விண்ணப்பித்தால்தான் விசா கொடுப்பார்கள். எனக்கோ விண்ணப்பித்த நான்காவது நாளே விசா கொடுத்து விட்டார்கள். பொடா கோர்ட்டிலும் எனக்கு அனுமதி கிடைத்து விட்டது. அப்படியிருந்தும் எனக்கு விசா மறுக்கப்பட்டதாக பிரபல ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் முதன்மைச் செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதில் ஃபிளாஷ் நியூஸ் வேறு. உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் இப்படி செய்தி போட்டவர்கள், லண்டனில் அறுபதாயிரம் தமிழர்கள் முன் பேசிய செய்தியை நான் அனுப்பிவைத்தும் போடவில்லை. இது புரியாத புதிராக இருக்கிறது.''

இதுபோன்ற சம்பவங்களுக்கு இலங்கை துணைத் தூதர்தான் காரணம் என்கிறார்களே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

``இங்குள்ள இலங்கை துணைத் தூதர், நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் கருத்துச் சொல்கிறார். எதற்கெடுத்தாலும் அறிக்கை வெளியிடுகிறார். இது மிகவும் தவறான போக்கு. அதிகப் பிரசங்கித்தனம். அதிகார வரம்பை மீறும் செயல். சிங்கள வெறியர்களின் பிரதிநிதி ஒருவர் இங்கே இருந்து கொண்டே இவ்வளவு வேலைகளைச் செய்கிறார் என்றால் அங்கே தமிழர்களை என்ன பாடுபடுத்துவார்கள்?

அதிகாரத்தில் இருப்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு, வைக்க வேண்டிய இடத்தில் அவர்களை வைக்க வேண்டும். வைத்தால் அப்படிப் பேச மாட்டார்கள். இப்போது இந்திய அரசே சிங்களவர்களுக்கு உடந்தையாக இருக்கும் தைரியத்தில், திமிரில்தான் இப்படிச் செயல்படுகிறார்கள்.''

`இலங்கையின் இனச்சிக்கலுக்குக் காரணம் பிரிட்டிஷ் அரசுதான். இப்போதும் நீங்களே தலையிட்டு இனப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்' என லண்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசியிருக்கிறீர்களே? அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

``இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குள் நுழைய எனக்கு அனுமதியில்லை என்பதால் அந்தக் கட்டடத்தின் உள்ளே ஒரு தனியரங்கில் கூட்டம் நடந்தது. பிரிட்டிஷ் எம்.பி.க்கள் அறுபது பேர், தமிழ் மக்கள் பார்வையாளர்கள் இருநூறு பேர் என நடந்த கூட்டம் அது. நான் உள்ளே நுழைந்து இருக்கையில் உட்காரும்வரை அனைவரும் எழுந்து நின்று கை தட்டியபடியே இருந்தது சிலிர்ப்பாக இருந்தது.

நான் பேசும்போது. `1948-ல் பிரிட்டிஷ் அரசு இலங்கையில் ஒரு சுமுகமான சூழ்நிலை, சமமான சட்டதிட்டத்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டு வந்திருந்தால் இனப்பிரச்னை வந்திருக்காது' என்று அவர்களை குற்றம் சுமத்தாத வகையில் பேசினேன். `இங்கிலாந்துக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் தேசிய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதித் தந்த மாபெரும் ஆங்கில அரசியல் மேதை ஐவர்ஜென், `சிங்களவர்கள் தமிழர்களுக்கு இப்படி துரோகம் செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் இப்படியொரு அரசியலமைப்புச் சட்டத்தையே எழுதிக் கொடுத்திருக்க மாட்டேன்' என்று கூறியிருந்ததை நான் எனது பேச்சில் குறிப்பிட்டது பிரிட்டிஷ் எம்.பி.க்களின் மனதைத் தொட்டது.

`நீங்கள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீது விதித்த தடையை நீக்க வேண்டும். இலங்கைப் பிரச்னையில் நீங்கள் தலையிடுவதில் சிக்கல் இல்லை. பிரச்னையைத் தீர்க்க முன் நில்லுங்கள். சர்வதேச நாடுகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்' என்று பேசினேன்.''

அவர்களது ரியாக்ஷன் எப்படி இருந்தது?

``இலங்கையில் சிங்களப்படை நடத்திய செஞ்சோலை படுகொலை முதல் அனைத்தையும் புள்ளிவிவரத்தோடு பட்டியலிட்டேன். போர் நிறுத்தத்தை ஏற்க இலங்கை அதிபர் ராஜபக்ஷே மறுப்பது, ஐ.நா. சபையின் அலுவலகத்தை அவர் திறக்க மறுப்பது, சர்வதேச மனித உரிமை கமிஷன் தலைவர் செயிஸ் அம்மையாரை உள்ளே விட மறுப்பது, இலங்கையில் திட்டமிட்டு ஓர் இனப்படுகொலை நடப்பது, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வன்னிப்பகுதிக் காடுகள், கழனிகள் மற்றும் மரத்தடிகளில் அகதிகளாக இருப்பதையும் பட்டியலிட்டேன்.

அவர்கள் அதை ஆமோதித்து, ஈழத்தமிழர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தார்கள். லேபர் கட்சி எம்.பி.யான ஸ்டீபன் பவுன் என்பவர், என் பேச்சைப் பாராட்டி, `இது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய பேச்சு' என்றபோது சங்கோஜப்பட்டேன்.''

மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி.....?

``ஆம்! லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் உள்ள எக்செல் என்ற பிரமாண்ட அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி அது. அறுபதாயிரம் தமிழர்கள் அதில் கலந்து கொண்டதாக ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் கூறியிருக்கிறது. பிரமாண்டமான மேடை. மாவீரர்களுக்கு மரியாதை செலுத்த தனியிடம் என மிக நேர்த்தியாக, என் வாழ்நாளில் இதுவரை பார்க்காத வண்ணம் அந்த நிகழ்ச்சி நடந்தது, சீருடை தரித்த தன்னார்வத் தொண்டர்களே ஆயிரம் பேர் வரை இருந்தார்கள்.

நிசப்தத்துக்கு நடுவே ஒலிபெருக்கியில், `அனைவரும் எழுந்து நில்லுங்கள். நம் தாயக விடுதலைக்காக உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர அகவணக்கம் செய்வோம். உங்கள் கைகளில் உள்ள கார்த்திகைப் பூக்களை மேல் நோக்கித் தூவுங்கள். உங்கள் கரங்களில் ஏற்றப்பட்டிருக்கும் அகல் விளக்குகளை மேலே உயர்த்துங்கள்' என சன்னமான குரல் ஒலித்தபோது, கூடியிருந்த மக்கள்கடல் உணர்ச்சிப் பெருவெள்ளமாகச் சிலிர்த்தது. ஊனை உருக்கி, உள்ளத்தை ஊடுருவுகின்ற ஒரு சோகமான பாடல் செவிகளுக்குள் பாய்ந்து தாக்கியது.

பல்லாயிரக்கணக்கில் கைகள் மேலே உயர்ந்து கார்த்திகைப் பூக்களை மேல்நோக்கித் தூவின. அமாவாசை இரவில் மேகங்கள் உலவாத வானில் ஒளிரும் விண்மீன்களைப் போல தீபச்சுடர்கள் பளிச்சிட்டன. மூச்சுவிடும் ஒலிகூட துல்லியமாகக் காதில் விழும் பேரமைதி திடீரெனச் சூழ்ந்தது. மாவீரர்களுக்கான மௌன அஞ்சலியில் மணித்துளிகள் கரைந்தன. பெரும்பாலானோரின் முகங்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் முதல் மலர்க்கொத்தை வைத்தார். அடுத்து நான் வைத்தேன். ஏறத்தாழ மூன்று மணிநேரம் நடந்த அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தால்கூட நெஞ்சம் விம்முகிறது. பதறுகிறது.''

லண்டன் பயணத்தின்போது புலிகளைப் பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில்தான் விசா கிடைத்ததாமே?

``அத்தனையும் கட்டுக்கதை. கட்டவிழ்த்து விடப்பட்ட வதந்தி. என்னிடம் யாரும் அப்படிக் கோரவில்லை. நானும் புலிகளைப் பற்றி பேச மாட்டேன் என்று கூறவும் இல்லை. இமிக்ரேஷன் அலுவலகத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல் என் பாஸ்போர்ட்டில் சீல் அடித்துக் கொடுத்து விட்டார்கள்.''

இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள், அதே நிலைப்பாட்டில் உள்ள தமிழக முதல்வருடன் இணைந்து செயல்படாமல் அவரை விமர்சனம் செய்கிறீர்களே?

``இந்தக் கேள்வி கலைஞர் கருணாநிதி ஏதோ நியாயவாதி போலவும், இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையில் அவர் உருகுவது போலவும் நினைக்கத் தூண்டுகிறது. உண்மையில் அவர் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறார். அப்படியிருக்கும் போது, அவருடன் நான் சேர்ந்து கொண்டால் என் குற்றச்சாட்டு முனை மழுங்கி அல்லவா போய்விடும்?

கடந்த நான்காண்டுகளாகவே மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு ராணுவ உதவி செய்வது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அதை எதிர்த்து ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? குரல் கொடுத்தாரா? பலாலி விமானதளத்தை இந்தியா புதுப்பித்துக் கொடுத்ததாக இலங்கை ராணுவத் தளபதியே கூறியபோது முதல்வர் அதைத் தவறு என்றாரா? இலங்கையுடன் இந்தியா தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் என செய்தி வந்தபோது இவர் என்ன பேசினார்? தமிழினத் தலைவர் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் இவர் ஈழத்தமிழர்களைக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? புலிகள் ஒழிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில்தான் இருந்து வருகிறார். அதுதான் அவரின் நினைப்பு. ஆசை.

கம்யூனிஸ்டுகள் உண்ணாவிரதம் நடத்தியபோது கூட மௌனமாக இருந்தவர், ம.தி.மு.க. பத்தாம் தேதி மறியல் போராட்டம் என அறிவித்த பிறகுதான் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் என அறிவித்தார். `எல்லோரும் மொத்தமாக செத்துப் போவோம்' என்றார். அது என்ன ஒப்பாரி? அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாரா? எல்லாம் கதை, வசனம் எழுதி நடிக்கும் நாடகம்தான்.

தமிழ் மக்களிடம் இருந்து `இனத்துரோகி' பட்டம் வந்து விடுமே என்ற பயத்தில், நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகும் அச்சத்தில் `அனைத்துக் கட்சிக் கூட்டம்' என்றார். அது ஒரு நாடகம் என்று தெரிந்துதான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை.

அடுத்து மொத்தமாக ராஜினாமா என்றார். நடந்ததா அது? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இவர் புறப்பட்டு விட்டதைப்போல ஏற்படுத்தப்படும் மாயத்தோற்றத்திற்கு நாங்களும் துணைபோக முடியுமா?''

`ராஜினாமா செய்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால் வேறு யாரிடம் போய் போர் நிறுத்தக் கோரிக்கையை வலியுறுத்த முடியும்' என்கிறார்களே? நியாயம்தானே?

``என்ன நியாயம்? வீடு பற்றி எரியும் போது அணைப்பதற்கான வேலையைப் பார்ப்பாரா? அல்லது வண்டி எப்போது வரும் என்று கடிதம் எழுதிப் போட்டுவிட்டுக் காத்திருப்பாரா? எம்.பி.க்கள் ராஜினாமாவால் சர்க்கார் கவிழ்ந்து விடும் என்ற பயத்தாலாவது `போரை நிறுத்து' என்று ராஜபக்ஷேவுக்கு பிரதமர் அறிவித்திருப்பாரே? அந்த வாய்ப்பை இவர் ஏன் நழுவ விட்டார்? ராஜினாமா நாடகத்தில் இரண்டு வார தவணை எதற்கு? பத்திரிகைகளில் தினம் ஒரு செய்தி போடுவதற்கா? கனிமொழியிடம் இவர் ராஜினாமா கடிதம் வாங்குகிறார். இவர் என்ன ஸ்பீக்கரா, ராஜினாமா கடிதம் வாங்குவதற்கு? எல்லாம் ஏமாற்று நாடகம்.

சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது. 48 மணிநேரத்திற்குள் அந்தத் தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே இலங்கை அதிபர் ராஜபக்ஷே டெல்லியில் பிரதமரைச் சந்தித்து அங்கிருந்தபடியே `போரை நிறுத்த முடியாது. புலிகளை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்று கன்னத்தில் அறைந்தது போல சொல்கிறான். அது ஆறரைக் கோடி தமிழர்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று கலைஞர் கருணாநிதி நினைத்திருக்க வேண்டாமா? நூறு கோடி இந்தியர்களுக்கும் நேர்ந்த தலைகுனிவு என பிரதமர் நினைத்திருக்க வேண்டாமா? இந்தத் திமிர் ராஜபக்ஷேவுக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? பிரதமரும், முதல்வரும் கொடுத்தது.

அடுத்து பிரதமரைச் சந்திக்க எம்.பி.க்களை அனுப்பினார். அதன்பின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளோடு போய் பிரதமரைச் சந்தித்தார். அதில் பிரதமர் ஏதாவது பேசினாரா? இடிச்சபுளியாட்டம் அல்லவா உட்கார்ந்திருந்தார்? ``போரை நிறுத்தச் சொல்லி இலங்கையை வற்புறுத்துவோம்' என பிரதமர் என்னிடம் கூறினார்' என முதல்வர் கூறவில்லையே. அது ஏன்? மக்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஆக, போரை நிறுத்தச் சொல்வோம் என்று சொல்வதற்கே மன்மோகன்சிங் தயாராக இல்லை.''

இவர்கள் கேட்டதால் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடாகி இருக்கிறதே? இது முன்னேற்றம்தானே?

``இல்லை! கருணாநிதியின் வார்த்தையைக் கவனமாகக் கவனிக்க வேண்டும். `போரை நிறுத்தச் சொல்லி நாங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறோம்' என்றுதான் கூறியிருக்கிறார். பிரதமர் அப்படிச் சொன்னார் என்று இவர் சொல்லவில்லை. இப்படிப் பட்ட நிலையில் பிரணாப் முகர்ஜி அங்கே போய் என்ன செய்துவிடப் போகிறார்? சென்னைக்கு முதல்வர் வீட்டுக்கு வந்து காபி குடித்து விட்டுச் சென்ற அவர், கொழும்புக்குப் போய் டீ குடித்து விட்டு வருவார். அவ்வளவுதான். கலைஞர் கருணாநிதி உண்மையில் கவலையோடும், மனக் கொந்தளிப்போடும் வரவில்லை என்பது பிரதமருக்குத் தெரியும். இலங்கை ராணுவத்திற்கான ஆயுதத் தளவாட உதவிகளை பிரதமர் நிறுத்துமாறு முதல்வர் சொல்வாரா? மாட்டார். மக்களை ஏமாற்ற தினம் தினம் கதை, கவிதை, வசனம் என எழுதி நாடகத்தை நடத்தி மக்களின் கொந்தளிப்பில் இருந்து அவர் தப்பப் பார்க்கிறார் என்பதுதான் நிஜம்.''

முதல்வர் எடுத்த முயற்சியால்தான் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி கிடைத்திருப்பதை மறுப்பதற்கில்லையே?

``அனுப்பிய நிவாரணப் பொருட்களில் பத்து சதவிகிதம் மட்டுமே தமிழ் மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. 90 சதவிகிதம் சிங்களவர்களுக்கும், ராணுவத்திற்கும் போயிருக்கிறது. முதல்வரின் நிவாரண உதவி கூட சிங்களவனுக்குத்தான் பயன்படுகிறது.''

இந்த விஷயத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மீது விமர்சனம் பாய்கிறதே? அவரை மாற்ற வேண்டும் என்கிறார்களே?

``இங்கே தென் கரையோரத்தில் அரை லிட்டர் பெட்ரோல், டீசல் இலங்கைக்குப் போய்விடக் கூடாது என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்த நாராயணன், மற்ற பகுதிகளில் கப்பல் ரோந்தையே விட்டுவிட்டார். கடல்வழியே தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பு மட்டுமல்ல; பதினைந்து நாட்களுக்கு முன் உளவுப்பிரிவு தகவல் கொடுத்தும் கோட்டை விட்டு விட்டார். பாகிஸ்தானில் இருந்து கடல்வழியே மும்பை வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முழுப்பொறுப்பும் அவர்தான்.''

புலிகளை ஆதரிப்போம் என்கிறீர்கள். ஆனால் நீங்கள் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. தலைவி இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறார்? முதல்வர் கூட அடிக்கடி இதை `பஞ்ச்' வைத்து தாக்குகிறாரே?

``அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும் என்ற ஆசைக்கனவுக்காக முதல்வர் அப்படிப் பேசுகிறார். புலிகளுக்கு ஆதரவில்லை என்றாலும் தமிழ்ஈழ மக்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது.

சரி! இவ்வளவு பேசும் கலைஞருக்கு என்ன நிலைப்பாடு? அ.தி.மு.க. `புலிகளை ஆதரிக்க மாட்டோம்' என்கிறது. இவர் ஆதரிப்போம் என்கிறாரா? அப்படிச் சொல்லட்டுமே. சரி. ஈழத் தமிழர்களுக்காவது ஆதரவாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லையே? ஒருபக்கம் ஈழ மக்களை ஆதரிப்போம் என்கிறார், மறுபக்கம் ஆதரவுக் குரல் கொடுத்தால் `ராஜ துரோகம்' என்கிறார்.

ஒரே இயக்கத்திற்குள் பலரை ஒழிக்க முயன்று, அரசியல் லாபத்திற்காக பல கட்சிகளை இரண்டாக உடைத்த, உடைக்க முயன்ற இவர் சகோதர யுத்தம் பற்றிப் பேசுகிறார். ஆயுதம் கொடுத்து இலங்கைத் தமிழர்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசோடு இவர் கூட்டணி வைத்திருப்பதைவிட நான் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருப்பது ஒன்றும் குற்றமில்லையே?''

கடைசியாக ஒரு கேள்வி. அண்மையில் மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்துடன் இணைந்தது பற்றி....?

``அது அவர்களின் குடும்ப உறவு விவகாரம். அதுபற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் கருத்துக் கணிப்பு, மதுரை பத்திரிகை அலுவலக எரிப்பு, மூன்று ஊழியர்கள் கொலை, அழகிரிதான் குற்றவாளி என்ற சண்டையை வைத்து, சூரியன் தொலைக்காட்சி தி.மு.க.விற்கு விரோதமாகப் போய் விட்டது என்று பேசி பெரும் பணக்காரர்களிடம் பணம் வாங்கி, கட்சிக்காரர்களை விளம்பரம் செய்ய வைத்து, முப்பது நாட்களுக்குள் அனுமதி வாங்கி தனது குடும்பத்திற்காக இன்னொரு தொலைக்காட்சியைத் தொடங்கி கூடவே நான்கு சேனல்களையும் கொண்டுவந்த இந்த சாமர்த்தியம் இருக்கிறதே? கலைஞர் தவிர உலகத்தில் வேறு யாருக்கும் இந்த சாமர்த்தியம் வராது. சுயநலத்தின் அடிப்படையில் ஏற்படும் சாமர்த்தியம் இது.''

Tuesday, December 09, 2008

ஈழத்தை ஆதரித்து ஐ.டி.துறையின்ர் உண்ணாவிரதம்


ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்தகோரி தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு தகவல் தொழில்நுட்பத்துறை (I.T)இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வரும் சனிக்கிழமை (13.12.08) காலை 09:00 முதல் மாலை 06:00 வரையில் சென்னையில் கோயம்பேடு என்னும் இடத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

உண்ணாநிலைப் போராட்டத்துக்கான அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகின்றோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் அடைக்கலம் புகுகின்றனர்.

இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கின்றோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் நாளாந்தம் இறக்கின்றனர் அவர்கள்.

அடுத்த வேளை உணவு, KFC Chicken-ஆ அல்லது Pizza Hut-ஆ என்று நண்பர்களுடன் பேசுகின்றோம் நாம். நாளைக்காவது ஒருவேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கின்றனர் அவர்கள்.

பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கின்றோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கின்றனர் அவர்கள்.

சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கின்றோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கின்றனர் அவர்கள்.

நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் நாம்?

செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒருநாள் உண்ணாநிலை இருப்போம், வாருங்கள் நண்பர்களே! என அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இலக்குவணன் அவர்களை மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
lakshmanaraja@gmail.com


பின் குறிப்பு:
பழநெடுமாற்ன்,சுபவீ, காசிஆனந்தன் ,தாமரை மற்றும் பலர் வந்து உரைநிகழ்த்துகிறார்கள் ( ஈழத்தைப்பற்றியும் , தமிழ்நிலைப்பாடு்களும்,தேவையான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ...)
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009