Thursday, October 30, 2008

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள் - 2


இன்றைய நெருக்கடியின் அடிப்படைகள்

70 களில் உருவான நெருக்கடியைத் தொடர்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொண்ட முதலாளித்துவம், புதிய திட்டங்களை வகுக்கத்தொடங்கியது. 70 களில் ஏகாதிபத்திய நாடுகளில் ஏகபோக முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து வந்த அமைப்பு மயப்பட்டிருந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்கள், கூலியுர்வுக்கான தொழிற்சங்கப் போராட்டங்கள், ஒருங்கிணைந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் போன்றவற்றாலும் மார்க்சிய தத்துவத்தின் ஆதிக்கத்தாலும் திகிலடைந்து போயிருந்த ஏகாதிபத்திய அதிகார வர்க்கம் புதிய ஒழுங்கமைப்பு ஒன்றை முன்வைத்து தன்னை மறுபடி நிலை நிறுத்திக்கொள்வதில் வெற்றிகண்டது.

1. இலாபம் என்பதையே அடிப்படையாக் கொண்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை கூலியுயர்வுப் போராட்டங்களை நடாத்திவந்த ஒழுங்கமைக்கப்பட்ட மேற்குலக தொழிலாளிகளிடமிருந்து தப்பித்து வறிய நாடுகளில் மலிவான கூலியைத் தேடி நகரவாரம்பித்தது. இந்த நடைமுறைதான் கார்ல் மார்க்ஸ் கூறும் வேலையற்ற தொழிலாளர்களை உருவாக்கும் நடைமுறை வேலைத்திட்டமாக அமைந்தது.
இவ்வாறான தொழிலாளர் படையின் உருவாக்கத்தினால், பிரித்தானிய தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கட்டுபடுத்தப்பட்டது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக எண்ணை பிரித்தானிய லொறிச் சாரதிகளுக்கு 1922 இலிருந்து எந்த ஊதிய உயர்வுமே வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிடலாம். இத்தொழிலாளர்கள் வேலைனீக்கம் செய்யப்பட்டால் பிரதியீடு செய்யப்படுவதற்கு வேலையற்ற தொழிலாளர்படை ஒன்று தயாராகவுள்ளது. முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் இந்த நடைமுறையூடாக இன்னொரு மிகப்பெரிய மாற்றம் இயல்பாகவே நடந்தேறியது. இது தான் இன்றைய மீட்சியற்ற நெருக்கடிக்கு முதலாளித்துவத்தை நகர்த்தியது.

நெருக்கடியின் ஆரம்பம் என்பதே உற்பத்தி மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர்ந்ததிலிருந்து தான் உருவாகிறது.

உற்பத்தித் திறனுள்ள தொழிற்துறைகளெல்லாம் மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர்ந்ததன. இந் நகர்வின் விளைவாக கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்திசார் தொழிற்துறைகள், மின்னியற் தொழிற்சாலைகள், என்பன முற்றாக அழிந்துபோக, சிறிய உற்பத்தித் துறைகளும் சேவைத் துறையும், வங்கி மூலதனமும் மட்டுமே ஏகாதிபத்திய நாடுகளை, குறிப்பாக ஆங்கிலம் பேசும் நாடுகளில் மூலதன இயக்கததை செலுத்திக் கொண்டிருந்ததது. உதாரணமாக மின்னியற் துறையென்பது 90 களின் பின்னர் வேகமாக வளந்ததன் கூறாக, தகவற் தொழில் நுட்பம் விரிந்து பரவியது.


பிரித்தானியாவிலும் அமரிக்காவிலும் 80 வீதமானவர்கள் கணணிப் பாவனையாளர்களாகவும் அதனோடு பரீட்சயமுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால், HP, Dell போன்ற மிகப் பிரபலமான கணணித்தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி சார் தொழில்களெல்லாம் இந்தியா சீனா போன்ற நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

கணனிப் பொறிகளின் பொதுவாக எல்லா உபகரணங்களும் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட அவற்றின் பெரும் பகுதியான விற்பனை மட்டும் ஏகாதிபத்திய நாடுகளில் பணத்தைக் குவித்துக் கொண்டிருந்ததது.
இவாறு மலிந்த உழைப்புச் சக்தியூடாக குவிந்த மூலதனத்தின் அதிபதிகளாக ஐரோப்பிய-அமரிக்க முதலாளித்துவம் அமைய, அவற்றின் பாதுகாவலர்களாக இந்நாடுகளின் அரசுகள் திகழ்ந்தன. இந்த அரசுகளுக்கு தாம் சார்ந்த உள்ளூர் மக்களைத் திருப்திப்படுத்தவும், மூலதனத்தின் இயக்கத்தைப் பேணவும் ருவாக்கப்பட்டதே கடன் பொறிமுறை.
2. வங்கிகளின் ஊடான கடன் பொறிமுறை.

பங்குச் சந்தையில் முதலிடப்படும் பணத்தையும் சேமிப்புப் பணத்தையும் பொதுமக்களுக்கான கடனாக வழங்கும் நடைமுறையூடாக கடன் பெறுவோரிடமிருந்து வட்டிப்பணத்தை லாபமாகப் பெற்றுக்கொள்ளல் என்ற வியாபார இயக்குனிலைதான் ( Business dynamism) இந்தக் கடன் பொறிமுறை. இந்தக் கடன் வழங்கும் பொறிமுறையில் ஒரு உச்ச நிலைதான், வீட்டுக் கடன் திட்டமாகும். வீட்டுக் கடன் வட்டி வீதம் குறைவடைய, வீடுகளைப் பல தேவைகள் கருதிக் கொள்வனவு செய்யும் போக்கு அதிகரித்தது.

இதனால் வீடுகளின் கேள்வி(Demand) அதிகரித்தது. இதனால் வீடுகளின் விலை அதிகரித்தது. அமரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் இதன் விலை 10 வருடங்களுக்குள் சராசரியாக 60 வீதமாக அதிகரித்தது. இதனால் வீட்டுச் சந்தையில் முதலிடும் நிறுவனங்களின் தொகையும் கடன் வழங்கும் வங்கிகளின் தொகையும் அதிகரித்தது. மறுபுறத்தில் மூலதத்தின் இயக்கம் (Dynamism of capital) அதிகரிக்க முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறை பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறான முதலாளித்துவக் கடன் பொறிமுறையூடாக:

1. மூலதனத்தின் சுற்று முறையும் முதலாளித்துவமும் பாதுகாக்கப்பட்டது.

2. மூன்றாமுலக நாடுகளை நோக்கிய முதலீடுகளூடான இலாபம் மேலும் பெருகியது.

3. ஐரோப்பியத் தொழிலளர்களின் சம்பள உயர்வு குறித்தளவு உறுதி செய்யப்படிருந்தாலும் கடன் தொகைக்கான வட்டியாகவும் வரியாகவும் அது மறுபடி அறவிடப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் உற்பத்தித் திறன் சார் தொழிற்துறைகளில் முதலீடுகளே அற்றுப்போயிருப்பதாகக் கூறும் பொருளியலாளர் மைக்கல் ரொபேட், வீட்டுக்கடன் திட்டம் மட்டுமே பொருளாதாரத்தை இயக்கும் பிரதான காரணியாக அமைகிறது என்று 24/06/2008 இல் வெளியான தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஆக, வேறு உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்துறைகள் மூன்றாமுலக நாடுகளை நோக்கி உலக மயப் பொருளாதாரத் திட்டத்தினூடாக நகர்ந்துவிட, கடன் பொறிமுறையில் இயங்கிக் கொண்டிருந்த அமைப்புமுறை சரிந்து விழுந்துகொண்டிருக்கிறது. மூன்றாமுலக நாடுகளில் உற்பத்திசெய்து, லாபப் பணத்தை மறுமுதலீடு செய்வதனூடாக இயங்கிக் கொண்டிருந்த முதலாளித்துவம் மாற்றுவழிக்காகத் திண்டாடிக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு உருவான உற்பத்தித் திறனற்ற கொள்வனவு மனோபாவமுள்ள சமூகமானது, பிரித்தானியாவில் மட்டும் ஒவ்வொரு குடும்பத்தையும் சராசரியாக 59,350 ஸ்ரேளிங் பவுண்ட் கடன் தொகையைச் செலுத்த வேண்டிய கடனாளியாக மாற்றியுள்ளது.

மொத்தக் கடன் தொகையானது 10.6 பில்லியன் ஸ்ரேளிங் பவுண்களாக கடந்த 12 மாதங்களுக்குள் அதிகரித்துள்ளது.2007ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சராசரி தனிமனித ஊதியம் 1338 பவுண்களாயிருக்க சராசரி வாழ்க்கைச் செலவு இதற்குச் சற்று அதிகமானதாக அமைந்திருந்தது.
இந்நிலையில் அதிகரிக்கும் கடனை மீளச் செலுத்த முடியாத வாழ்க்கைசெலவின் தொடர்ச்சியான அதிகரிப்பையும் மேற்குறித்த வேலையில்லாத் திண்டாட்டதின் அதிகரிப்பையும் கொண்டிருந்த மேற்கத்திய வாழ்வு முறை, கடன்வழங்கிய வங்கிகளுக்கு பெருத்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. 90 பாகையில் விலையேறிக் கொண்டிருந்த வீடுகளை விட்டுவிட்டு கடனாளிகளான பொதுமக்கள் நடுத்தெருவுக்கு வர, வீடுகளின் விலை சரிய வாரம்பித்தது.

இவற்றையெல்லாம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த பெருமுதலாளிகளும் நிறுவனங்களும், வங்கிகளிலிருந்து தமது பங்குகளை மீளப் பெற்றுக்கொள்ள, வங்கிகள் சரியவாரம்பித்தன.
2006 ஆம் ஆண்டிலிருந்தே அமரிக்காவில் வங்கிகளில் இழப்புக்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தாலும் அதன் பெரிய அளவிலான இழப்பு 2008 இலிருந்தே ஆரம்பித்த்து. சேமிப்பு வங்கிகள் ஆரம்பத்தில் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக, பின்னதாக பிரதான பெருந்தெரு வங்கிகளும் நஷ்டத்திக்குள்ளாகி வங்கிகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

என்ன செய்யப் போகிறோம்?

முதலாளித்துவம் இந்தநெருக்கடியைத் தற்காலிகமான கடன்நெருக்கடி என்ற மாயையைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பின் மீது ஏற்படக்கூடிய அவநம்பிக்கையை தவிர்க்கும் எல்லாப் பிராயத்தனங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருக்கிறது.
இன்று இயங்கிக் கொண்டிருந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தினது இயக்கம் நின்று போய் விட்டது. உற்பத்தித் திறனுள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியற்றுப் போன நிலையில் வேறு வகையான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை முன்வைக்க முடியாத இருப்பிலுள்ள அமைப்பு, புதிய திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான காலத்தை வங்குவதற்காக மட்டும், தற்காலிகத் திட்டங்களை முன்வைக்கின்றன.

700 பில்லியன் டொலர் சாதாரண மக்களின் வரிப்பணத்தை வங்கிகளுக்குத் தாரைவார்த்த அமரிக்க அரசாங்கமோ, 50 பில்லியன் இழந்த பங்குகளைத் தனதாக்கிக் கொண்ட பிரித்தானிய கோர்டன் பிரவுண் அரசோ மேலதிகமான திட்டங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

பெரும் கோப்ரேட் நிறுவனக்களிடம் குவிந்து போயிருக்கும் மூலதனத்தைப் பற்றி இன்னும் மூச்சுக்கூட விட முடியாத நிலையில், கட்டுப்பாடான முதலாளித்துவ முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் உலகின் வங்கிகளிடையேயான ஒத்துளைப்புப் பற்றையும் பேசிக்கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகள், முன்னைய பொருளாதார நெருக்கடிகளின் போது வறிய நாடுகளைச் சுரண்ட புதிய திட்டங்களை வகுக்க முனைகின்ற போதும், அது இலகுவானதல்ல. சீன முதலாளித்துவத்தின் பாய்ச்சல் நிலை வளர்ச்சியென்பதும், மூன்றாமுகல நாடுகளில் பகுதியான உற்பத்திசக்திகளின் நவீன மயப்படுத்தலும் முன்னைய நேருக்கடிகளின் புறச் சூழ்னிலைகளல்ல.
அமரிக்கா தலைமையிலான பொருளாதார ஏகபோகம் முடிபுக்கு வருகிறது.

இது மீண்டும் தன்னை சுதாகரித்துக் கொள்ள முயலும். இங்கு இடது சாரிகளின் மாற்று வழியென்ன? பொருளாதார ஏகபோகம், அதிகாரம் என்பன மேற்கிலிருந்து கிழக்க்குக்கு இடம் பெயர்வதையும், மேற்கு முதலாளித்துவத்தின் வீழ்ச்சியையும் கார்ல் மார்க்ஸ் முன்னமே சொல்லிவிட்டார் என்று பெருமையடித்துக் கொண்டால் மட்டும் போதுமானதா?

Bibliography: Britain: The housing tsunami: Michael Robert. 2008 The politics of financial service revolution: Michael Morgan. 1991 The Globalisation Decade: A critical Reader : AAKAR BOOKS. 2006 Financial Time UK The New Paradigm for Financial Markets: The Credit Crisis of 2008 and What It Means : George Soros.2008

பொருளாதார சுனாமி : மூழ்கும் வல்லரசுகள் - 1



உலகின் சந்து பொந்துக்களிலெல்லாம் தனது அதிகாரத்தை நுளைத்து, அதற்குரிய சமூக நீதியையும் கட்டமைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்திவந்த அமரிக்காவும் அதன் பங்கு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இன்று பதட்டமும் அதிர்ச்சியுமடைந்து போயிருக்கின்றன. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையில், ஐரோபிய-அமரிக்கத் தலை நகரங்களிலெல்லாம் நாளிகைக்கு நாளிகை நிபுணர்கள் புடைசூழ கூட்டம்போட்டுப் திட்டங்கள் வகுத்துக் கொள்கிறார்கள்.

வறிய மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாக ராட்சதக் கோப்ரேட் கம்பனிகளைக் காப்பாற்ற வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத தோல்வியென்பது அதிகமாகக் கடன் வாங்கியதாலும் அதிகமாகச் சாப்பிட்டதாலும் ஏற்பட்டதென்று வறிய மக்களின் தலையில் பழியைப் போட்டுவிட்டு வறிய மக்களைச் சுரண்டி வாழ புதிய திட்டங்களை வகுக்கவாரம்பித்து விட்டார்கள்.


ஏகாதிபத்தியம் என்பது அதிகார வர்க்கத்திற்குச் சேவை செய்யும் அமைப்புமுறை. ஜனநாயகத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மக்களைச்சுரண்டி வாழும் தன்மைகொண்ட இந்த அமைப்புமுறை நிலைபெறாது. என்ற ஜோன் ஹொப்சனின் கூற்று இன்றைக்கு மறுபடி நிரூபணமாகிறது.


வியாபாரம் செய்வதற்காக மட்டுமே ஏனைய நாடுகளை ராணுவ வன்முறையூடாக அடிமகளாக்கி காலனித்துவ ஆட்சி நடாத்திய வல்லரசு நாடுகள், முதலாமுலக யுத்தத்திற்குப் பின்னதாக வறிய நாடுகளைச் சுரண்டுவதற்காக முதற்தடவையாக தமது அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை மறு ஒழுங்கமைப்புச் செய்துகொண்டன. நிலப் பிரப்புத்துவ சமூக அமைப்புமுறை போன்ற முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த அமைப்பு முறைகளைப் போலல்லாது முதலாளித்துவ அமைப்பு தோன்றிய மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பல தடவைகள் சரிந்து விழுந்திருக்கிறது.

அமைப்பியல் நெருக்கடி

1970 களின் ஆரம்பத்தில் உருவாகியிருந்த பொருளாதார நெருக்கடியின் போதே இன்று உடைந்து சரியும் நவ-தாராளவாதக் கொள்கை தொடர்பான படிமங்களும் கட்டமைகளும் உருவானது. 70 களின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு உருவாக்கப் பட்ட ஒழுங்கமைப்பு முறையே இந்த நவ-தாராள வாதக் கொள்கையும் அதனைத் தொடந்துவந்த உலகமயமாதலுமாகும். உலக மயமாதல் மட்டும் தான் உலகத்தின் விடிவெள்ளி எனப் பாராட்டி மிகச்சில மாதங்களுகுள்ளேயே இத்தாலிய நிதியமைச்சர் ஜூலியோ திரிமொந்தி “உலகமயமாதலின் அபாயம்” என்ற நூலைப் எழுதியிருக்கிறார்.

70 களில் மேற்கத்திய முதலாளித்துவத்திற்கு மிகவும் அடிப்படையான எதிர் சக்தியாக அமைந்தததும் பயவுணர்வைக் கொடுத்ததும் சோசலிச நாடுகளாக அமைய, ஐரோப்பிய அமரிக்க தொழிலாளர் வர்க்கத்தைப் பலவீனப்படுத்தி அதிக இலாபத்தை பெறும் நோக்கிலேயே மூலதன உடமையாளர்கள் தமது முதலீடுகளை மூன்றாமுலக நாடுகளை நோக்கி நகர்த்தவாரம்பித்தன.
நவதாராள வாதக் கொள்கை அல்லது உலகமயமாதலுக்கு மேற்குலகத் தொழிலாளர்கள் கொடுத்த விலைகளில் ஒன்று வேலையிலாத் திண்டாட்டமாகும். இதனால் தேவையானளவு நிலுவைத் தொழிலாளர் (Reserve army of labour) படையை தத்தமது நாடுகளில் உருவாக்கிக் கொண்ட முதலாளித்துவம், வேலையற்ற தொழிலாளர்களை திருப்திப்படுத்த சமூக உதவித் திட்டங்களை அதிகப்படுத்தியதுடன், அச்சமூக உதவித்திட்டங்களையும், வறிய நாடுகளிலிருந்து சுரண்டிய பணத்தில் அமுல்படுத்திக் கொண்டது.


1970 களில் அமைப்பியல் நெருக்கடி (Structural Crisis) என வர்ணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி 80 களின் ஆரம்ப்பம் வரை நீடித்தது. அருகிப்போன தொழில் உற்பத்தித் திறன், குறைவடைந்த வளர்ச்சி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பொருளாதார நிலையற்ற தன்மை (Macro Instability - Boom and recessions) என்பனவையே அமரிக்கவின் ஜனாதிபதியாகவிருந்த ரொனால்ட் ரீகன் மற்றும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த மாக்ரட் தட்சர் ஆகியோரின் தலைமையில் இன்று உலகமயமாதல் என்ற, நெருக்கடிககு உள்ளாகியிருக்கும் பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்ட தென்பதை குறித்துக் காட்டும் ஜோர்ஜ் சொரஸ் இன்றைய நெருக்கடியென்பது முற்றிலும் வேறுபட்ட இருப்பிலுள்ள முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் தீர்க்க முடியாத பல அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.


ஏறத்தாள 20 வருடங்களில் உலகின் மூலைமுடுக்கெல்லாம் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கிராமப்புறங்களாகிவிடுமோ என அச்சம் கொள்ளும் அளவிற்கு அளவிற்கு இந்த உலகமயமாதல் பரந்து விரிந்துவிட்டது.
ஏகதிபத்தியத்தின் உச்ச வடிவமான இந்த உலகமயமாதலே சரிந்து விழுகிற நிலைக்கு வந்தபின்னர் இனிமேலும் ஏகாதிபத்திய அமைப்பு முறையும் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நாடுகளும் இன்னும் நிலைக்க முடியுமா என்ற கேள்வி பொருளியியல் வல்லுனர்களிலிருந்து சாதாரண மக்கள்வரை பதிலுக்காக அலசப்படுக்கொண்டிருக்கிறது.


ஒவ்வொரு தடவையும் முதலாளித்துவம் பொறிந்து விழும் போதும், 70 களில் ஏற்படுத்தப்பட்ட நவ-தாராளவாதம் என்ற புதிய ஒழுங்கமைப்பைப் போல புதிய ஒழுங்கமைப்புகளூடாக அது மறுபடி மறுபடி தூக்கி நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தடவை நிலமை முற்றிலும் மாறுபடுகின்றது.
இனிமேல் இன்னொரு மறு ஒழுங்கமைப்புச் சாத்தியமில்லை என்ற நிலை தோன்றிவிட்டதைப் பல முதலாளித்துவப் பொருளியல் வல்லுனர்களே ஒத்துக் கொள்கிறார்கள். ஐரோப்பாவினதும், அமைக்காவினதும் ஆதிக்க வாழ்வுக்காலம் இன்னும் சில குறுகிய வருடங்களே என பலர் எதிர்வுகூற ஆரம்பித்துவிட்டார்கள்.

கார்மார்க்ஸ் சொன்னபடி..

ஆனால் 160 வருடங்களுக்கு முன்னமே கார்ல் மார்க்ஸ் இந்த நெருக்கடியை எதிர்வு கூறிய போது அவர் பயங்கர வாதியாகவும், குழப்பவாதியாகவும் சித்தரிக்கப்பட்டார்.

‘Trajectories a la Marx’ என்று பிரபலமாக அறியப்பட்ட சொற்தொடர்களூடாக குறித்துக்காட்டப்படும் கார்ல் மார்க்சின் பொருளியல் சிந்தனை கூறும் விசைப் புலம் என்பது முதலாளித்துவம் நீண்ட காலத்திற்கு நிலைபெற முடியாது என்பதற்குரிய காரணத்தை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவுபடுத்துகின்றது.

இந்தத் தர்ககீக நிறுவலிலிருந்துதான் கார்ல் மார்க்ஸும் ஏங்கல்சும் முதலாளித்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து கம்யூனச சமுதாயம் உருவாகும் என்ற முடிபுக்கு வருகின்றனர்.

விஞ்ஞான பூர்வமான சமூகவியலை உலகிற்கு அறிமுகப்படுத்திய கார்ல் மார்க்ஸை இன்று முதலாளித்துவப் பத்திரிகைகள் மட்டுமல்ல மதகுருக்கள் கூட நிலைவுகூருகின்ற நிலை உருவாகிவிட்டது. “கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் முதலாளித்துவ பொருளியல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது.” என்று பிரித்தானிய கார்டியன் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. “கம்யூனசத்தின் நவீன தந்தையான கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம் பற்றி விமர்சித்தது பகுதியாகச் சரியானதே” என்கிறார் கன்பரி மதகுரு.

மூலதனத்தை, சொத்துக்களைப் பொது உடமையாகவல்லாமல் தனி உடமையாகப் பேணுவதென்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சாராம்சமாக அமைய, மூலதனத்தின் முகாமைத்துவம் என்பது இன்னொரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.

இவை இரண்டையும் தவிர, பெரும் பொருளாதாரக் கூறுகள் (Macro economy) மூலதனத்தைத் தனியுடமையாகப் பேணுதலில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
1. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஓரிடத்தில் -தனி மனிதர்களிடமோ, பெரும் கம்பனிகளிடமோ- மூலதனம் குவியும் போது, அதனைப் சேமிக்கவேண்டிய தேவை அதன் உடமையாளர்களுக்கு அவசியமாகிறது. இதனூடாக கடன் பொறிமுறை(Credit Mechanism) உருவாகிறது. இவ்வாறான கடன் பொறிமுறை என்பது, வங்கிகளூடான பண வினியோகத்தினூடாக நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறான பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத எல்லையற்றதாக இயல்பாகவே உருவாகிவிடுவதால் இலாபத்தினூடாகக் குவிந்த மூலதனத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது என்று டொமிக் லேவிஸ் மற்றும் ஜெரா டுமினெல் ஆகியோர் தமது ” நவதாரளவாதத்தின் இயல்பும் முரண்பாடுகளும்” என்ற தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியின் முதலாவது அடிப்படையே இதிலிருந்து தான் உருவாகிறது.

2. கார்ல் மார்க்ஸ் தெளிவாகக் கூறுவது போல உழைப்பு சக்தியை வாங்குதல் என்பது முதலாளித்துவத்திற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக அமைகிறது. ஊதியத்தின் விலையைத் தீர்மானிப்பதற்கு காலத்திற்குக் காலம் தொழிலாளர்படையின் மீளமைப்பு (periodic replenishment of army of labour) என்பதே மையப் பகுதியாக அமைகிறது. இந்த மீளப்பினூடாக வேலையற்ற ஒரு பகுதித் தொழிலாளர்களை உருவாக்குவதனூடாக ஏனையோரின் ஊதியத்தின் உயர்வைத் தடுப்பதற்கும் அதனூடாக இலாபத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பைப் பேணுவதற்கும் முதலாளித்துவம் மறுபடி மறுபடி திட்டங்களை வகுத்துக் கொள்ளும்.

இந்த இரண்டு முக்கிய முதலாளித்துவப் பொறி முறையின் அடிப்படைக் கூறுகளே 2008 இல் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடியினதும் முதலாளித்துவத்தின் சரிவினதும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.
70 களில் உருவான பொருளாதார நெருக்கடின் போது உலகமயமாதல் என்ற புதிய ஒழுங்குமுறை மூலதனத்தை சுதந்திரமாக உலாவவிட்டது. இதனால் வளர்ச்சியடைந்த ராட்சத வியாபார நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நகரவாரம்பித்தன. இதனால் தம்மை மேற்குலகக் வியாபார நிறுவனங்கள் மறுபடி வளர்ச்சியடைய ஆரம்பித்தன. பணம் பெருகியது. மூலதனம் குவியவாரம்பித்தது.


இன்றைய நெருக்கடியின் அடிப்படைகள் நெக்ஸ்ட்

Wednesday, October 15, 2008

வங்கி திவாலானாலும் உங்க பணத்தை பாதுகாப்பது எப்படி?


பொதுவா ஒரு வங்கி திவாலானால் அதில் உள்ள பணம் அனைத்தும் அவ்வுளவு தான் என்ற தவறான ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் நிஜம் அல்ல. ஏனெனில் வங்கிகள் அனைத்தும் அவை பெறும் வைப்பு நிதிக்கு காப்பீடு செய்து இருக்கும் (புரியற மாதிரி தமிழல சொல்லணுமுன்னா நீங்க bankல டெபாசிட் செய்யும் பணத்தை வங்கிகள் Insure செய்து இருக்கு.). ஆனாலும் இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது என்னானா நீங்க முதலீடு செய்து இருக்குற ஒரு லட்ச ரூபாய்க்கு தான் அவர்கள் இந்த காப்பீட்டை எடுத்து இருப்பாங்க (இது தான் RBIயோட limit).எனவே நீங்க எவ்வுளாவு போட்டு இருந்தாலும் ஒரு லட்சம் மட்டும் தான் திரும்ப வரும், இது வட்டியையும் சேர்த்து.

உதாரணமா நீங்க வங்கி Xயோட அண்ணாசாலை கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, வேளச்சேரி கிளையில் ஒரு 50 ஆயிரம் fixed deposit, திருச்சி கிளையில் ஒரு 25 ஆயிரம் saving accountல போட்டு வெச்சியிருக்கீங்கன்னு வையுங்க. ஒரு நாள் வங்கி X திவால் ஆயிடுது. ஆனால் அந்த வங்கி செய்து இருக்கிற காப்பீட்டின் காரணமாக நீங்க போட்டு வெச்சியிருக்கிற 1.25 லட்சத்துல ஒரு லட்சம் திரும்ப கிடைத்துவிடும். ஆனால் 25ஆயிறத்தை நீங்க இழக்க நேரிடும் இந்த மாதிரி நிலைமையை தவிர்க்கவும் ஒரு வழி இருக்கு.

வங்கிகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது மொத்த பணத்தையும் ஒரே வங்கியில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒரே வங்கியில் மொத்த பணத்தையும் முதலீடு செய்ய வேண்டி வந்தால், அதை joint அக்கவுண்டாக முதலீடு செய்வது உசிதம். அதாவது மேல சொன்ன உதாரணத்தையே எடுத்துகலாம்.
50ஆயிரம் + 50 ஆயிரம் + 25 ஆயிரம் என்று ஒருவர் பெயரில் மூன்று தனித்தனி கணக்குகளில் முதலீடு செய்து 25 ஆயிரத்தை இழப்பதை காட்டிலும். அதே முதலீட்டை மூன்று தனித்தனி joint accountஜ திறந்து கொள்ளவும் எப்படின்னா முதல் accountஇல் உங்களை primary ஆகவும் இரண்டாவது கணக்கில் உங்கள் மனைவியை primary ஆகவும் மூன்றாவது கணக்கில் உங்க பசங்களை primary ஆகவும் நீங்க primaryயாக உள்ள கணக்கை தவிர்த்து மற்ற கணக்குகளில் உங்களை secondaryஆகவும் வைத்து கணக்கை துவங்கிக்கொள்ளவும். மேலே சொன்ன மூன்று வங்கிகணக்கிலும் நீங்க இருந்தாலும் மற்ற இரண்டு கணக்குகளில் primaryயாக வேறு ஒருவர் இருக்கும் காரணத்தினால் இவை மூன்றும் தனித்தனியே காப்பீடு செய்யப்படும்.இதன் மூலம் ஒரே வங்கியில் மூன்று லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து கவலையின்றி இருக்கலாம்.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் இருப்பது போல அமெரிக்காவில் இது ஒரு லட்ச டாலர் (சமீபத்தில் இதை 2.5 லட்ச டாலராக உயர்த்தி உள்ளதாக கேள்வி யாருக்காவது தெரியுமா?) வரை முதலீடுகளுக்கு காப்பீடு உண்டு. இங்கே இருக்கும் படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை.

Monday, October 13, 2008

அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏன்? நடந்தது என்ன





கடந்த 15 நாட்களாக பங்குச்சந்தை பற்றிப் பேசாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. காரணம், சிறிய அளவு சேமிப்பையும் முதலீடாக்கிய ஒரு சாதாரண நபரும் இந்த சந்தை வீழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கடந்த இரு ஆண்டுகளில் பங்குச்சந்தையில் முதலீடு என்பது ரேஸ் குதிரைப் பந்தயத்தில் முதலீடு போல பெரிதாகப் பேசப்பட்ட விஷயம்.





பங்குச்சந்தை
குறியீட்டெண் 10 ஆயிரத்தை தாண்டியபின் மடமட வென அதிகரித்து, 15 ஆயிரத்தை தாண்டியதும், அதில் முதலீடு செய்யாமல், வங்கி நிரந்தர வைப்பில் பணத்தைச் சேமித்தவர்கள் அப்பாவிகளாகக் கூட காணப்பட்டனர்.இன்று பங்குகள், பங்குச்சந்தையின் செயல்கள், முதலீட்டில் அதன் தாக்கம் ஆகியவை பற்றி அறிந்தவர்களை விட அறியாத பலரும் ஆர்வத்தில் முதலீடு செய்துவிட்டு, தற்போதைய சந்தையின் அதலபாதாள வீழ்ச்சியில் குன்றிப் போய் இருக்கின்றனர்.


இந்நிலைக்கு அமெரிக்காவின் போக்கே காரணம். வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற கருத்தை நோக்கி செயல்படும் பொருளாதாரத்தை அங்கே ஊக்குவித்தனர். தவிரவும், எல்லாவற்றையும் நுகரும் கலாசாரம் என்ற நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன் வாங்கிய வீடுகள் தற்போது மும்மடங்கு வரை விலை அதிகரித்தது.இந்த வீட்டு வசதிக்காக வங்கிகள் கடன் தரும் நடைமுறையில் அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறை பெரிய ஆபத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

கடன் பெற்றவர்கள் :
ஏதோ லேமென் வங்கி வீழ்ச்சி என்று ஆரம்பித்த கதை, 70 ஆயிரம் கோடி டாலரை அரசு தரமுன்வந்தும் அமெரிக்க நிலைமையை மோசமாக்கியிருக்கிறது.உதாரணமாகச் சொன்னால், மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் டாலரில் ஒரு வீடு (அன்று அதன் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம்) வாங்கினால், அமெரிக்காவில் அதற்குப் பெரிய ஆதாரம் ஒன்றும் கேட்காமல் கடன் தந்துவிடும் வங்கி.முகவரிக்கான அத்தாட்சி கூட இல்லாமல் கடன் பெற்றவர்கள் உண்டு. கிரெடிட் கார்டு கலாசார வேகம் அப்படி. வீடு வாங்கினால் அது அதிகவிலைக்கு எதிர்காலத்தில் விற்கப்படும் என்ற கருத்தில், அமெரிக்காவில் வீடு வாங்கும் மோகம் அதிகரித்தது. அந்தக் கடன்பத்திரங்களை அப்படியே அமெரிக்க வங்கிகள
அதிக லாபம் தரும் கடன் உத்வி வசதிகள்' என்று கவர்ச்சிகரமாகப் பெயரிட்டு மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றன.இதில் திவாலான அமெரிக்க நிதிநிறுவனம் லேமென் வாங்கிக்குவித்த கடன்பத்திரங்கள் ஏராளம். இந்தக் கடன் பத்திரங்கள் பல்வேறு வங்கிகளுக்குக் கைமாறி, அதற்கு கமிஷன் பெற்றவர்கள் ஏராளம். நீர்க்குமிழி போல இந்த வர்த்தகம் உலகெங்கும் வங்கிகளிடம் பரவியது.ஆனால், கடந்த ஆண்டு வீட்டு விலை இறங்கத் தொடங்கியது. தவணை கட்ட வேண்டியவர்கள் படுத்து விட்டனர்.
நிறைய வீடுகளை விற்க முன்வந்தனர், கிடைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்க முயன்றனர். ஆனால், வாங்குவதில் அதிக வேகம் இல்லை.அதேசமயம், அதிகலாபத்தில் இந்தப் பத்திரங்களை விலைக்கு வாங்குவதை லேமென் முதலிய நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டன. அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வங்கிகள் நிதிப்புழக்கம் இன்றி முடங்கின. பத்திரங்களைப் பெற்று கணிசமான வட்டிக்குப் பணம் தரும் வங்கிகளின் சாமர்த்தியம் முடிவுக்கு வந்தது. தங்களிடம் உள்ள ஆஸ்திமதிப்பு குறைந்ததும் ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வழக்குகள் தொடர்ந்தன.


அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் தடுமாறின. இது ஆசியாவுக்கும் பரவி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த "சப்பிரைம்' பிரச்னை இன்று உலகையே நிம்மதியில்லாமால் ஆக்கி விட்டது.முடிவில் 70 ஆயிரம் கோடி டாலரை அமெரிக்க அரசு தர வேண்டியதாயிற்று; உழைத்துச் சேமித்தவர்கள் பணத்தை அழித்து விட்டது. பொதுவாக ஒருவர் கடன் பெற்று வீடு வாங்கினால் அது சொத்து அல்ல; பொருளாதார சுமை. அதே போல கிரெடிட் கார்டில் மளிகைச் சமான்கள் வாங்கினால் அது சுமை; சுகம் அல்ல

ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசை :
பணக்காரர்கள் தங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்க மாட்டார் கள், அதைப் பெருக்கு வழிகாண் பார்கள். மாறாக, ஸ்டாக் புரோக்கரிடம் போனில் பேசி பங்குகள் வாங்கினால் அது பணமரமாகக் காய்க்கும் என்றால் அவ்வளவு தான்! அந்தப்பாடத்தை இப்போது அமெரிக்க அனுபவத்துடன் பலரும் கற்று வருகின்றனர். நல்ல வேளையாக, "சப்பிரைம்' நடைமுறையை இந்தியாவில் பின்பற்றவில்லை.இன்று பங்குச்சந்தை அதலபாதளத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசையால் ஏற்பட்ட பீதி. தீபாவளி கொண்டாடுவேன்' : மும்பை ஸ்டாக் புரோக்கர் ஜுன்ஜுன்வாலா வெளிப்படையாக, "பங்குச்சந்தையில் 20 ஆயிரம் வரை புள்ளிகள் உயரும் என்று நான் கணிக்கவில்லை, ஆபத்தில்லா முதலீடு செய்தவர்கள் நன்றாக வரும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள், "மேலும் தீபாவளிக்கும், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல, பேச வேண்டாம். நான் நன்றாகவே வழக்கப்படி தீபாவளி கொண்டாடுவேன்' என்கிறார். அப்படி எத்தனை ஸ்டாக் புரோக்கர்கள் இனிக் கூறப்போகிறார்கள் என்பது கேள்வி தான்.


நெம்புகோல் தத்துவம்:
150 சதவீத லாபம் எப்படி வரும்?: அமெரிக்காவில், 2003ம் ஆண்டு வட்டிவீதம் 1 சதவீதம் என்று ஏற்பட்டதிலிருந்து வீட்டுக்கடன் என்பதில் வந்த பல்வேறு நடைமுறைகள் இன்று அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நிறுவனங்களைக் கலக்குகின்றன.ஏதோ ஆதாயம் வரும் என்று எண்ணி, கையில் இருக்கும் மூலதனத்தை இழப்பது சரியல்ல; ஆனால், கையில் மூலதனமே இல்லாமல் நடக்கும் பரிவர்த்தனைகள், அதற்கான நடைமுறைகள் இப்போது உலகம் முழுவதும் எல்லாரையும் அச்சப்பட வைத்து விட்டது. ஒரு சிறிய உந்து சக்தியை வைத்து பெரிய பாறாங்கல்லைக் கூடப் புரட்டலாம் என்பது நெம்புகோல் தத்துவம், இது இயற்பியலில் உள்ளது


ஒருவர் 1,000 ரூபாயை சேமிப்பில் போட்டு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி என்றால், அது ஆண்டு முடிவில் 1,150 ரூபாயாக உயரும். ஆனால், கையில் 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு மேலும், 9,000 ரூபாய் கடன் வாங்கி பின் மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் எப்படி? அந்த முதலீட்டிற்கு ஆண்டு இறுதியில் வட்டி 15 சதவீதக் கணக்கில் பார்த்தால், அசலுடன் சேர்த்து 11 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.பணம் வாங்கியது உறவினரிடம் என்றால், வாங்கிய அசலை மட்டும் திரும்பக் கொடுத்துவிட்டால், எந்தவித முயற்சியும் இன்றி 2,500 ரூபாய் கிடைக்கிறது. அதில் முதலில் கையில் வைத்திருந்த அசல் 1,000 ரூபாய் மட்டுமே என்பதை நினைத்தால் ஆச்சரியம் அல்லவா? அப்போது 1,000 ரூபாய்க்குக் கிடைத்தது 1,500 ரூபாயா? நினைத்தால் மலைப்பாக இருக்கும். இது, 150 சதவீத லாபம்.இப்படி லாபம் கிடைக்காமல் 15 சதவீத வட்டியும் காற்றில் பறந்து விடுகிறது என்றால், அந்த நிலையில் கிடைப்பது 8,500 ரூபாய் மட்டுமே.
உறவினரிடம் வாங்கிய 9,000 ரூபாயிலும் 500 இழப்பாகி விடுகிறது. கையில் வைத்திருந்த 1,000 ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது. இப்படித்தான், "சப்பிரைம்' கடன் பத்திரங்கள் லாபம் கிடைக்கும் என்று பல்வேறு முதலீடுகளாக மாறி இன்று, "வால்ஸ்டிரீட் மட்டும் அல்ல, உலகையே கலக்குகிறது. இதில் ஒரு நல்ல அம்சம். இந்தியாவில் உள்ள வங்கி ஏதும் இந்த நிதிச்சுழலில் சிக்காததால், அதில் சேமிக்கப்பட்ட டிபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை

Friday, October 10, 2008

தீபாவளி கொண்டாட்டம்- கிரெடிட் கார்ட் திண்டாட்டம்..!


அன்பார்ந்த நண்பர்களே!. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...


1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத் தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத் தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாகப் படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாகத் தோன்றினால் உடனடியாக வங்கிக்குப் புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளைக் களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்குப் புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களைத் தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையைச் செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதைத் தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரைப் பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனைப் பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத் தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் ‘ஸ்வாகா’ செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத் தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.


18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை நுகர்வோர் நலன் ( http://www.nukarvor-nalan.blogspot.com) என்ற வலைப்பூவில் பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)

- சுந்தரராஜன்

Tuesday, October 07, 2008

எந்திரன்: கோவா படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார்!


இங்கே எந்திரன் – தி ரோபோ படப்பிடிப்புக்காக கோவாவில் முகாமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, படப்பிடிப்பு இடைவேளையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை, சூப்பர் ஸ்டாரின் அதி தீவிர ரசிகர் ஒருவர் கோவாவில் காத்திருந்து படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.
நண்பர்களே… உலகில் நீங்கள் எத்தனையோ சிறந்த நடிகர்களைத் திரையில் பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள்!
படங்களை ஒரு முறை பாருங்கள். இந்த சூரியப் பார்வைக்கு நிகராகுமா மற்ற நட்சத்திரங்களின் மினுக்கல்கள்!


படத்தை பெரிதுபடுத்தி பார்க்க படத்தை கிளிக்க்கவும்



Monday, October 06, 2008

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா பார்ட் -- இரண்டு


2001இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் அல்காய்தாவால் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு விமானப் போக்குவரத்து, சுற்றுலா என்று பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதை ஈடுகட்ட ஈராக்கை ஆக்கிரமிப்பு செய்தது அமெரிக்கா. இதனால் போர்தளவாட உற்பத்தியும், எண்ணெய் தொழிலும் அபராமாக இலாபம் சம்பாதிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அப்படி ஒன்றும் நடந்து விடவில்லை. ஈராக் போர் அமெரிக்காவின் பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது.

இந்நிலையில் உள்நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் திறனை அதிகப்படுத்த கடன் என்ற போதையை நிபந்தனைகள் இல்லாமல் நிதி நிறுவனங்கள் மூலம் அளித்தார்கள். ஏற்கனவே ஆளாளுக்கு பத்து கடன் அட்டைகள் வைத்திருக்கும் அமெரிக்காவில் இந்த புதிய கடன் வெள்ளமெனத் திறந்து விடப்பட்டது. கொஞ்ச நாளைக்கு எல்லா அமெரிக்கர்களும் தின்று தீர்த்தார்கள். முக்கியமாக வீட்டின் அடமானத்தை வைத்து வாங்கப்பட்ட கடன்கள் பல கைககள் மாறி கடன் குட்டிகள் போட்டு பண செயலாக்கத்தை பன்மடங்காக்கியது. இறுதியில் கடன் வசூலிக்கும் போது நிபந்தனையில்லாத கடன்களை வசூலிக்க முடியவில்லை. வீட்டு மதிப்பும் பாதாளத்தில் இறங்கியது. இதைச் சரிக்கட்ட நல்ல கடன், கெட்ட கடன் எல்லாவற்றையும் கலந்து ஒரு காக்டெயில் மாதிரி ரெடிபண்ணி நிதி நிறுவனங்கள் பிரித்துக்கொண்டன. இதன் மூலம் நட்டத்தை தவிர்க்கலாம் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. மேலும் சரிவை எல்லா நிறுவனங்களும் சேர்ந்து சந்தித்தால்தான் தப்பிக்க முடியும் என்ற காரிய வாதமும் அதில் இருந்தது. இதைத்தான் சப் பிரைம் லோன் நெருக்கடி என்று அழைக்கிறார்கள். ஆனால் லோன் மட்டும் வந்தபாடில்லை.

தேவைக்கு அதிகமான உற்பத்தி, வாங்குவதற்கு ஆளில்லை. அதனால் கடன் கொடுத்து வாங்க வைக்கிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் தீடிரென்று விண்ணுக்கு பாய்கிறது. தேவை முடிந்ததும் பாதாளத்தில் சரிகிறது. முந்தைய மதிப்பில் கடன் வாங்கியவர்கள் தற்போதைய குறைவான மதிப்பை வைத்துக் கடனைக் கட்ட முடியவில்லை. வீடுகளின் உண்மையான பயன் மதிப்பு செயற்கையாக உப்பவைக்கப்பட்ட போது ஒன்றும் தெரியவில்லை. உப்பியது வெடித்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை.

வராக்கடன்கள் கைமாறி கடைசியில் போய்ச்சேர்ந்த நிறுவனங்கள் கடனை வசூலிக்க முடியாமல் மாட்டிக்கொண்டன. இதில் கொள்ளை இலாபம் அடித்தது யார், சுமாரன இலாபம் சுருட்டியது யார், நட்டமடைந்தது யார், மக்களுக்கு என்ன இழப்பு இன்னபிறவையெல்லாம் தேவ ரகசியங்கள். நமக்கு புரியாத உபநிடதங்களும் கூட. இவற்றை சி.ஐ.ஏ புலனாய்வு செய்தாலும் கண்டுபிடிக்க முடியாத மறை பொருளாகும். மொத்தத்தில் ஊக வணிகமும், எதிர்பார்ப்பு வணிகமும், பங்குச்சந்தைச் சூதாட்டமும் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீர்க்குமிழ் உடைந்து விட்டது. முதலாளித்துவத்தின் இலாபம் தனக்குத் தானே தோண்டிக்கொண்டுள்ள சவக்கிடங்கு இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கடந்த மாதத்தில் ஃபென்னி மாய், ஃபிரடி மார்க் ஆகிய இரு தனியார் ஏகபோக நிதி நிறுவனங்கள் திவாலாகியது. அதைத் தொடர்ந்து உலகின் நான்கு பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களில் ஒன்றான லேமான் பிரதர்ஸ் நிறுவனமும், பிரபலமான மெரில் லின்ச் நிறுவனமும் திவாலாகின. மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி எனப்படும் அமெரிக்கன் இன்டர் நேஷ்னல் குரூப் நிறுவனமும் திவாலாகியது. தற்போது அமெரிக்காவின் ஆறாவது பெரிய வங்கியான வாஷிங்டன் மியுட்சுவல் மற்றும் மார்கன் ஸ்டான்லி, கோல்ட் மேன் சாஸ் ஆகிய நிதிக் கழகங்களும் மஞ்சள் கடுதாசி வரிசையில் காத்திருக்கின்றன. மொத்தத்தில் வால் தெருவிலிருக்கும் நிதி நிறுவனங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டன.

சரி தனியார் மயக் கொள்கைப் படி வல்லவன் வாழ்வான், முடியாதவன் சாவான் என்று விட வேண்டியதுதானே? அதுதானில்லை. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பல்லாயிரம் பேர் வேலையிழப்பர், பொருளாதாரம் சீர் குலையும், ஆடம்பர வாழ்க்கை மட்டுமல்ல அத்தியாவசிய வாழ்க்கையைக் கூட இழக்க நேரிடும், அமெரிக்கர்கள் நுகர்வைக் குறைத்துவிட்டால் அதற்காக உலகமெங்கும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நாடுகள் பாதிக்கப்படும் என்று பலவிதமான சென்டிமென்டுகள் சொல்லப்பட்டு அமெரிக்க அரசு மக்களின் வரிப்பணததில் கிட்டத்தட்ட 35 இலட்சம் கோடி ரூபாயை கொடுத்து இந்நிறுவனங்களை மீட்கப் போகிறது. அதற்காக புஷ் கையெழுத்திட்டு பாராளுமன்றத்திலும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதில் சில நிறுவனங்கள் அரசுடைமையாக்கப் படவும் இருக்கின்றன. இந்த நிவாரணப் பணத்தை அந்த நிறுவனங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம, அமெரிக்க சட்டப்படி கணக்கு தணிக்கை தேவையில்லை, என்றெல்லாம் சலுகைகள் வேறு!

எல்லாவற்றையும் தனியார் மயம் என்று பேசியவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்? இழப்பு என்று வந்ததும் அரசு தலையிட்டு பணம் கொடுத்து அரசுடைமையாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரு சோசலிச நாட்டில் அனைத்தும் மக்களுடைமையாக்கப்பட்டு திட்டமிட்ட உற்பத்தி செய்யும் போது மட்டுமே இந்த பிரச்சினைகளை வரவிடாமல் செய்ய முடியும் என்று மார்க்சியம் கூறுகிறது. மார்க்சியத்தை வன்மத்தோடு எதிர்த்த நாடு தனது முதலாளிகளைப் பாதுகாக்க நிறுவனங்களை அரசுடைமையாக்குகிறது என்றால் இதுதான் வரலாற்றின் கவித்துவமான நீதி!

இந்தப் பொருளாதாரச் சரிவால் அமெரிக்காவின் நிதி, காப்பீடு, வங்கி நிறுவனங்களுக்கு அவுட் சோர்சிங் செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதி இலாபத்தை இழக்கும் என்று சொல்கிறார்கள். மேலும் 25,000பேருக்கு மேல் வேலையிழப்பும் நடக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆட்குறைப்பு, செலவு குறைப்பு என்று மாற்றப்படும் ஐ.டி துறையின் பொற்கால வாழ்க்கையை இனி மலரும் நினைவுகளாய் பாடவேண்டியதுதான். இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகின் பலநாடுகளிலும் சேவைத் துறைசார்ந்த நிறுவனங்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தின் சீர்குலைவால் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று முதலாளித்துவ அறிஞர்களே கணிக்கிறார்கள். அடுத்த பலிகடா யார் என்று காத்திருந்து பார்ப்போம். ஓவர் நைட்டில் பில்லியனரான மொள்ளை மாறிகளெல்லாம் அதே ஓவர் நைட்டில் தெருவுக்கு வருவதும் நடக்கப் போகிறது. ஆனாலும் மேற்கண்ட திவாலான நிறுவனங்களின் முதலாளிகளும், தலைமை நிர்வாகிகளும் திவாலாவதற்கு முன்னால் எச்சரிக்கையாக முடிந்த அளவை சுருட்டியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதையெல்லாம் யார் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பது? பின்லேடனையே இன்னும் கண்டுபிடிக்கவில்லை, இதில் பணலேடன்களை மட்டும் எப்படிக் கண்டுபிடிப்பது?

பூச்சி மருந்து குடித்த விவசாயிகளைக் கொலை செய்த புதிய பொருளாதாரக் கொள்கையின் நாயகன் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அவல நிலைக்காக கண்ணீர் விடுகிறார். ஏதாவது செய்து உதவ வேண்டுமே எனத் துடிக்கிறார். அமெரிக்கா பொருளாதாரத்தைச் சூறாவளி தாக்கியிருக்கும் இச்சூழலில்தான் இந்தியவை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் 123 ஒப்பந்தம் ஒரிரு நாட்களில் நிறைவேறப் போகிறது. எல்லா வகை நிபந்தனைகளையும் கொண்டிருக்கும் இவ்வொப்பந்தம் காலாவதியான அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதற்காக இந்திய மக்களின் சில இலட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்காவுக்கு தாரை வார்ப்பதோடு, இறையாண்øமையையும் சேர்த்துக் கொடுக்கிறது. மட்டுமல்ல அமெரிக்காவின் நலனுக்கு உட்பட்டு இந்தியா செயல்படுகிறது என்று ஆண்டுதோறும் அமெரிக்க அதிபர் மதிப்பீடு செய்து இந்த ஒப்பந்தத்தை அமல் படுத்துவராம். இது பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் விரிவஞ்சி இங்கே தவிர்க்கிறோம். அமெரிக்காவின் தெற்காசிய பேட்டை அடியாளாக இந்தியா மாறப்போவது மட்டும் உறுதி. எதிர்காலத்தில் ஈரானின் மீது அமெரிக்கா படையெடுக்கும் பட்சத்தில் இந்தியா அதன் இராணுவத்தளமாக செயல்படுவது நிச்சயம். இந்திய அரசில் இருக்கும் சில அமெரிக்க கைக்கூலிகளால் இது சாத்தியாமாயிருக்கிறது.

இவ்வொப்பந்தம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அம்பானி முதலான தரகுமுதலாளிகள் பாராளுமன்ற வியாபாரத்தில் இறங்கி காரியத்தை சாதித்தார்கள். அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு கட்சிகளும் ஒன்றுபட்டு ஆதரித்தார்கள். இடது சாரி கட்சிகள் மட்டும் வேறு வழியின்றி அதுவும் காலம் கடந்த எதிர்ப்பைக் காட்டினார்கள். கனிமொழி தி.மு.க சார்பில் சிங்கிற்கு மலர்க்கொத்து கொடுத்து ஒப்பந்தம் நிறைவேறியதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒட்டுமொத்த அரசியல் உலகும், இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்குவதற்கு கர்ம சிரத்தையோடு வேலை செய்திருக்கிறது என்பதைத்தான். ஆயினும் அமெரிக்காவைத் தாக்கிய பொருளாதாரச் சூறாவளி இந்தியாவையும் தாக்குவதற்கு அதிக காலம் பிடிக்காது. அப்போது இந்த இந்திய அடிமைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

பூலோக சொர்க்கமான அமெரிக்காவிலேயே தனியார் மயம், சந்தை, முதலாளித்துவ உற்பத்தி முறை, அபரிதமான இலாபம் எல்லாம் ஆட்டம் கண்டிருக்கிறது முதல் முறையல்ல. ஏற்கனவே 1930களில் உலகப் பெருமந்தம் என்ற பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடங்கி உலகமெங்கும் ஏழைகளை அழித்துச் சென்றது. அப்போது அமெரிக்காவில் ஒரு புறம் கஞ்சித் தொட்டி திறந்தும், மறுபுறம் விலை வீழ்ச்சியடைந்த கோதுமையை கடலில் கொட்டியும் நெருக்கடியை சமாளிக்க முயன்றார்கள். இப்போதோ அதை விட பன்மடங்கு நெருக்கடி வந்திருக்கிறது. தேவனே வந்து மீட்புப் பணி செய்தாலும் காப்பாற்ற முடியாத நெருக்கடி.

ஏழை நாடுகளைச் சுரண்டி தன் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கும் அமெரிக்க நெருக்கடியை மற்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் கவலையோடுதான் பார்க்கின்றன. இதனால் அந்த நாடுகளும் பாதிப்பு அடையும் என்பதால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஜி எட்டு மாநாட்டிலேயே இதைப் பற்றி பேசி கூட்டாக நெருக்கடியை சமாளிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் நோபல் பரிசுபெற்ற பொருளாதார வல்லுநர்களை அதிபர்களாக நியமித்தாலும் இப்போதைய நெருக்கடி அவ்வளவு சுலபத்தில் தீர்ந்து விடாது. சந்தையின் பாசிசம் உருவாக்கிய அராஜகம் அதன் அழிவுகளை செய்து விட்டுத்தான் தணியும். எனினும் இறுதியில் இந்த அழிவுகளை சுமக்கப் போகிறவர்கள் உலகின் பெரும்பான்மையான மக்கள்தான். அவர்களைப் பற்றி கவலைப்பட யார் இருக்கிறார்கள்?

இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது. இதுநாள் வரையிலும் அறியாமையில் உலகமயத்தை ஆதரித்து வந்த பலர் இனியாவது விழித்துக் கொண்டு எதிர்க்க வேண்டியது அவசியம். தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதே உலகமயத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி. அந்த வழியை சாதிக்க வேண்டுமென்றால் அரசியல் களத்தில் வெல்லவேண்டும். உலகமயத்தை ஆதரித்து அமல்படுத்திவரும் அரசியல், முதலாளித்துவ வர்க்கங்களை அம்பலப்படுத்தி மக்களை அணிதிரட்டுவது ஒன்றே இந்த அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்.


முற்றும்..........

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா பார்ட் -- ஒன்று


இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேரபரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்குவிடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்துஅர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப்போற்றினர்.

தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களைக் கண்டோரெல்லாம்இனி எல்லாம் பிரைவேட்தான், பேஷ், பேஷ் ரொம்ப நன்னாகப் போறதுஎன்று சப்புக்கொட்டினர். கல்வி, காப்பீடு, சுகாதாரம், நிதி, அத்தனையிலும் தனியார் மயம் வெள்ளமென ஓடியது. அரசுக் கட்டுப்பாடுகள்எனும் கோட்டா ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு தாரளமயம் திறந்து விடப்பட்டது. கோக், பெப்சி முதல் எண்ணற்றநுகர்வுப் பொருட்கள் ஒரு அடியில் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன.

பங்குச் சந்தை முன்னெப்போதையும் விட பகாசுரமாக வளர்ந்தது. ஒவர் நைட்டில் அம்பானி போன்றமுதலாளிகளெல்லாம் பில்லியனில் இலாபம் பார்க்கத் தொடங்கினார்கள். வளர்ச்சியின் அளவுகோலாகசெல்பேசிகளும், வாகனங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தொலைக்காட்சி சீரியல்களும், பேரங்காடிகளும், .டி.எம்களும் அலையலையாய் வந்திறங்கின. சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் முன்இரவுபகலாய் இருந்த நீண்டவரிசை ஆடு விழுங்கிய மலைப்பாம்பு போல எப்போதும் கிடந்தது.

இப்படி உலகமயம் பூத்துக்குலுங்கிய நாட்டில்தான் இதே காலத்தில்தான் இந்த உலகமயக் கொள்கைகள்காரணமாக ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப் புறங்களில்வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களை அப்பிக் கொண்டனர். பின்தங்கிய மாநிலங்களிலிருந்து நாடோடிகளாய் புலம் பெயருவது வாடிக்கையானது. கல்வியும், சுகாதாரமும் காசு உள்ளவனுக்கு மட்டும் என்றானது. இருப்பினும் தனியார் மயத்தின் மகிமைகளைகுறிப்பாக நடுத்தர வர்க்கம் மறப்பதற்குத் தயாராக இல்லை. இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் புதியபொருளாதாரக் கொள்கைகளை மதவெறியை விட அதிகமான முதலாளித்துவ வெறியுடன் ஆதரித்துவந்தன.

எக்னாமிஸ்ட் போன்ற பத்திரிகைகளெல்லாம் இனி உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது எனவும் யாரும்தனியாக வாழ முடியாது என்றும் பிரகடனம் செய்தன. சோசலிச முகாம் அழிந்த நிலையில்முதலாளித்துவமே இனி உலகின் யதார்த்தம் என்ற கொள்கை முழக்கம் வெற்றிகரமாய் அறிவிக்கப்பட்டது. உலக வங்கியும், .எம்.எஃப்பும், உலக வர்த்தகக் கழகமும் புதிய உலகின் சக்கரவர்த்திகளாகமுடிசூட்டப்பட்டார்கள்.

இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உலகமயம் என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதைதிவாலான அர்ஜென்டினா, மெக்சிகோவும், 95களில் பொருளாதா பூகம்பங்களைச் சந்தித்ததென்கிழக்காசிய நாடுகளும் அவ்வப்போது எடுத்துக் காட்டின. அப்போதெல்லாம் இவையெல்லாம்விதிவிலக்குகள், காலப்போக்கில் பிரச்சினைகள் சரியாகிவிடும், சந்தையின் வளர்ச்சி எல்லாக்குழப்பங்களையும் தீர்த்து விடும் என்று ஜோசியம் சொன்னார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

தனிநபர்களிடம் மேலும் மேலும் சொத்து சேர்வதும், பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், குறிப்பிட்ட தொழிற்சாலையில் திட்டமிட்ட உற்பத்தியும், நாட்டளவில் அராஜக உற்பத்தியும் நிலவுவதும் என முதலாளித்துவ சமூகத்தின் இரு முரண்பாடுகளை காரல் மார்க்ஸ் தனது மூலதனம் ஆய்வில் நிறுவியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் முற்றும்போதுதான் பலவிதமான பொருளாதார நெருக்கடிகளும், போர்களும் வெடிக்கின்றன. உலகில் தற்காலிகமாக சோசலிசம் மறைந்திருக்கலாம், ஆனால் மார்க்சியம் என்ற சமூக அறிவியல் மறையாது. ஆம். தற்பொது அந்த விதிப்படி உலக முதலாளித்துவத்தின் தலைமையிடமான அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசிகளை அளித்திருக்கின்றன. வால்ஸ்டீரீட் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைநகரத் தெரு கடந்த சில நாட்களாக அதிர்ச்சியில் புதையுண்டிருக்கிறது. இது அமெரிக்காவோடு முடியாமல் பிரச்சினையும் உலகமயமாகியிருக்கிறது.


மீதி அடுத்த சந்திப்பில் பார்க்கலாம்

Friday, October 03, 2008

கூகிளின் புதிய சேவை : குழுமக் குறுஞ்செய்தி


கூகிள் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தற்போது ஒரு புதிய சேவையைத் துவங்கியுள்ளது.

இதற்கு கூகிள் எஸ்.எம்.எஸ் சேனல்ஸ் என்று பெயர்.

வலைப்பூவில் புதுப்பித்தவை, செய்தி அறிக்கைகள், சிரிப்பு, ராசிபலன், கிரிக்கெட் விவரங்கள், செய்தித்துளிகள், பங்குச் சந்தை நிலவரங்கள் போன்றவற்றை இந்தச் சேனல்கள் வாயிலாக குறுஞ்செய்தியாகப் பெறலாம்.

குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் குழுமங்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அவர்களுக்குள் கூகிள் எஸ்.எம்.எஸ் சேனல் வாயிலாக இலவசமாகக் குறுந்தகவல் அனுப்பிக்கொள்ளலாம்.

இந்திய மொழிகளான தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் இவற்றிலேயே தகவலைத் தட்டி முழுக்குழுமத்திற்கும் அனுப்பலாம் என்பது நல்ல தகவல்தானே.

புதிய சேனலை உருவாக்க


நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க

Invite to Others ல் சொடுக்கவும். நண்பர்களின் அலைபேசி எண்களை ஒன்றன்பின் ஒன்றாக இடவும். கம்மா ( , ) குறியீட்டால் பிரித்துப் பிரித்து இடவேண்டும்.


தேங்க்ஸ் ----- தமிழ்2000


தமிழ்2000ன் புதிய பதிவுகள் பற்றிய விபரங்களைக் குறுஞ்செய்தியாகப் பெறுவதற்கு
http://labs.google.co.in/smschannels/subscribe/tamizh2000

Wednesday, October 01, 2008

அவரவர் வீடுகளில் புகைப்பிடித்தாலும் அபராதம் - ஐயோ பாவம்


நாளை முதல் பொதுஇடங்களில் புகைப்பிடித்தால் ரூபாய் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார் . மத்திய அமைச்சர் திரு அன்புமணி ராமதாஸ் இயற்றியுள்ள சட்டமே இதற்கு காரணமாகும் .

பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு அபராதம் விதிப்பதன் மூலம் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் , மது அருந்தும் பழக்கத்தையும் நாட்டிலிருந்து அறவே ஒழிப்பதே தனது லட்சியம் என்றும் கூறுகிறார்

உண்மையிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் , மதுவையும் நாட்டிலிருந்தே ஒழிக்க நினைத்தால் அவர் அதை ஒரு சட்டத்தின் மூலமாக எளிதில் தடுத்து விடலாம் அல்லவா?

ஒருபுறம் மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கி விட்டு , மறுபுறம் மதுவை ஒழிக்க போவதாக கூறுவது எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை.

மதுபான ஆலை அதிபர்களும், புகைப்பொருள் உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்களும் தங்கள் தொழிலை தொடர்ந்து செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும்,
அரசுக்கும் அவர்களிடமிருந்து வரியாக கிடைக்கும் பெருந்தொகையும் தடையில்லாமல் கிடைக்க வேண்டும்,
அரசியல்வாதிகளுக்கும் அக்தகைய தொழில் அதிபர்களிடமிருந்து வரும் வருமானமும் குறையாமல் கிடைக்க வேண்டும்.
இதெல்லாம் நடைபெற வேண்டுமானால் திருவாளர் பொதுஜனமாகிய நாமெல்லாம் எப்போதும் திருந்திவிடக் கூடாதல்லவா ?

அதனால்தான் மதுவையும், புகைபொருட்களையும் உற்பத்தி செய்வதையும் தடை செய்யாமல் , அவற்றின் விற்பனையையும் தடை செய்யாமல் எதைச் செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்காத திருவாளர் பொதுஜனத்தின் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றியுள்ளனர் .

பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் என்ற இந்த சட்டம் பொதுஜனத்தின் தலையில் ஒரு இடியாகத்தான் இறங்கியுள்ளது , இனி காவலர்களுக்குத் தான் கொண்டாட்டம். இதுவரை வாகன ஓட்டிகள்தான் காவலர்களுக்கு பணம் காய்க்கும் மரமாக இருந்தனர்
காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து
தலைக்கவசம் அணியவில்லை ,
ஓட்டுனர் உரிமம் இல்லை ,
வாகன உரிமைச் சான்று இல்லை ,
வாகன காப்பீடு இல்லை
இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி எளிதாக அபராதம்(!) விதித்து வந்தனர்.

இப்போது இன்னும் எளிதாக பணம் பறிக்க ஒரு வழி கிடைத்தாகி விட்டது, ஏனெனில் பொதுஇடம் என்று அரசின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள்
சாலைகள்,
சாலை ஓர நடை பாதைகள்,
தேநீர் கடைகள்,
உணவகங்கள்,
தங்கும் விடுதிகள்,
பேருந்து,
இன்னும் பல , இதில் உச்ச கட்டமான இடம் எதுவென்றால் இந்த பட்டியலில் வீடும் உள்ளது ,

அதாவது ஒருவர் தனது சொந்த வீட்டில் புகைப்பிடித்தால் கூட அவருக்கு அபராதம் விதிக்கப்படும் .இதைவிட பொதுஜனத்திடமிருந்து பணம் பறிக்க எளிதான வழி எதுவும் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை.......
Thanks Arivizhi!
 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009