Monday, October 13, 2008

அமெரிக்காவில் ஏற்பட்ட வீழ்ச்சி ஏன்? நடந்தது என்ன

கடந்த 15 நாட்களாக பங்குச்சந்தை பற்றிப் பேசாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. காரணம், சிறிய அளவு சேமிப்பையும் முதலீடாக்கிய ஒரு சாதாரண நபரும் இந்த சந்தை வீழ்ச்சியில் பாதிக்கப்பட்டிருக்கிறார்.கடந்த இரு ஆண்டுகளில் பங்குச்சந்தையில் முதலீடு என்பது ரேஸ் குதிரைப் பந்தயத்தில் முதலீடு போல பெரிதாகப் பேசப்பட்ட விஷயம்.

பங்குச்சந்தை
குறியீட்டெண் 10 ஆயிரத்தை தாண்டியபின் மடமட வென அதிகரித்து, 15 ஆயிரத்தை தாண்டியதும், அதில் முதலீடு செய்யாமல், வங்கி நிரந்தர வைப்பில் பணத்தைச் சேமித்தவர்கள் அப்பாவிகளாகக் கூட காணப்பட்டனர்.இன்று பங்குகள், பங்குச்சந்தையின் செயல்கள், முதலீட்டில் அதன் தாக்கம் ஆகியவை பற்றி அறிந்தவர்களை விட அறியாத பலரும் ஆர்வத்தில் முதலீடு செய்துவிட்டு, தற்போதைய சந்தையின் அதலபாதாள வீழ்ச்சியில் குன்றிப் போய் இருக்கின்றனர்.


இந்நிலைக்கு அமெரிக்காவின் போக்கே காரணம். வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற கருத்தை நோக்கி செயல்படும் பொருளாதாரத்தை அங்கே ஊக்குவித்தனர். தவிரவும், எல்லாவற்றையும் நுகரும் கலாசாரம் என்ற நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன் வாங்கிய வீடுகள் தற்போது மும்மடங்கு வரை விலை அதிகரித்தது.இந்த வீட்டு வசதிக்காக வங்கிகள் கடன் தரும் நடைமுறையில் அமெரிக்கா பின்பற்றிய அணுகுமுறை பெரிய ஆபத்தை உலகம் முழுவதும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

கடன் பெற்றவர்கள் :
ஏதோ லேமென் வங்கி வீழ்ச்சி என்று ஆரம்பித்த கதை, 70 ஆயிரம் கோடி டாலரை அரசு தரமுன்வந்தும் அமெரிக்க நிலைமையை மோசமாக்கியிருக்கிறது.உதாரணமாகச் சொன்னால், மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் டாலரில் ஒரு வீடு (அன்று அதன் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம்) வாங்கினால், அமெரிக்காவில் அதற்குப் பெரிய ஆதாரம் ஒன்றும் கேட்காமல் கடன் தந்துவிடும் வங்கி.முகவரிக்கான அத்தாட்சி கூட இல்லாமல் கடன் பெற்றவர்கள் உண்டு. கிரெடிட் கார்டு கலாசார வேகம் அப்படி. வீடு வாங்கினால் அது அதிகவிலைக்கு எதிர்காலத்தில் விற்கப்படும் என்ற கருத்தில், அமெரிக்காவில் வீடு வாங்கும் மோகம் அதிகரித்தது. அந்தக் கடன்பத்திரங்களை அப்படியே அமெரிக்க வங்கிகள
அதிக லாபம் தரும் கடன் உத்வி வசதிகள்' என்று கவர்ச்சிகரமாகப் பெயரிட்டு மற்ற நிதி நிறுவனங்களுக்கு விற்றன.இதில் திவாலான அமெரிக்க நிதிநிறுவனம் லேமென் வாங்கிக்குவித்த கடன்பத்திரங்கள் ஏராளம். இந்தக் கடன் பத்திரங்கள் பல்வேறு வங்கிகளுக்குக் கைமாறி, அதற்கு கமிஷன் பெற்றவர்கள் ஏராளம். நீர்க்குமிழி போல இந்த வர்த்தகம் உலகெங்கும் வங்கிகளிடம் பரவியது.ஆனால், கடந்த ஆண்டு வீட்டு விலை இறங்கத் தொடங்கியது. தவணை கட்ட வேண்டியவர்கள் படுத்து விட்டனர்.
நிறைய வீடுகளை விற்க முன்வந்தனர், கிடைத்த விலைக்கு விற்று லாபம் பார்க்க முயன்றனர். ஆனால், வாங்குவதில் அதிக வேகம் இல்லை.அதேசமயம், அதிகலாபத்தில் இந்தப் பத்திரங்களை விலைக்கு வாங்குவதை லேமென் முதலிய நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டன. அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வங்கிகள் நிதிப்புழக்கம் இன்றி முடங்கின. பத்திரங்களைப் பெற்று கணிசமான வட்டிக்குப் பணம் தரும் வங்கிகளின் சாமர்த்தியம் முடிவுக்கு வந்தது. தங்களிடம் உள்ள ஆஸ்திமதிப்பு குறைந்ததும் ஒரு வங்கி மற்றொரு வங்கியிடம் தனக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு வழக்குகள் தொடர்ந்தன.


அமெரிக்கா மட்டும் அல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகள் தடுமாறின. இது ஆசியாவுக்கும் பரவி இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த "சப்பிரைம்' பிரச்னை இன்று உலகையே நிம்மதியில்லாமால் ஆக்கி விட்டது.முடிவில் 70 ஆயிரம் கோடி டாலரை அமெரிக்க அரசு தர வேண்டியதாயிற்று; உழைத்துச் சேமித்தவர்கள் பணத்தை அழித்து விட்டது. பொதுவாக ஒருவர் கடன் பெற்று வீடு வாங்கினால் அது சொத்து அல்ல; பொருளாதார சுமை. அதே போல கிரெடிட் கார்டில் மளிகைச் சமான்கள் வாங்கினால் அது சுமை; சுகம் அல்ல

ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசை :
பணக்காரர்கள் தங்கள் பணத்தை வங்கியில் வைத்திருக்க மாட்டார் கள், அதைப் பெருக்கு வழிகாண் பார்கள். மாறாக, ஸ்டாக் புரோக்கரிடம் போனில் பேசி பங்குகள் வாங்கினால் அது பணமரமாகக் காய்க்கும் என்றால் அவ்வளவு தான்! அந்தப்பாடத்தை இப்போது அமெரிக்க அனுபவத்துடன் பலரும் கற்று வருகின்றனர். நல்ல வேளையாக, "சப்பிரைம்' நடைமுறையை இந்தியாவில் பின்பற்றவில்லை.இன்று பங்குச்சந்தை அதலபாதளத்தில் நிற்கிறது. இதற்குக் காரணம் ஒரு பக்கம் அச்சம். மறுபக்கம் பேராசையால் ஏற்பட்ட பீதி. தீபாவளி கொண்டாடுவேன்' : மும்பை ஸ்டாக் புரோக்கர் ஜுன்ஜுன்வாலா வெளிப்படையாக, "பங்குச்சந்தையில் 20 ஆயிரம் வரை புள்ளிகள் உயரும் என்று நான் கணிக்கவில்லை, ஆபத்தில்லா முதலீடு செய்தவர்கள் நன்றாக வரும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள், "மேலும் தீபாவளிக்கும், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல, பேச வேண்டாம். நான் நன்றாகவே வழக்கப்படி தீபாவளி கொண்டாடுவேன்' என்கிறார். அப்படி எத்தனை ஸ்டாக் புரோக்கர்கள் இனிக் கூறப்போகிறார்கள் என்பது கேள்வி தான்.


நெம்புகோல் தத்துவம்:
150 சதவீத லாபம் எப்படி வரும்?: அமெரிக்காவில், 2003ம் ஆண்டு வட்டிவீதம் 1 சதவீதம் என்று ஏற்பட்டதிலிருந்து வீட்டுக்கடன் என்பதில் வந்த பல்வேறு நடைமுறைகள் இன்று அமெரிக்க, ஐரோப்பிய வங்கி நிறுவனங்களைக் கலக்குகின்றன.ஏதோ ஆதாயம் வரும் என்று எண்ணி, கையில் இருக்கும் மூலதனத்தை இழப்பது சரியல்ல; ஆனால், கையில் மூலதனமே இல்லாமல் நடக்கும் பரிவர்த்தனைகள், அதற்கான நடைமுறைகள் இப்போது உலகம் முழுவதும் எல்லாரையும் அச்சப்பட வைத்து விட்டது. ஒரு சிறிய உந்து சக்தியை வைத்து பெரிய பாறாங்கல்லைக் கூடப் புரட்டலாம் என்பது நெம்புகோல் தத்துவம், இது இயற்பியலில் உள்ளது


ஒருவர் 1,000 ரூபாயை சேமிப்பில் போட்டு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி என்றால், அது ஆண்டு முடிவில் 1,150 ரூபாயாக உயரும். ஆனால், கையில் 1,000 ரூபாயை வைத்துக்கொண்டு மேலும், 9,000 ரூபாய் கடன் வாங்கி பின் மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் எப்படி? அந்த முதலீட்டிற்கு ஆண்டு இறுதியில் வட்டி 15 சதவீதக் கணக்கில் பார்த்தால், அசலுடன் சேர்த்து 11 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும்.பணம் வாங்கியது உறவினரிடம் என்றால், வாங்கிய அசலை மட்டும் திரும்பக் கொடுத்துவிட்டால், எந்தவித முயற்சியும் இன்றி 2,500 ரூபாய் கிடைக்கிறது. அதில் முதலில் கையில் வைத்திருந்த அசல் 1,000 ரூபாய் மட்டுமே என்பதை நினைத்தால் ஆச்சரியம் அல்லவா? அப்போது 1,000 ரூபாய்க்குக் கிடைத்தது 1,500 ரூபாயா? நினைத்தால் மலைப்பாக இருக்கும். இது, 150 சதவீத லாபம்.இப்படி லாபம் கிடைக்காமல் 15 சதவீத வட்டியும் காற்றில் பறந்து விடுகிறது என்றால், அந்த நிலையில் கிடைப்பது 8,500 ரூபாய் மட்டுமே.
உறவினரிடம் வாங்கிய 9,000 ரூபாயிலும் 500 இழப்பாகி விடுகிறது. கையில் வைத்திருந்த 1,000 ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது. இப்படித்தான், "சப்பிரைம்' கடன் பத்திரங்கள் லாபம் கிடைக்கும் என்று பல்வேறு முதலீடுகளாக மாறி இன்று, "வால்ஸ்டிரீட் மட்டும் அல்ல, உலகையே கலக்குகிறது. இதில் ஒரு நல்ல அம்சம். இந்தியாவில் உள்ள வங்கி ஏதும் இந்த நிதிச்சுழலில் சிக்காததால், அதில் சேமிக்கப்பட்ட டிபாசிட்டுகளுக்கு ஆபத்து இல்லை

Related Posts0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009