
உலகின் சந்து பொந்துக்களிலெல்லாம் தனது அதிகாரத்தை நுளைத்து, அதற்குரிய சமூக நீதியையும் கட்டமைத்து எதேச்சதிகார ஆட்சி நடத்திவந்த அமரிக்காவும் அதன் பங்கு நாடுகளான ஐரோப்பிய நாடுகளும் இன்று பதட்டமும் அதிர்ச்சியுமடைந்து போயிருக்கின்றன. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையில், ஐரோபிய-அமரிக்கத் தலை நகரங்களிலெல்லாம் நாளிகைக்கு நாளிகை நிபுணர்கள் புடைசூழ கூட்டம்போட்டுப் திட்டங்கள் வகுத்துக் கொள்கிறார்கள்.
வறிய மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாக ராட்சதக் கோப்ரேட் கம்பனிகளைக் காப்பாற்ற வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தவிர்க்கமுடியாத தோல்வியென்பது அதிகமாகக் கடன் வாங்கியதாலும் அதிகமாகச் சாப்பிட்டதாலும் ஏற்பட்டதென்று வறிய மக்களின் தலையில் பழியைப் போட்டுவிட்டு வறிய மக்களைச் சுரண்டி வாழ புதிய திட்டங்களை வகுக்கவாரம்பித்து விட்டார்கள்.
ஏகாதிபத்தியம் என்பது அதிகார வர்க்கத்திற்குச் சேவை செய்யும் அமைப்புமுறை. ஜனநாயகத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மக்களைச்சுரண்டி வாழும் தன்மைகொண்ட இந்த அமைப்புமுறை நிலைபெறாது. என்ற ஜோன் ஹொப்சனின் கூற்று இன்றைக்கு மறுபடி நிரூபணமாகிறது.
வியாபாரம் செய்வதற்காக மட்டுமே ஏனைய நாடுகளை ராணுவ வன்முறையூடாக அடிமகளாக்கி காலனித்துவ ஆட்சி நடாத்திய வல்லரசு நாடுகள், முதலாமுலக யுத்தத்திற்குப் பின்னதாக வறிய நாடுகளைச் சுரண்டுவதற்காக முதற்தடவையாக தமது அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பை மறு ஒழுங்கமைப்புச் செய்துகொண்டன. நிலப் பிரப்புத்துவ சமூக அமைப்புமுறை போன்ற முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த அமைப்பு முறைகளைப் போலல்லாது முதலாளித்துவ அமைப்பு தோன்றிய மிகக் குறுகிய கால எல்லைக்குள்ளேயே பல தடவைகள் சரிந்து விழுந்திருக்கிறது.
அமைப்பியல் நெருக்கடி
1970 களின் ஆரம்பத்தில் உருவாகியிருந்த பொருளாதார நெருக்கடியின் போதே இன்று உடைந்து சரியும் நவ-தாராளவாதக் கொள்கை தொடர்பான படிமங்களும் கட்டமைகளும் உருவானது. 70 களின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு உருவாக்கப் பட்ட ஒழுங்கமைப்பு முறையே இந்த நவ-தாராள வாதக் கொள்கையும் அதனைத் தொடந்துவந்த உலகமயமாதலுமாகும். உலக மயமாதல் மட்டும் தான் உலகத்தின் விடிவெள்ளி எனப் பாராட்டி மிகச்சில மாதங்களுகுள்ளேயே இத்தாலிய நிதியமைச்சர் ஜூலியோ திரிமொந்தி “உலகமயமாதலின் அபாயம்” என்ற நூலைப் எழுதியிருக்கிறார்.

நவதாராள வாதக் கொள்கை அல்லது உலகமயமாதலுக்கு மேற்குலகத் தொழிலாளர்கள் கொடுத்த விலைகளில் ஒன்று வேலையிலாத் திண்டாட்டமாகும். இதனால் தேவையானளவு நிலுவைத் தொழிலாளர் (Reserve army of labour) படையை தத்தமது நாடுகளில் உருவாக்கிக் கொண்ட முதலாளித்துவம், வேலையற்ற தொழிலாளர்களை திருப்திப்படுத்த சமூக உதவித் திட்டங்களை அதிகப்படுத்தியதுடன், அச்சமூக உதவித்திட்டங்களையும், வறிய நாடுகளிலிருந்து சுரண்டிய பணத்தில் அமுல்படுத்திக் கொண்டது.
1970 களில் அமைப்பியல் நெருக்கடி (Structural Crisis) என வர்ணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி 80 களின் ஆரம்ப்பம் வரை நீடித்தது. அருகிப்போன தொழில் உற்பத்தித் திறன், குறைவடைந்த வளர்ச்சி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பொருளாதார நிலையற்ற தன்மை (Macro Instability - Boom and recessions) என்பனவையே அமரிக்கவின் ஜனாதிபதியாகவிருந்த ரொனால்ட் ரீகன் மற்றும் பிரித்தானியப் பிரதமராகவிருந்த மாக்ரட் தட்சர் ஆகியோரின் தலைமையில் இன்று உலகமயமாதல் என்ற, நெருக்கடிககு உள்ளாகியிருக்கும் பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்ட தென்பதை குறித்துக் காட்டும் ஜோர்ஜ் சொரஸ் இன்றைய நெருக்கடியென்பது முற்றிலும் வேறுபட்ட இருப்பிலுள்ள முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் தீர்க்க முடியாத பல அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
ஏறத்தாள 20 வருடங்களில் உலகின் மூலைமுடுக்கெல்லாம் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் கிராமப்புறங்களாகிவிடுமோ என அச்சம் கொள்ளும் அளவிற்கு அளவிற்கு இந்த உலகமயமாதல் பரந்து விரிந்துவிட்டது.
ஏகதிபத்தியத்தின் உச்ச வடிவமான இந்த உலகமயமாதலே சரிந்து விழுகிற நிலைக்கு வந்தபின்னர் இனிமேலும் ஏகாதிபத்திய அமைப்பு முறையும் அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நாடுகளும் இன்னும் நிலைக்க முடியுமா என்ற கேள்வி பொருளியியல் வல்லுனர்களிலிருந்து சாதாரண மக்கள்வரை பதிலுக்காக அலசப்படுக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தடவையும் முதலாளித்துவம் பொறிந்து விழும் போதும், 70 களில் ஏற்படுத்தப்பட்ட நவ-தாராளவாதம் என்ற புதிய ஒழுங்கமைப்பைப் போல புதிய ஒழுங்கமைப்புகளூடாக அது மறுபடி மறுபடி தூக்கி நிறுத்தப்பட்டது. ஆனால் இந்தத் தடவை நிலமை முற்றிலும் மாறுபடுகின்றது.
இனிமேல் இன்னொரு மறு ஒழுங்கமைப்புச் சாத்தியமில்லை என்ற நிலை தோன்றிவிட்டதைப் பல முதலாளித்துவப் பொருளியல் வல்லுனர்களே ஒத்துக் கொள்கிறார்கள். ஐரோப்பாவினதும், அமைக்காவினதும் ஆதிக்க வாழ்வுக்காலம் இன்னும் சில குறுகிய வருடங்களே என பலர் எதிர்வுகூற ஆரம்பித்துவிட்டார்கள்.
கார்மார்க்ஸ் சொன்னபடி..
ஆனால் 160 வருடங்களுக்கு முன்னமே கார்ல் மார்க்ஸ் இந்த நெருக்கடியை எதிர்வு கூறிய போது அவர் பயங்கர வாதியாகவும், குழப்பவாதியாகவும் சித்தரிக்கப்பட்டார்.
‘Trajectories a la Marx’ என்று பிரபலமாக அறியப்பட்ட சொற்தொடர்களூடாக குறித்துக்காட்டப்படும் கார்ல் மார்க்சின் பொருளியல் சிந்தனை கூறும் விசைப் புலம் என்பது முதலாளித்துவம் நீண்ட காலத்திற்கு நிலைபெற முடியாது என்பதற்குரிய காரணத்தை விஞ்ஞான பூர்வமாகத் தெளிவுபடுத்துகின்றது.
இந்தத் தர்ககீக நிறுவலிலிருந்துதான் கார்ல் மார்க்ஸும் ஏங்கல்சும் முதலாளித்துவ சமுதாயத்தின் அழிவிலிருந்து கம்யூனச சமுதாயம் உருவாகும் என்ற முடிபுக்கு வருகின்றனர்.
விஞ்ஞான பூர்வமான சமூகவியலை உலகிற்கு அறிமுகப்படுத்திய கார்ல் மார்க்ஸை இன்று முதலாளித்துவப் பத்திரிகைகள் மட்டுமல்ல மதகுருக்கள் கூட நிலைவுகூருகின்ற நிலை உருவாகிவிட்டது. “கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மையாகிறது. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் முதலாளித்துவ பொருளியல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது.” என்று பிரித்தானிய கார்டியன் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. “கம்யூனசத்தின் நவீன தந்தையான கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவம் பற்றி விமர்சித்தது பகுதியாகச் சரியானதே” என்கிறார் கன்பரி மதகுரு.
மூலதனத்தை, சொத்துக்களைப் பொது உடமையாகவல்லாமல் தனி உடமையாகப் பேணுவதென்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சாராம்சமாக அமைய, மூலதனத்தின் முகாமைத்துவம் என்பது இன்னொரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
இவை இரண்டையும் தவிர, பெரும் பொருளாதாரக் கூறுகள் (Macro economy) மூலதனத்தைத் தனியுடமையாகப் பேணுதலில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது.
1. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஓரிடத்தில் -தனி மனிதர்களிடமோ, பெரும் கம்பனிகளிடமோ- மூலதனம் குவியும் போது, அதனைப் சேமிக்கவேண்டிய தேவை அதன் உடமையாளர்களுக்கு அவசியமாகிறது. இதனூடாக கடன் பொறிமுறை(Credit Mechanism) உருவாகிறது. இவ்வாறான கடன் பொறிமுறை என்பது, வங்கிகளூடான பண வினியோகத்தினூடாக நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறான பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத எல்லையற்றதாக இயல்பாகவே உருவாகிவிடுவதால் இலாபத்தினூடாகக் குவிந்த மூலதனத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது என்று டொமிக் லேவிஸ் மற்றும் ஜெரா டுமினெல் ஆகியோர் தமது ” நவதாரளவாதத்தின் இயல்பும் முரண்பாடுகளும்” என்ற தமது கட்டுரையில் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடியின் முதலாவது அடிப்படையே இதிலிருந்து தான் உருவாகிறது.
2. கார்ல் மார்க்ஸ் தெளிவாகக் கூறுவது போல உழைப்பு சக்தியை வாங்குதல் என்பது முதலாளித்துவத்திற்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக அமைகிறது. ஊதியத்தின் விலையைத் தீர்மானிப்பதற்கு காலத்திற்குக் காலம் தொழிலாளர்படையின் மீளமைப்பு (periodic replenishment of army of labour) என்பதே மையப் பகுதியாக அமைகிறது. இந்த மீளப்பினூடாக வேலையற்ற ஒரு பகுதித் தொழிலாளர்களை உருவாக்குவதனூடாக ஏனையோரின் ஊதியத்தின் உயர்வைத் தடுப்பதற்கும் அதனூடாக இலாபத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பைப் பேணுவதற்கும் முதலாளித்துவம் மறுபடி மறுபடி திட்டங்களை வகுத்துக் கொள்ளும்.
இந்த இரண்டு முக்கிய முதலாளித்துவப் பொறி முறையின் அடிப்படைக் கூறுகளே 2008 இல் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடியினதும் முதலாளித்துவத்தின் சரிவினதும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.
70 களில் உருவான பொருளாதார நெருக்கடின் போது உலகமயமாதல் என்ற புதிய ஒழுங்குமுறை மூலதனத்தை சுதந்திரமாக உலாவவிட்டது. இதனால் வளர்ச்சியடைந்த ராட்சத வியாபார நிறுவனங்கள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நகரவாரம்பித்தன. இதனால் தம்மை மேற்குலகக் வியாபார நிறுவனங்கள் மறுபடி வளர்ச்சியடைய ஆரம்பித்தன. பணம் பெருகியது. மூலதனம் குவியவாரம்பித்தது.
இன்றைய நெருக்கடியின் அடிப்படைகள் நெக்ஸ்ட்
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments