Monday, October 06, 2008

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா பார்ட் -- ஒன்று


இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேரபரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்குவிடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்துஅர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப்போற்றினர்.

தாமதமாக வரும் அரசுப் பேருந்து, எரிச்சலுடன் வாடிக்கையாளரை விரட்டும் வங்கிப் பணியாளர், சேவையில்லாமலே தெனாவெட்டாக நடக்கும் தபால் துறை, தருமத்துக்கு நடக்கும் அரசுப் பள்ளிகள், வசதிகளற்ற அரசு மருத்துவமனைகள் இப்படி அன்றாட வாழ்வின் இன்னல்களைக் கண்டோரெல்லாம்இனி எல்லாம் பிரைவேட்தான், பேஷ், பேஷ் ரொம்ப நன்னாகப் போறதுஎன்று சப்புக்கொட்டினர். கல்வி, காப்பீடு, சுகாதாரம், நிதி, அத்தனையிலும் தனியார் மயம் வெள்ளமென ஓடியது. அரசுக் கட்டுப்பாடுகள்எனும் கோட்டா ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டு தாரளமயம் திறந்து விடப்பட்டது. கோக், பெப்சி முதல் எண்ணற்றநுகர்வுப் பொருட்கள் ஒரு அடியில் இந்திய நிறுவனங்களை அழித்துவிட்டு கால் பதித்தன.

பங்குச் சந்தை முன்னெப்போதையும் விட பகாசுரமாக வளர்ந்தது. ஒவர் நைட்டில் அம்பானி போன்றமுதலாளிகளெல்லாம் பில்லியனில் இலாபம் பார்க்கத் தொடங்கினார்கள். வளர்ச்சியின் அளவுகோலாகசெல்பேசிகளும், வாகனங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும், தொலைக்காட்சி சீரியல்களும், பேரங்காடிகளும், .டி.எம்களும் அலையலையாய் வந்திறங்கின. சென்னை அமெரிக்கத் தூதரகத்தின் முன்இரவுபகலாய் இருந்த நீண்டவரிசை ஆடு விழுங்கிய மலைப்பாம்பு போல எப்போதும் கிடந்தது.

இப்படி உலகமயம் பூத்துக்குலுங்கிய நாட்டில்தான் இதே காலத்தில்தான் இந்த உலகமயக் கொள்கைகள்காரணமாக ஐந்து இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கிராமப் புறங்களில்வாழ்விழந்த இலட்சக்கணக்கானோர் உதிரிப் பாட்டாளிகளாய் நகரங்களை அப்பிக் கொண்டனர். பின்தங்கிய மாநிலங்களிலிருந்து நாடோடிகளாய் புலம் பெயருவது வாடிக்கையானது. கல்வியும், சுகாதாரமும் காசு உள்ளவனுக்கு மட்டும் என்றானது. இருப்பினும் தனியார் மயத்தின் மகிமைகளைகுறிப்பாக நடுத்தர வர்க்கம் மறப்பதற்குத் தயாராக இல்லை. இந்தியா டுடே போன்ற பத்திரிகைகள் புதியபொருளாதாரக் கொள்கைகளை மதவெறியை விட அதிகமான முதலாளித்துவ வெறியுடன் ஆதரித்துவந்தன.

எக்னாமிஸ்ட் போன்ற பத்திரிகைகளெல்லாம் இனி உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது எனவும் யாரும்தனியாக வாழ முடியாது என்றும் பிரகடனம் செய்தன. சோசலிச முகாம் அழிந்த நிலையில்முதலாளித்துவமே இனி உலகின் யதார்த்தம் என்ற கொள்கை முழக்கம் வெற்றிகரமாய் அறிவிக்கப்பட்டது. உலக வங்கியும், .எம்.எஃப்பும், உலக வர்த்தகக் கழகமும் புதிய உலகின் சக்கரவர்த்திகளாகமுடிசூட்டப்பட்டார்கள்.

இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உலகமயம் என்ன விளைவைக் கொண்டு வரும் என்பதைதிவாலான அர்ஜென்டினா, மெக்சிகோவும், 95களில் பொருளாதா பூகம்பங்களைச் சந்தித்ததென்கிழக்காசிய நாடுகளும் அவ்வப்போது எடுத்துக் காட்டின. அப்போதெல்லாம் இவையெல்லாம்விதிவிலக்குகள், காலப்போக்கில் பிரச்சினைகள் சரியாகிவிடும், சந்தையின் வளர்ச்சி எல்லாக்குழப்பங்களையும் தீர்த்து விடும் என்று ஜோசியம் சொன்னார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள்.

தனிநபர்களிடம் மேலும் மேலும் சொத்து சேர்வதும், பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், குறிப்பிட்ட தொழிற்சாலையில் திட்டமிட்ட உற்பத்தியும், நாட்டளவில் அராஜக உற்பத்தியும் நிலவுவதும் என முதலாளித்துவ சமூகத்தின் இரு முரண்பாடுகளை காரல் மார்க்ஸ் தனது மூலதனம் ஆய்வில் நிறுவியிருக்கிறார். இந்த முரண்பாடுகள் முற்றும்போதுதான் பலவிதமான பொருளாதார நெருக்கடிகளும், போர்களும் வெடிக்கின்றன. உலகில் தற்காலிகமாக சோசலிசம் மறைந்திருக்கலாம், ஆனால் மார்க்சியம் என்ற சமூக அறிவியல் மறையாது. ஆம். தற்பொது அந்த விதிப்படி உலக முதலாளித்துவத்தின் தலைமையிடமான அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசிகளை அளித்திருக்கின்றன. வால்ஸ்டீரீட் எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைநகரத் தெரு கடந்த சில நாட்களாக அதிர்ச்சியில் புதையுண்டிருக்கிறது. இது அமெரிக்காவோடு முடியாமல் பிரச்சினையும் உலகமயமாகியிருக்கிறது.


மீதி அடுத்த சந்திப்பில் பார்க்கலாம்

Related Posts0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009