இன்று மோசடிப் பேர்வழி என்று அறியப்படுகிற சத்யம் ராசு தனது சொந்தப் பணத்தின் மூலம் சுமார் பத்து லட்சம் ஏழைக் குடும்பங்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி, அந்தக் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு உதவிக் கொண்டு உள்ளார் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.
சத்யம் ராமலிங்க ராசு தனது தந்தை பைர் ராசு நினைவாக ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பைர் ராசு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, அந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி வருகிறார்.
சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளை அந்தப் பகுதியல் உள்ள ஆறு மாவட்டங்களில் முனைப்புடன் செயல்படுகிறது.அந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 கிராமங்களில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளையின் மூலம் பலன் அடைந்த ஏழை மக்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சத்தைத் தாண்டும் என்பதை அறியும் போது உண்மையிலேயே வியப்பாகத்தான் இருக்கிறது.
வருமான வரி விலக்கைப் பெறுவதற்காகத் தான் இது போன்ற செயல்களில் சத்யம் ராசு ஈடு பட்டார் என்று கூறி அவரின் தொண்டுகளை நாம் எளிதில் ஒதுக்கி விடக் கூடாது. ஏனென்றால் சத்யம் ராசுவை விட பல மடங்கு வருமானம் ஈட்டும் எத்தனையோ பெரும் தொழில் அதிபர்கள் இது போன்ற தொண்டுகளைச் செய்யாமல் அதே நேரத்தில் வருமான வரியையும் கட்டாமல் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம் இல்லையா?
ஆந்திர மாநிலத்தில் பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான ராமலிங்க ராசு தந்து வாழ்வில் எப்படி முன்னேறினார் என்பதைப் பார்ப்போம்,
1987 -ஆம் ஆண்டில் வெறும் 20 ஊழியர்களுடன் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். நிறுவனத்தை ஆரம்பித்தார் ராமலிங்க ராசு.
1990 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த விற்று முதல் வெறும் ஐம்பத்தாறு லட்சம் ரூபாய் மட்டுமே.
1991-இல் சத்யம் நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு தொழில் ஒப்பந்தத்தைப் பெற்றது.
1999-இல் அமெரிக்காவின் நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்டது சத்யம் நிறுவனம். நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்ட முதல் இந்திய இணைய நிறுவனம் சத்யம்தான்.
2000-த்தில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட உலகின் தலை சிறந்த முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட பெருமையைப் பெற்றது சத்யம் நிறுவனம்.
2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனம் ஐ.எஸ்.ஒ தரச் சான்று பெற்றது.உலகிலேயே இக்தகைய தரச் சான்று பெற்ற முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் சத்யம்தான்.
2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டன.
2003-ஆம் ஆண்டில் உலக வங்கிக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப சேவைகளைச் செய்யும் ஒப்பந்தம் சத்யம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது.
2006-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டியது, அதுவே 2008-ஆம் ஆண்டில் இரண்டு பில்லியன் டாலர்களானது.
சத்யம் நிறுவனத்தை உலகின் முதன்மை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற தனது லட்சியத்தாலும், எல்லை இல்லாத கனவுகளாலும், தணியாத ஆசைகளாலும் தூண்டப்பட்ட ராசுவின் தொடர் முயற்சிகளால் பெரும் வளர்ச்சி கண்டது சத்யம்.
இத்தனை முன்னேற்றங்கள் அடைந்த பின்னரும் கூட பின்னரும் எளிமையின் அடையாளமாகத்தான் இருந்தார் ராசு, அலுவலகத்திற்கு வரும் போது தனது ஊழியர்களைப் போலவே சத்யம் நிறுவன சின்னம் பொறிக்கப்பட்ட நீல நிற சட்டையைத்தான் அணிந்து வந்திருக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 56 லட்சம் மதிப்புள்ளதாக இருந்த சத்யம் நிறுவனத்தை, இந்த இருபது ஆண்டுகளில் - இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக - இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றி விட்டார் ராமலிங்க ராசு.
சத்யம் ராசு தனது எந்தக் கனவுகளால் சத்யம் நிறுவனத்தை உயர்த்தினாரோ அதே கனவுகள்தான் இன்று அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விட்டது.
எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்ற சத்யம் ராசுவின் பேராசைதான் அவரின் இன்றைய நிலைக்கு வழிவகுத்து விட்டது.
சத்யம் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திக் காட்ட வேண்டும், மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விடத் தனது நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற லட்சியங்களோடு சத்யம் ராசுவின் பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பேராசையும் சேர்ந்து கொண்ட போது அவற்றை நிறைவேற்ற அவர் குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கினார்.
2001-ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் நிறுவனத்தின் மதிப்பினை உயர்த்திக் காட்ட நிறுவனத்தின் லாபத்தை அதிகப்படுத்திக் காட்டினார்.
அதாவது சத்யம் நிறுவனம் ஈட்டிய உண்மையான லாபத்தை விட அதிகளவு லாபம் ஈட்டியதாகப் பொய்யாகக் கணக்குக் காட்டினார்.நிறுவனத்தின் லாபப் பணம் வங்கிகளில் ரொக்கக் கையிருப்பாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் கணக்குகள் காட்டினார்.
இந்தப் பொய்யானது கடந்த ஏழு ஆண்டுகளாக அதாவது 28 காலாண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து இன்று கிட்டத்தட்ட 8000 கோடிகளாக மாறி உள்ளது.
ஒரு வங்கியில் முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அந்தப் பணத்தையே வேறு வங்கிகளில் இதே போல முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.
வங்கிகளில் முதலீடு செய்த ஆதாரங்கள் மட்டுமே ஒவ்வொரு காலாண்டுக் கணக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.எப்போதுமே வங்கிக் கணக்குகளின் ஒட்டு மொத்த வரவு செலவுக் கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.
இதன் மூலம் தன்னிடம் இருக்கும் பணத்தைப் பல மடங்கு அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறார் சத்யம் ராசு.கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாயை வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து உள்ளதாக கணக்குகள் காட்டப்பட்டு உள்ளது. ஆனால் அப்படி எந்தப் பணமும் இல்லை என்பதுதான் உண்மை.
சத்யம் நிறுவனத் தலைவர் ராசுவை மட்டும் இந்த மோசடியில் குற்றம் சொல்வது சரியாக இருக்காது, சத்யம் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய நிதி மோசடிகளால் தங்கள் பணத்தை இழந்து உள்ள முதலீட்டாளர்களும் இந்த மோசடிக்குப் பொறுப்புதான்.
தாங்கள் முதலீடு செய்துள்ள ,
சத்யம் நிறுவனம் காட்டிய ஒவ்வொரு காலாண்டு கணக்கிலும் அந்த நிறுவனத்தின் லாபத்திற்கும், இதே தகவல் தொழில் நுட்பத் துறைகள் உள்ள மற்ற நிறுவனங்கள் இதே காலாண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கும் இருந்த வேறுபாடுகள் என்ன? எவ்வளவு? ஏன்?
இவ்வளவு பணத்தை(8000 கோடிகள்) எதற்காக ரொக்கக் கையிருப்பாக வெறுமனே வைத்திருக்க வேண்டும்,
அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலை மேலும் விரிவு படுத்தலாமே,
வங்கிகளில் 8000 கோடிகளை வங்கியில் வைப்பு நிதியாக வைத்துள்ள ஒரு நிறுவனம் ஏன் பங்கு சந்தைகளில் தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன் மூலம் நிதி திரட்ட முனைய வேண்டும்,
திடீரென நிறுவனத்தின் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் எதனால் ஏற்பட்டன?
2007 ஆம் ஆண்டில் உலக வங்கியின் ஒப்பந்தத்தைப் பெற சத்யம் நிறுவனம் செய்த முறைகேடுகள் என்ன?
குறிப்பிடத் தகுந்த லாபத்தில் இயங்காத மைத்தாஸ் நிறுவனத்தை சத்யம் நிறுவனத்தின் மிகப் பெரும் நிதியைக் கொண்டு திடீரென வாங்க முற்பட்டது ஏன்?
இது போன்ற எந்தக் கேள்விகளையும் கேட்காமல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமலும் மெத்தனமாக இருந்த முதலீட்டாளர்களும்,
ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்த இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்காமல் இருந்த மத்திய மாநில அரசுகளும்,
இவற்றை எல்லாம் கண்க்கனிக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ள பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமும் இந்த மோசடிக்கு காரணம்தானே.
ஆந்திர நடுத்தரவர்க்கப் பட்டதாரி இளைஞர்களின் இதயத்தில் வழிகாட்டியாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்த மக்கள் பணிகள் மூலமாக மக்கள் தொண்டனாகவும், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவ்வப்போது கூறிய அறிவுரைகளால் பெரும் அறிவு ஜீவியாகவும் அறியப்பட்டு இருந்த சத்யம் ராமலிங்க ராசு தனது தணியாத பேராசைகளால் இன்று மோசடிப் பேர்வழி என்று பெயர் எடுத்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அடைக்கப் பட்டு உள்ளார்.
தனது இந்த நிலைக்குக் காரணம் என்ன? தனது தவறுகள் எங்கே ஆரம்பித்தன? எந்தத் தவறுகளைத் தன்னால் தவிர்த்திருக்க முடியும்? எந்தத் தவறுகளைத் தவிர்த்திருக்க முடியாது? என்பதை எல்லாம் ராமலிங்க ராசு இப்போது சிறைக்குள்ளே யோசித்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?
நன்றி - அறிவிழி
Showing posts with label சத்யம். Show all posts
Showing posts with label சத்யம். Show all posts
Friday, January 23, 2009
Tuesday, January 13, 2009
சத்யம் : பெயில் அவுட் அவசியமா ?
சத்யம் நிறுவனத்தை இந்திய அரசு, அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டிருக்கிறார் . இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்டது போன்ற பெயில் அவுட் சத்யம் நிறுவனத்திற்கு பொருந்தாது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சில நிறுவனங்களின் சரிவு கவிழ்த்து விடும் என்ற அச்சத்தால் தான் AIG போன்ற நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் பெயில் அவுட் செய்தது. லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சரிவு அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதனால் தான் லீமேன் திவாலாகியது.இங்கு கூட லீமேன் பிரதர்ஸ், சத்யம் நிறுவனம் போல ஊழல் எதுவும் செய்யவில்லை. லீமேன் பிரதர்ஸ் செய்த மோசமான முதலீடுகள் காரணமாக எழுந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தான் அந் நிறுவனமும், வேறு பல அமெரிக்க நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டன. தவிரவும் மிக மோசமான விலையை கொண்டிருந்த CDO (Collateralized debt obligation) பத்திரங்களை கொண்ட நிறுவனங்கள் சரிவது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பல வகையிலும் சரிவை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் பெயில் அவுட் என்பதையே அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்தது. இங்கு நிறுவனங்களிடம் இருக்கும் இந்த CDOக்களை அரசாங்கம் வாங்கிக் கொள்ளும். We need to Bailout Main Street, not Wall Street என்ற கோஷம் இங்கு பலமாக ஒலித்தது.

ஆனால் இந்தியாவில் உள்ள சூழ்நிலை என்ன ? சத்யம் நிறுவனத்தை ஏன் இந்திய அரசாங்கம் பெயில் அவுட் செய்ய வேண்டும் ? சத்யம் நிறுவனத்தின் சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. அதுவும் தவிர அமெரிக்க நிறுவனங்கள் போல மோசமான முதலீடுகளால் சத்யம் இந்தச் சரிவை அடையவில்லை. மாறாக ராமலிங்க ராஜூ செய்த தில்லுமுல்லுகள் தான் இந் நிறுவனத்தை சரிவுக்குள்ளாக்கியது. அப்படியான சூழ்நிலையில் சத்யம் நிறுவனத்தை ஏன் அரசாங்கம் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் ?
சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தான் ஒரே காரணம் என்றால், அதற்கு வேறு வழிகள் உள்ளன. இன்போசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தினை வாங்குவது போன்றவை தான் தீர்வாக முடியுமே தவிர சத்யம் நிறுவனத்தை அரசாங்கம் பெயில் அவுட் செய்வது அல்ல. அமெரிக்காவில் கூட மோசமான நிலையில் இருந்த Washington Mutual போன்ற நிறுவனங்களை JP Morgan Chase போன்ற நிறுவனங்கள் வாங்கின. இதைத் தான் இந்தியாவிலும் அரசாங்கம் செய்ய வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொடுத்து சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய
அவசியம் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் பல் வேறு இடங்களில் இருந்த பல தொழிற்சாலைகள், ஆலைகள் மூடப்பட்ட பொழுது ஏன் இந்திய அரசுக்கு எந்த ஆலையையும், அதனால் பாதிப்பு அடைந்த தொழிலாளிகளையும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும். என் ஊருக்கு அருகில் இருக்கும் கடலூர் சிப்காட் மற்றும் புதுவையில் பல ஆலைகள் மூடப்பட்டன. அதில் பணியாற்றிய பல தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். பொருளாதார ரீதியில் நசிந்து போயினர். அவர்களை எந்த அரசாங்கமும் காப்பாற்ற வில்லை. ஆந்திராவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல விவசாயிகள் தங்களின் விவசாயம் நசிந்து போய் தற்கொலை செய்து கொண்ட பொழுது இந்திய அரசாங்கம் அவர்களை பெயில் அவுட் செய்ததா ? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.ஜெயலலிதா அரசாங்கம் அரசு அரசு ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது, அதுவும் 40-45 வயது மதிக்கத்தக்கவர்கள் அரசு வேலை தவிர வேறு வேலைகள் தெரியாத நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது ஊடகங்கள் தொடங்கி, நீதிமன்றம் வரை அதற்கு வக்கலாத்து தான் வாங்கினார்கள். அவ்வாறு வக்காலத்து வாங்கிய என்னுடைய சக ஐடி தோழர்களையும் நான் அறிவேன்.
ஆனால் இப்பொழுது இதே ஊடகங்கள் அலறுகின்றன.
சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 800 பணிப்பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே ஊடகங்களுக்கு எழுந்த கவலையும், அக்கறையும் நெஞ்சை உருக்கியது. ஊடகங்கள் ஓங்கி குரலெழுப்பின. உடனே அவர்கள் அனைவரையும் ஜெட் ஏர்வேஸ் மறுபடியும் பணிக்கு அமர்த்திக் கொண்டது. ஆனால் இந்த கருணை எல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கோ, விவாசாயிகளுக்கோ கிடையாது.
நன்றி - சசி
Monday, January 12, 2009
விப்ரோவிற்கு உலகவங்கி தடை
ஒப்பந்த அடிப்படையில் உலக வங்கிக்காக வேலை பார்த்து வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ஓப்பந்தத்தை டிசம்பர் 25ம் தேதி உலக வங்கி, எட்டு வருடங்களுக்கு ரத்து செய்திருந்தது.ஒப்பந்த விதிமுறையை மீறி, உலக வங்கி ஊழியர்களுக்கு ஆதாயங்களை செய்து கொடுத்ததாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மீது உலக வங்கி குற்றம் சாட்டி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. எங்கள் வேலை எதையும் எட்டு வருடங்களுக்கு செய்ய கூடாது என்று சத்யம் கம்ப்யூட்டர்ஸிடம் உலக வங்கி தெரிவித்து இருந்தது.
இப்போது அந்த வரிசையில் விப்ரோ மற்றும் மெகாஷாப்ட் நிறுவனத்தையும் உலக வங்கி சேர்த்திருக்கிறது.
அந்த இரு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் உலக வங்கி நிறுத்தி வைத்திருக்கிறது. இது குறித்து இன்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், சத்யம் கம்ப்யூட்டஸை போலவே விப்ரோ மற்றும் மெகாஷாப்ட் நிறுவனங்களும் ஒப்பந்தத்தை மீறி எங்கள் ஊழியர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. எனவே விப்ரோ, நான்கு வருடங்களுக்கு, அதாவது 2011 வரை எங்கள் வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறோம். இன்னொரு ஐ.டி.நிறுவனமான மெகாஷாப்ட்டுடனான ஒப்பந்தமும், 2007 இலிருந்து நான்கு வருடங்களுக்கு தடை செய்யப்படுகிறது என்று அது தெரிவித்திருக்கிறது.
உலக வங்கியின் இந்த நடவடிக்கை குறித்து விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி கருத்து தெரிவிக்கையில், இதனானெல்லாம் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படாது என்றார். மெகாஷாப்ட்டும், இந்த நடவடிக்கையால் எங்களது வருமானம் ஏதும் பாதிக்காது என்று கருத்து தெரிவித்திருக்கிறது.
Friday, January 09, 2009
சத்யம் என்கிற பொய் மெய்யானது எப்படி?
நன்றி - ஆர்.செல்வகுமார்நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள். வங்கியில் நயா பைசா இல்லை. ஆனால் ஒரு இலட்சம் இருப்பதாக கதை விடுகிறீர்கள். இன்னும் ஒரு இலட்சம் இருந்தால் பத்து இலட்சம் ஆக்கிவிடலாம் என்று மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். அவர்களும் ஒரு இலட்சம் தருகிறார்கள். உங்களைப் பொறுத்தவரையில் கம்பெனிக்கு முதல் ஒரு இலட்சம் வந்துவிட்டது. ஆனால் முதலீடு செய்த மற்றவர்களைப் பொறுத்தவரையில், ஏற்கனவே நீங்கள் (பொய்யாகச் சொன்ன) ஒரு இலட்சம், இவர்களுடைய ஒரு இலட்சம் இரண்டையும் சேர்த்து தற்போது கம்பெனியில் இரண்டு இலட்சம் உள்ளது.
ஆக கையிலிருக்கும் ஒரு இலட்சத்தை இரண்டு இலட்சமாக உலகத்துக்கு அறிவிக்கிறீர்கள். இதைப் பார்த்து மேலும் பலர் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள். நீங்களும் வழக்கம் போல 5 இலட்சம் வந்தால் அதை 10 இலட்சம் என்றீர்கள். 20 இலட்சம் வந்தால் அதை 40 இலட்சம் என்றீர்கள். முதலீடு செய்தவர்கள் உங்களை சந்தேகப் படவில்லை. ஏனென்றால் நீங்கள் காண்பித்தது இலாபக் கணக்கு. உங்களை முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஷேர் மார்கெட்டும் நம்புகிறது. அரசாங்கமும் நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் நம்புகின்றன. அல்லது அவர்களை நம்ப வைக்க நீங்கள் ஒரு 'இலாப நாடகம்' ஆடிக் கொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு கட்டத்தில் கம்பெனியின் வங்கியிருப்பு 5400 கோடி ரூபாயாகிறது. நீங்கள் 8000ம் கோடி ரூபாய் என்று அறிவித்தால் உங்கள் கம்பெனி என்ன ஆகும். இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி நிறுவனமாகும். சத்யம் நிறுவனம் அப்படித்தான் பொய்க் கணக்குகளால் விசுவரூபமெடுத்தது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திறமையாக வழிநடத்தியவர் திருவாளர் ராமலிங்க ராஜீ. அவருடைய சரித்திரம் 'சத்யம் என்ற பெயரில் பொய்யை மெய்யாக்கிய சரித்திரம்'.
சத்யம் பொய்யென அம்பலமாது எப்படி?
Wine-Women-Wealth இந்த மூன்றும் அதிகமாகிவிட்டால் எப்பேர்பட்ட கொம்பனுக்கும் நிலை தடுமாறிவிடும். ராமலிங்க ராஜீ முதல் இரண்டு 'W'க்களில் எப்படி எனத் தெரியாது. ஆனால் மூன்றாவது 'W'வில் ஆள் படு வீக். குறிப்பாக நிலத்தை வளைத்துப்போட்டு மேல் விலைக்கு விற்பதில் பயங்கர கில்லாடி. இதெற்கென்றே ஒரு மெகா ரியல் எஸ்டேட் நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு ஆந்திராவிலுள்ள மிக முக்கியமான நிலங்களும், நில ஆவணங்கள் எல்லாம் இவருடைய குடும்பத்தாரின் பெயரில் உள்ளது. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? MAYTAS. SATYAM இந்த பெயரை அப்படியே ஒவ்வொரு எழுத்தாக பின்னோக்கி எழுதினால் அதுதான் MAYTAS. விதியின் விளையாட்டைப் பாருங்கள். தெரிந்தோ தெரியாமலோ சத்யம் ரிவர்ஸ் கியரில் பயணிக்க MAYTAS நிறுவனம்தான் காரணம்.
MAYTAS நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து வந்தது?
திருவாளர் ராஜீ, நினைத்தபோதெல்லாம் தப்பான இலாப கணக்கு காட்டி பங்குச் சந்தையில் சத்யம் நிறுவனத்தின் விலை உயரும்படி பார்த்துக் கொண்டார். காரணம் SATYAM நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் ராஜீவிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் இருந்தன. அதனால் அவருக்கும், அவருடைய குடும்பத்துக்கும் கொள்ளை இலாபம். இலாபத்தை என்ன செய்வது? MAYTAS நிறுவனத்தில் முதலீடு செய்தார். MAYTAS நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக ஆந்திராவிலிருந்த நிலங்களை எல்லாம் வளைக்கத் தொடங்கியது.
SATYAM - MAYTAS பொய்யும் மெய்யும்
ஒரு புறம் பொய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் SATYAM.
மறுபுறம் பொய்பணத்தால் சம்பாதித்த மெய் பணத்தால் நிமிர்ந்து நிற்கும் MAYTAS.
ராமலிங்க ராஜீ ஆந்திர மக்களின் கனவு நாயகாக உயர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வளையத்திற்குள் வந்தார். பொய் மூட்டையான சத்யம் நிறுவனத்தின் செல்வாக்கை வைத்து பில் கிளிண்டனை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். அப்போதைய லேப்டாப் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய நண்பரானார். கேட்கவே ஆளில்லை. SATYAM செல்வாக்கை தந்தது. MAYTAS நிலங்களைக் குவித்தது.
ஆட்சி மாற்றம் - சத்யத்திற்கு வந்த சோதனை
ஆட்சி மாறியது. சந்திரபாபு நாயுடுவிற்குப் பதில் ராஜசேகர ரெட்டி வந்தார். இந்திய அரசியல் வழக்கப்படி, முந்தைய அரசின் செல்வாக்கான நபர்கள் எல்லாம் தற்போதைய அரசின் சந்தேக வலைக்குள் வந்தார். முதலில் சிக்கியவர் ராமலிங்க ராஜீ. ஆனால் நீண்ட காலம் அவரை ஒதுக்க முடியவில்லை. சத்யம் ஏற்படுத்திய ஒளிவட்டமும், MAYTAS நிறுவனத்தின் பண வட்டமும் தற்போதைய முதல்வரையும் மசிய வைத்தது. வலையை விரித்தவரே வலையில் வீழ்ந்தார். மீண்டும் அரசுக்கு நெருக்கமானார் ராஜீ.
நக்ஸலைட்டுகள் வழியாக முதல் புகைச்சல்
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய வளர்ச்சி பற்றிய சந்தேகங்கள் புகைய ஆரம்பித்தன. முதலில் பகிரங்கமாக எதிர்த்தவர்கள் ஆந்திர நக்ஸலைட்டுகள். பணத்தால் ஏழை நிலங்களை வளைக்கிறார் என்று போராடினார்கள். ஆனால் கொடி பிடித்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்பதால் மக்களின் கவனம் பெறவில்லை. பணக்கார மீடியாக்களும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.
மெட்ரோ ரயில் வடிவில் அடுத்த புகைச்சல்
அடுத்து வந்தது மெட்ரோ ரயில் புராஜக்ட். இந்த புராஜக்டுக்கு ஆலோசகராக திரு. Sridhar நியமிக்கப்பட்டார். Sridhar கடந்த ஆண்டின் 'மிகச் சிறந்த இந்தியராக' என்.டி.டிவியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மெட்ரோ ரயிலை தனி மனிதனாக போராடி டெல்லி மக்களுக்கு பெற்றுத் தந்த சாதனையாளர், நேர்மையாளர், அரசியல் மற்றும் பண சூழ்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்காதவர். ஆனால் அவரை வளைக்க நினைத்தார் ராஜீ. காரணம் மெட்ரோ ரயிலுக்கு தேவையான நிலங்களை வைத்திருந்தவர் ராஜீ, அதாவது அவருடைய நிறுவனமான MAYTAS. சாதா நிலங்களை விலை உயர்த்தி மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வாங்குமாறு திரு. Sridharஐ நிர்பந்தித்தார். அவர் இந்த ஊழலுக்கு உடன்பட மறுத்து கண்டனக்குரல் எழுப்பினார். எப்போதுமே நேர்மையின் குரல் அமுக்கப்படும். அதன்படியே ராஜீவைக் கண்டிக்க வேண்டிய அரசு திரு. Sridhar அவர்களை தேவையில்லை என திருப்பி அனுப்பியது. வழக்கம்போல பணக்கார மீடியாக்கள் இதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாம் பணம் செய்யும் மாயம்.
கிளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சிகள் - உஷாரான ராஜீ
கொஞ்சம் கொஞ்சமாக புகைய ஆரம்பித்ததும் ராஜீ உஷாரானார். இங்கேதான் அவருடைய கிரிமினல் மூளை உச்சத்திற்கு வந்தது. அவருடைய முன்னேற்பாட்டின்படி மீண்டும் பொய்யான தகவல்களை வைத்து சத்யம் ஷேர் மார்கெட்டில் எகிறியது. அப்போது பெரும்பாலான ஷேர்களை வைத்திருந்த ராஜீவும், அவருடைய குடும்பத்தாரும், அவருடைய பணக்கார கிரிமினல் நண்பர்களும் தங்களுடைய ஷேர்களை விற்று பெரும் பணம் பார்த்தார்கள். அதாவது சத்யம் நிறுவனத்தின் மதிப்பு 8000ம் கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டப்பட்டபோது, சத்யம் நிறுவனத்தில் அவருக்கிருந்த பங்குகள் வெறும் 5% மட்டுமே. அதாவது இனிமேல் சத்யம் திவால் ஆனால் கூட ராஜீவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் நயா பைசா கூட கையை விட்டுப் போகாது. நம்மைப் போன்ற அப்பாவிகளுக்குத்தான் பட்டை நாமம்.
ரியல் எஸ்டேட் வீழ்ச்சி - பொய்யின் முதல் வீழ்ச்சி
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுடன், அமைஞ்ச கரையில் நிலங்களின் விலை குறைந்தது. ஆந்திராவில் குறையாமலிருக்குமா? அங்கேயும் மளமளவென விலை சரிய ஆரம்பித்தது. கிளைமாக்ஸில் வில்லன் எதிர்பாராமல் ஏமாறுவது போல, ராஜீ எதிர்பாராத இந்த சரிவு அவருடைய ரியல் எஸ்டேட் பொக்கிஷமான MAYTAS நிறுவனத்தை பாதித்தது. என்ன செய்வது என யோசித்தார். அவருடைய கிரிமினல் மூளை மீண்டும் அபாரமாக வேலை செய்தது.
ஒரே கல்லில் பல மாங்காய் - MAYTAS, SATYAM-மாக மாற முயற்சித்தபோது
ஒரு புறம் 5400 கோடி ரூபாய் மதிப்புள்ள சத்யம் 8000 கோடி ரூபாயாக பொய் விசுவரூபம்.
மறு புறம் 7000 கோடி ரூபாய் மதிப்புள்ள MAYTAS அதளபாதாளத்தில் விழப் போகும் அபாயம்.
சத்யத்தில் பணமில்லை, ஆனால் இருப்பதாக கணக்கு. MAYTASல் பணம் உண்டு, ஆனால் ரியல் எஸ்டேட் வீழ்ச்சியால் கரைந்து கொண்டிருக்கிறது. தடுப்பது எப்படி? அப்போது உதயமான ஐடியாதான் SATYAM நிறுவனத்தின் (இல்லாத) பணத்தால் MAYTASஐ வாங்குவது.
அப்படி வாங்கிவிட்டால் சத்யம் நிறுவனத்திலிருந்து 7000ம் கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தினருக்கு வந்துவிடும். அதெப்படி...சத்யத்தில் இருப்பதே 5400 கோடி ரூபாய்தானே? பிறகெப்படி ஏழாயிரம் கோடி கிடைக்கும்? மீதி 1600 கோடிக்கு எங்கே போவது? நாமாக இருந்தால் இப்படித்தான் கவலைப்படுவோம். ஆனால் ராமலிங்க ராஜீவிற்கு இது ஒரே கல்லில் பல மாங்காய்கள். அக்கவுண்ட்சில் ஒரே ஒரு வரி எழுதுவது மூலம் 7000ம் கோடி ரூபாய் SATYAM நிறுவனத்திலிருந்து அவருடைய மனைவிக்கும் மக்களுக்கும் வந்துவிடும். ஆக MAYTAS நிறுவனம் Safe. இது முதல் மாங்காய்.
உண்மையில் கைமாறியது வெறும்(?) 5400 கோடி ரூபாய்தான். மீதி 1600 கோடி ரூபாய் பற்றி ராஜீ வாய் திறக்கமாட்டார். ஏனென்றால் இப்படி கை மாறியதன் மூலம் சத்யம் நிறுவனத்தில் 7000 கோடி ரூபாய் இருந்ததாக கணக்கில் வந்துவிடும். அதாவது இத்தனை நாள் வெளியில் சொல்லாமல் காப்பாற்றி வந்த பொய் உண்மையாகிவிடும். இதனால் SATYAM நிறுவனம் Safe. இது இரண்டாவது மாங்காய்.
எந்த பிரச்சனை வந்தாலும் உலகப் பொருளாதார பிரச்சனையால் ரியல் எஸ்டேட் அவுட், ஐ.டியும் அவுட். அதனால் சத்யம் நிறுவனமும் அவுட் என்று ஒற்றை வரியில் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் . இது மூன்றாவது மாங்காய்.
புகைச்சல் கொளுந்துவிட்டு எரிந்த கதை - உலக வங்கி தடை மற்றும் போர்டு மெம்பர்கள் ராஜினாமா
சுருட்டுவதையெல்லாம் சுருட்டிக்கொண்டு, பட்சி பறக்கப் பார்க்கிறது என்று சிலர் மோப்பம் பிடித்துவிட்டார்கள். சில போர்டு மெம்பர்களுக்கு இது துளியும் பிடிக்கவில்லை. விஷயம் போர்டுக்கு வெளியே கசிந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸ் சரிந்து கொண்டிருக்கும் வேளையில் எதற்காக MAYTASஐ வாங்கி நஷ்டப் படவேண்டும் என்று பங்குதாரர்கள் எதிர்ப்பை காட்டினார்கள். இது ராமலிங்க ராஜீவிற்கு வந்த முதல் தோல்வி.
இதே வேளையில் உலக வங்கி சுதாரித்துக் கொண்டது. இல்லாத இருப்பைக் காட்டி உலக வங்கியிடமிருந்து சத்யம் நிறுவனம் பல சலுகைகளை அனுபவித்து வந்திருப்பதாக குற்றம் சுமத்தி அடுத்த 8 வருடங்களுக்கு தடை விதித்தது.
கிளைமாக்ஸ் - பொய்யை மெய்யாக்க நினைத்தபோது . . .
உலக வங்கியே தடை விதித்த போதும் ராஜீ தளரவில்லை. நான் நேர்மையாளன், என்னை சந்தேகப் படாதீர்கள் என்று தைரிய முகம் காட்டினார். உலக வங்கியை எதிர்த்து நோட்டீஸ் விட்டார். ஆந்திர மாநில அரசு அவருக்கு ஆதரவளித்தது. எனவே மீண்டும் இரு கம்பெனிகளையும் எதிர்ப்புகளையம் மீறி இணைக்க முயற்சித்தார். ஆனால் விஷயம் திடீரென பெரிதாகி தெருக்கோடி வரைக்கும் வந்தவுடன், இணைப்பு இல்லை என்று பின்வாங்கினார். இந்த நெருக்கடியில் சத்யம் நிறுவனத்தின் கணக்குகள் அலசப்பட்டன. ஊதிப் பெருசாக்கப்பட்ட ஊழல் விசுவரூபமெடுத்து. 5400 கோடி ரூபாய் 8000 கோடி ரூபாயாக போலியாக உயர்த்திக் காட்டப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
சத்யம் நிறுவனத்தின் ஆபீஸ் பியூன் முதல் பிசினஸ் பார்ட்னர்கள் வரை திடீரென ஒன்று திரண்டு நெருக்கடி தர ஆரம்பித்ததும், "ஆமாம்.. நான் தவறு செய்துவிட்டேன்" என்று ராஜீ குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சத்யம் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு என்ன? பூஜ்யம்.
5040 கோடி ரூபாயை 7000 கோடி ரூபாயாக உயர்த்திக் காட்டினேன் என்று சொல்லி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டு அவர் தலை மறைவாகிவிட்டார்.
ஆனால் அவர் சொல்லாமல் விட்டது என்ன தெரியுமா? சத்யம் நிறுவனத்திற்கு இருக்கும் 1000 கோடி ரூபாய் கடன். பிரச்சனை முற்றியவுடன் 140 ரூபாய்க்க விற்ற சத்யம் நிறுவனப் பங்கு பல்டி அடித்து 30 ரூபாய்க்கு வந்து விட்டது.
அதாவது சுருக்கமாகச் சொன்னால் சத்யம் நிறுவனம் இன்று ஒரு பூஜ்யம்.
யார் குற்றவாளி?
முதல் குற்றவாளி திருவாளர் ராமலிங்க ராஜீ.
அடுத்தது அவருக்குத் (கணக்கை திரித்து எழுத) துணைபோன ஆடிட்டர் கும்பல்கள்.
தப்பு செய்ய தைரியம் கொடுத்து, துணைபோன அரசியல்வாதிகள், அரசுகள்
எந்தக் கேள்வியும் கேட்காத வங்கிகள்.
கடைசியாக . . .
நமது சமூகம்தான் . . . நாம்தான் . . . குற்றவாளி. '50 பைசா சில்லறை இல்ல, இறங்கும்போது வாங்கிக்கோ' என்று சொல்கிற கண்டக்டரை சட்டையைப்பிடித்து மிரட்டுகிறது சமூகம். அதே சமயம் மினிமம் பேலன்ஸ் இல்ல, அதனால 500 ரூபாய் பிடிச்சிட்டோம் என்று சொல்கிற வங்கிக்கு இதே சமூகம் சலாம் போடுகிறது. பணக்காரனும், அதிகாரத்தில் இருப்பவனும் செய்வதெல்லாம் சரி. ஒரு வேளை அது தவறென்றாலும் அதை தட்டிக்கேட்க பயம். இது தான் இன்றைய நிலை.
இது மாறினால் சத்யம் சத்யமாகவே இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)


