சத்யம் ராமலிங்க ராசு தனது தந்தை பைர் ராசு நினைவாக ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பைர் ராசு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி, அந்தப் பகுதியில் உள்ள பல குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி வருகிறார்.
சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளை அந்தப் பகுதியல் உள்ள ஆறு மாவட்டங்களில் முனைப்புடன் செயல்படுகிறது.அந்த ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 கிராமங்களில் இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
சத்யம் ராஜுவின் இந்த அறக்கட்டளையின் மூலம் பலன் அடைந்த ஏழை மக்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சத்தைத் தாண்டும் என்பதை அறியும் போது உண்மையிலேயே வியப்பாகத்தான் இருக்கிறது.
வருமான வரி விலக்கைப் பெறுவதற்காகத் தான் இது போன்ற செயல்களில் சத்யம் ராசு ஈடு பட்டார் என்று கூறி அவரின் தொண்டுகளை நாம் எளிதில் ஒதுக்கி விடக் கூடாது. ஏனென்றால் சத்யம் ராசுவை விட பல மடங்கு வருமானம் ஈட்டும் எத்தனையோ பெரும் தொழில் அதிபர்கள் இது போன்ற தொண்டுகளைச் செய்யாமல் அதே நேரத்தில் வருமான வரியையும் கட்டாமல் தவிர்க்க என்ன செய்கிறார்கள் என்று நாம் பார்க்கிறோம் இல்லையா?
ஆந்திர மாநிலத்தில் பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரியான ராமலிங்க ராசு தந்து வாழ்வில் எப்படி முன்னேறினார் என்பதைப் பார்ப்போம்,
1987 -ஆம் ஆண்டில் வெறும் 20 ஊழியர்களுடன் தான் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். நிறுவனத்தை ஆரம்பித்தார் ராமலிங்க ராசு.
1990 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மொத்த விற்று முதல் வெறும் ஐம்பத்தாறு லட்சம் ரூபாய் மட்டுமே.
1991-இல் சத்யம் நிறுவனம் தனது முதல் வெளிநாட்டு தொழில் ஒப்பந்தத்தைப் பெற்றது.
1999-இல் அமெரிக்காவின் நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்டது சத்யம் நிறுவனம். நாஸ்டாக்கில் பட்டியலிடப் பட்ட முதல் இந்திய இணைய நிறுவனம் சத்யம்தான்.
2000-த்தில் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்ட உலகின் தலை சிறந்த முன்னோடி தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்ட பெருமையைப் பெற்றது சத்யம் நிறுவனம்.
2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனம் ஐ.எஸ்.ஒ தரச் சான்று பெற்றது.உலகிலேயே இக்தகைய தரச் சான்று பெற்ற முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் சத்யம்தான்.
2001-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டன.
2003-ஆம் ஆண்டில் உலக வங்கிக்குத் தேவையான தகவல் தொழில் நுட்ப சேவைகளைச் செய்யும் ஒப்பந்தம் சத்யம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது.
2006-ஆம் ஆண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருவாய் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டியது, அதுவே 2008-ஆம் ஆண்டில் இரண்டு பில்லியன் டாலர்களானது.
சத்யம் நிறுவனத்தை உலகின் முதன்மை நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற தனது லட்சியத்தாலும், எல்லை இல்லாத கனவுகளாலும், தணியாத ஆசைகளாலும் தூண்டப்பட்ட ராசுவின் தொடர் முயற்சிகளால் பெரும் வளர்ச்சி கண்டது சத்யம்.
இத்தனை முன்னேற்றங்கள் அடைந்த பின்னரும் கூட பின்னரும் எளிமையின் அடையாளமாகத்தான் இருந்தார் ராசு, அலுவலகத்திற்கு வரும் போது தனது ஊழியர்களைப் போலவே சத்யம் நிறுவன சின்னம் பொறிக்கப்பட்ட நீல நிற சட்டையைத்தான் அணிந்து வந்திருக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் 56 லட்சம் மதிப்புள்ளதாக இருந்த சத்யம் நிறுவனத்தை, இந்த இருபது ஆண்டுகளில் - இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக - இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றி விட்டார் ராமலிங்க ராசு.
சத்யம் ராசு தனது எந்தக் கனவுகளால் சத்யம் நிறுவனத்தை உயர்த்தினாரோ அதே கனவுகள்தான் இன்று அந்த நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விட்டது.
எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டும், பெரும் பணம் ஈட்ட வேண்டும் என்ற சத்யம் ராசுவின் பேராசைதான் அவரின் இன்றைய நிலைக்கு வழிவகுத்து விட்டது.
சத்யம் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திக் காட்ட வேண்டும், மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை விடத் தனது நிறுவனம் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற லட்சியங்களோடு சத்யம் ராசுவின் பெரும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பேராசையும் சேர்ந்து கொண்ட போது அவற்றை நிறைவேற்ற அவர் குறுக்கு வழிகளில் இறங்கத் தொடங்கினார்.
2001-ஆம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு காலாண்டிலும் வெளியிடும் சத்யம் நிறுவனத்தின் கணக்குகளில் நிறுவனத்தின் மதிப்பினை உயர்த்திக் காட்ட நிறுவனத்தின் லாபத்தை அதிகப்படுத்திக் காட்டினார்.
அதாவது சத்யம் நிறுவனம் ஈட்டிய உண்மையான லாபத்தை விட அதிகளவு லாபம் ஈட்டியதாகப் பொய்யாகக் கணக்குக் காட்டினார்.நிறுவனத்தின் லாபப் பணம் வங்கிகளில் ரொக்கக் கையிருப்பாக முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் கணக்குகள் காட்டினார்.
இந்தப் பொய்யானது கடந்த ஏழு ஆண்டுகளாக அதாவது 28 காலாண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து இன்று கிட்டத்தட்ட 8000 கோடிகளாக மாறி உள்ளது.
ஒரு வங்கியில் முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு, பின்னர் அந்த வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து, அந்தப் பணத்தையே வேறு வங்கிகளில் இதே போல முதலீடு செய்து அதற்குரிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு இருக்கிறார்.
வங்கிகளில் முதலீடு செய்த ஆதாரங்கள் மட்டுமே ஒவ்வொரு காலாண்டுக் கணக்குகளிலும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.எப்போதுமே வங்கிக் கணக்குகளின் ஒட்டு மொத்த வரவு செலவுக் கணக்குகள் தாக்கல் செய்யப்படவில்லை.
இதன் மூலம் தன்னிடம் இருக்கும் பணத்தைப் பல மடங்கு அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறார் சத்யம் ராசு.கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாயை வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்து உள்ளதாக கணக்குகள் காட்டப்பட்டு உள்ளது. ஆனால் அப்படி எந்தப் பணமும் இல்லை என்பதுதான் உண்மை.
சத்யம் நிறுவனத் தலைவர் ராசுவை மட்டும் இந்த மோசடியில் குற்றம் சொல்வது சரியாக இருக்காது, சத்யம் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய நிதி மோசடிகளால் தங்கள் பணத்தை இழந்து உள்ள முதலீட்டாளர்களும் இந்த மோசடிக்குப் பொறுப்புதான்.
தாங்கள் முதலீடு செய்துள்ள ,
சத்யம் நிறுவனம் காட்டிய ஒவ்வொரு காலாண்டு கணக்கிலும் அந்த நிறுவனத்தின் லாபத்திற்கும், இதே தகவல் தொழில் நுட்பத் துறைகள் உள்ள மற்ற நிறுவனங்கள் இதே காலாண்டுகளில் ஈட்டிய லாபத்திற்கும் இருந்த வேறுபாடுகள் என்ன? எவ்வளவு? ஏன்?
இவ்வளவு பணத்தை(8000 கோடிகள்) எதற்காக ரொக்கக் கையிருப்பாக வெறுமனே வைத்திருக்க வேண்டும்,
அந்தப் பணத்தைக் கொண்டு தொழிலை மேலும் விரிவு படுத்தலாமே,
வங்கிகளில் 8000 கோடிகளை வங்கியில் வைப்பு நிதியாக வைத்துள்ள ஒரு நிறுவனம் ஏன் பங்கு சந்தைகளில் தனது பங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன் மூலம் நிதி திரட்ட முனைய வேண்டும்,
திடீரென நிறுவனத்தின் பங்குகளின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் எதனால் ஏற்பட்டன?
2007 ஆம் ஆண்டில் உலக வங்கியின் ஒப்பந்தத்தைப் பெற சத்யம் நிறுவனம் செய்த முறைகேடுகள் என்ன?
குறிப்பிடத் தகுந்த லாபத்தில் இயங்காத மைத்தாஸ் நிறுவனத்தை சத்யம் நிறுவனத்தின் மிகப் பெரும் நிதியைக் கொண்டு திடீரென வாங்க முற்பட்டது ஏன்?
இது போன்ற எந்தக் கேள்விகளையும் கேட்காமல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமலும் மெத்தனமாக இருந்த முதலீட்டாளர்களும்,
ஏழு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வந்த இந்த முறைகேடுகளைக் கண்டுபிடிக்காமல் இருந்த மத்திய மாநில அரசுகளும்,
இவற்றை எல்லாம் கண்க்கனிக்க வேண்டிய பொறுப்பினைக் கொண்டுள்ள பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமும் இந்த மோசடிக்கு காரணம்தானே.
ஆந்திர நடுத்தரவர்க்கப் பட்டதாரி இளைஞர்களின் இதயத்தில் வழிகாட்டியாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகச் செய்த மக்கள் பணிகள் மூலமாக மக்கள் தொண்டனாகவும், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அவ்வப்போது கூறிய அறிவுரைகளால் பெரும் அறிவு ஜீவியாகவும் அறியப்பட்டு இருந்த சத்யம் ராமலிங்க ராசு தனது தணியாத பேராசைகளால் இன்று மோசடிப் பேர்வழி என்று பெயர் எடுத்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அடைக்கப் பட்டு உள்ளார்.
தனது இந்த நிலைக்குக் காரணம் என்ன? தனது தவறுகள் எங்கே ஆரம்பித்தன? எந்தத் தவறுகளைத் தன்னால் தவிர்த்திருக்க முடியும்? எந்தத் தவறுகளைத் தவிர்த்திருக்க முடியாது? என்பதை எல்லாம் ராமலிங்க ராசு இப்போது சிறைக்குள்ளே யோசித்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?
நன்றி - அறிவிழி
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments