Tuesday, January 06, 2009

தமிழக வி.ஐ.பி.களுக்கு சப்ளையாகும்கள்ள துப்பாக்கிகள்


நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

மிழ்நாடே திருமங்கலம் இடைத்தேர்தலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, தூத்துக்குடி மக்கள் மட்டும் கள்ளத்துப்பாக்கி வியாபாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கள்ளத்தனமாக விற்கப்பட்ட துப்பாக்கிகளை வாங்கிய அனைவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி.கள் என்பதுதான் அதற்குக் காரணம். துப்பாக்கி வியாபாரிகளைப் பிடித்து கம்பீரம் காட்டவேண்டிய போலீஸாரோ, தேன்கூட்டில் கை வைத்த கதையாக அலறிக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஒரு துப்பாக்கி வாங்கிய தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவர், இன்னொரு துப்பாக்கியை வாங்கி அதை அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஐ.பி. ஒருவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த இருவரும் ஒரே ஒன்றியத்தில் எதிரும் புதிருமாக அரசியல் செய்கிறவர்கள் என்பதுதான் வேடிக்கை.

கள்ளத்துப்பாக்கி கும்பல் சிக்கியது எப்படி? அவர்களைப் பொறி வைத்துப் பிடித்த தனிப்படை டீமில் உள்ள போலீஸாரின் வாயைக் கிளறினோம்.

"தூத்துக்குடி ஏரியாவில் லோக்கல் ரவுடிகள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை சர்வசாதாரணமாக கள்ளத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருவது தெரிந்த விஷயம்தான். ஆனாலும், அவர்களை எந்த ஆதாரத்தில் பிடிப்பது என்று விழிபிதுங்கிக் கொண்டு இருந்தோம். அதே நேரத்தில் அவர்களுக்கு யார் துப்பாக்கிகள் சப்ளை செய்கிறார்கள் என்ற விஷயமும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி பகுதியில் கள்ளத் துப்பாக்கி விற்கும் கும்பல் நடமாடுவதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து துப்பாக்கி விற்பனையில் ஈடுபடுகிறவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் தயாரானோம். யார் மூலம் துப்பாக்கிகள் தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது என்பதை முதலில் கண்காணித்தோம். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் மேனேஜராக வேலை பார்த்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவன் மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அதற்குக் காரணம், அவன் தூத்துக்குடிக்கு வரும்போதெல்லாம், பணத்தை தாராளமாகச் செலவு செய்து செல்வச் செழிப்போடு திரிந்ததுதான். அதைத் தொடர்ந்து அவனது நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். எங்கள் விசாரணையில் அவன்தான் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்குத் தூப்பாக்கிகளை கடத்திக் கொண்டு வருகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, அவனை முதலில் மடக்கத் திட்டமிட்டோம். இரண்டு, மூன்று முறை அவன் எங்களிடம் இருந்து தப்பிவிட்டான். இந்த நிலையில், கடந்த 28_ம் தேதி தூத்துக்குடி வந்த அவனைத் தூக்கினோம். அப்போதும் அவனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது. ஆனாலும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று சாதித்தான். அவனை இங்கே வைத்து விசாரித்தால் சொல்லமாட்டான் என்று, வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்துக்குக் கொண்டு போனோம். அங்கே கொண்டுபோனதுமே மிரண்டுபோய் சொல்லத் தொடங்கினான். அங்கே எங்கள் பாணி விசாரணையே தனி. அதற்கு பயந்துபோன அவன் உண்மைகளை கக்கத் தொடங்கிவிட்டான். `நான் மட்டும் துப்பாக்கிகளை விற்கவில்லை. என்னுடன் மேலும் மூன்று பேர் உண்டு' என்று அவர்களது பெயர் விவரங்களைச் சொன்னான்.

அவன் சொன்ன தகவலை வைத்து முத்துகிருஷ்ணாபுரத்தில் லாரி ஷெட் வைத்திருக்கும் மாயாண்டி, இந்திரா நகரைச் சேர்ந்த பழனிக்குமார், கே.வி.கே. நகரைச் சேர்ந்த மணிமாறன் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தோம். இந்த நான்கு பேரும் சேர்ந்துதான் ஒருவர் மூலம் ஒருவருக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்திருக்கிறார்கள். சரி, யாருக்கெல்லாம் துப்பாக்கிகளை விற்பனை செய்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போய்விட்டோம். காரணம், அவர்களிடம் துப்பாக்கிகள் வாங்கிய அனைவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி.கள் என்பதுதான்!'' என்றவர்களிடம், `அந்த வி.ஐ.பி.கள் யார், யார்?' என்றோம். நீண்ட யோசனைக்கும் தயக்கத்திற்கும் பிறகே வி.ஐ.பி.களின் பெயர்களைச் சொன்னார்கள்.

"தூத்துக்குடி யூனியனில் சேர்மனாக இருக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த கருணாகரன், ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கு ஒரு துப்பாக்கி வாங்கியிருக்கிறார். அவரே இன்னொரு துப்பாக்கியை ஒரு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி, முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், மாவட்ட எம். ஜி.ஆர். மன்றத்தின் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனுக்குக் கொடுத்திருக்கிறார். தூத்துக்குடி வக்கீல் சங்கத் தலைவராக இருக்கும் பிரபு ஒரு துப்பாக்கி வாங்கியிருக்கிறார். தூத்துக்குடியில் இருந்து ஷிஃப்ட் ஆகி மதுரையில் செட்டில் ஆகிவிட்ட அடிதடிப் பேர்வழியான அசோக் என்பவர் இரண்டு துப்பாக்கிகள் கேட்டிருக்கிறார். அவருக்காக இரண்டு துப்பாக்கிகள் கொண்டு வந்தபோதுதான் எங்களிடம் சரவணக்குமார் சிக்கினான். உடனடியாக அவர்களைக் கையோடு அழைத்துச் சென்று மேற்படி வி.ஐ.பி.களின் வீடுகளில் சோதனை நடத்தினோம். கருணாகரன் வீட்டில் இருந்து ஒரு துப்பாக்கியைக் கைப்பற்றினோம். முன்னாள் அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்து துப்பாக்கியை கருணாகரனே வாங்கிக் கொடுத்துவிட்டார். வக்கீல் பிரபுவின் வீட்டில் இருந்த துப்பாக்கியைக் கைப்பற்றினோம்.

வி.ஐ.பி.களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் புத்தம் புதியவை. இன்னும் ஒரு தடவை கூட பயன்படுத்தவில்லை. அந்தத் துப்பாக்கியில் `மேட் இன் யு.எஸ்.ஏ.' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அவை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. அதே நேரத்தில் அவற்றின் தயாரிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. அவை சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. நேபாளத்தில் இருந்துதான் அந்தத் துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. அங்கே சில ஆயிரத்துக்கு வாங்கி, இங்கே கொண்டு வந்து ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்றிருக்கிறார்கள். இந்த நான்கு வி.ஐ.பி.களுக்கு மட்டும்தான் அவர்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்தார்களா? மேலும் வேறு யார் யாருக்கெல்லாம் விற்றிருக்கிறார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!'' என்றார்கள்.

நிருபர் என்று தெரிந்து கொண்டு நம்மை ஓரங்கட்டிய காக்கிகள் சிலர், "சார், இப்போது எங்களிடம் சிக்கியிருக்கும் இவர்கள் எல்லாம் கமிஷனுக்கு துப்பாக்கி விற்றுக் கொடுப்பவர்கள்தான். ஒரு துப்பாக்கி விற்றுக் கொடுத்தால் இவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். இவர்களுக்குத் துப்பாக்கி சப்ளை செய்தவன் செல்வம் என்பவன். அவனுக்கும் தூத்துக்குடிதான் சொந்த ஊர். வெங்கட் என்ற பிரவுன் சுகர் கடத்தல்காரன் இப்போது சென்னைச் சிறையில் இருக்கிறான். அவனிடம் டிரைவராக வேலை பார்த்தவன்தான் இந்த செல்வம். வெங்கட்டை வைத்து செல்வத்திற்கு துப்பாக்கி வியாபாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மூலம் நேபாளத்தில் இருந்து துப்பாக்கிகளை வாங்கி வந்து சரவணக்குமார் மூலம் இங்குள்ள வி.ஐ.பி.களுக்கு விற்பனை செய்திருக்கிறான். செல்வத்துக்கு சென்னை அம்பத்தூரில் உள்ள நிர்மலா என்ற பெண்ணுடன் பழக்கம் உண்டு. நிர்மலாவின் கணவர் பீகாரைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்.

இப்போது செல்வத்தைப் பிடிக்க எங்கள் டீம் சென்னை சென்றிருக்கிறது. ஆனால், உஷாரான செல்வம் தப்பி விட்டான். அவனது வீட்டிலும் ஒன்றும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் செல்வத்திடம் இருந்து ஊரப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் குமார் என்பவர் மூன்று துப்பாக்கி வாங்கியிருக்கிறார். அவரது வீட்டிற்கும் எங்கள் டீம் சென்றது. ஆனால், அவரும் தப்பிவிட்டார். அந்த செல்வம் சிக்கினால்தான் எவ்வளவு நாளாக அவர்கள் துப்பாக்கி வியாபாரம் செய்கிறார்கள்; யாரெல்லாம் அவனிடம் துப்பாக்கி வாங்கியிருக்கிறார்கள் என்ற விவரங்கள் தெரிய வரும். அரசல்புரசலாக எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, தி.மு.க. முக்கியப் புள்ளியின் உறவினர் ஒருவர், ரசிகர் மன்றத்திலும், கட்சியிலும் இருக்கும் ஒருவர் என்று நிறையப் பேர் துப்பாக்கி வாங்கியிருக்கிறார்கள்!'' என்று நம் காதைக் கடித்துவிட்டு மாயமானார்கள் அவர்கள்.

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நான்கு பேரின் வாக்குமூலங்களையும் ஒன்று விடாமல் பக்காவாக பதிவு செய்திருக்கிறது போலீஸ். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குமூலங்களை வைத்து கள்ளத் துப்பாக்கி வாங்கிய அரசியல் வி.ஐ.பி.களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவார்களா? இதுதான் இப்போது தூத்துக்குடி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில், அந்த நான்கு பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது போலீஸ். அப்படி மீண்டும் விசாரிக்கும் பட்சத்தில் யார், யாரெல்லாம் சிக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. யூனியன் சேர்மன் கருணாகரன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமிக்கு வேண்டியவர். வக்கீல் பிரபு, மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் தீவிர ஆதரவாளர். எஸ்.பி. சண்முகநாதன் , முன்னாள் அமைச்சர். இவர்கள் மீதா இப்படியொரு குற்றச்சாட்டு? இதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்? வக்கீல் சங்கத் தலைவர் பிரபுவிடம் முதலில் கேட்டோம்.

"நான் யாரிடமும் துப்பாக்கி வாங்கவில்லை. அரசின் அனுமதியோடு துப்பாக்கி வாங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தைத்தான் ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியிருக்கிறேன். பிறகு எதற்காக கள்ளத்தனமாக துப்பாக்கி வாங்கப் போகிறேன்? போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பவர்கள் என்னிடம் துப்பாக்கி விற்றிருப்பதாக போலீஸ் சொல்கிறது. அதே நேரத்தில் என் வீட்டில் இருந்து துப்பாக்கி கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், என்னிடம் அல்லவா அதற்கு சாட்சியாக கையெழுத்து வாங்கியிருக்க வேண்டும். நான் அங்கு இல்லை என்று வைத்துக் கொண்டாலும் என் வீட்டில் உள்ளவர்களிடமாவது வாங்கியிருக்கலாமே... எனவே, இதில் ஏதோ அரசியல் சதி இருக்கிறது'' என்றார் அவர்.

பிரபுவைத் தொடர்ந்து தூத்துக்குடி யூனியன் சேர்மன் கருணாகரனிடம் கேட்டோம். "எனக்கு எதற்கு துப்பாக்கி? எனக்கு துப்பாக்கி தேவை என்றால்தானே வாங்க வேண்டும். அதுவும் நான் துப்பாக்கி வாங்கி எஸ்.பி.சண்முகநாதனுக்குக் கொடுத்தேனாம். அவருக்கும் எனக்கும் பேச்சுவார்த்தையே இல்லை. பிறகு எப்படி நான் துப்பாக்கி வாங்கி அவருக்குக் கொடுப்பேன்? இந்த விஷயத்தில் யாரோ எங்களுக்கு எதிராக அரசியல் செய்கிறார்கள்!'' என்று வக்கீல் பிரபு மறுத்தது போலவே மறுத்தார் கருணாகரன். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனை நம்மால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.

இந்த வழக்கை நேரடியாக விசாரித்து வரும் நெல்லை சரக டி.ஐ.ஜி. கண்ணப்பனிடம் அது பற்றிக் கேட்டோம். "அந்த நால்வரையும் கைது செய்து விசாரித்துவிட்டு நான் சென்னைக்கு வந்துவிட்டேன். எனவே, அதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது!'' என்று சொல்லிவிட்டார். தூத்துக்குடி போலீஸாரோ... "துப்பாக்கிகளை கள்ளத்தனமாக விற்பது எப்படி குற்றமோ, அதைப் போலவே கள்ளத்தனமாக வாங்குவதும் குற்றம்தான். எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும். பொறுத்திருந்து பாருங்கள்!'' என்கிறார்கள். பார்ப்போம்.

Related Posts



4 கருத்துக்கள்:

nallur on January 7, 2009 at 6:18 AM said...

நல்ல சுவர்சியமா இருக்கு இப்படி யான தகவல்கள் வாசீக்க நல்லா இருக்கும் தொடர்ந்து எழுதுங்க
http://nallurran-nallur.blogspot.com/

ஷங்கர் Shankar on January 7, 2009 at 8:53 AM said...

நன்றி நல்லுரான்!

இது குமுதம் ரிபோர்டரில் வந்த செய்தி

Arunk on January 28, 2009 at 1:04 AM said...

Bravo, keep rocking..

Arunk on January 28, 2009 at 1:05 AM said...

Keep posting, Gr8 job.

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009