கடந்த பதினைந்து நாட்களாக சன்டிவியின் முக்கிய தலைப்பு செய்திகள் இவைதான்,
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளும் ரசிகர்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று விட்டன.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளில் பாடல்கள் காட்சிகளின் போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து ஆனந்தமாக நடனமாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்கிற்குச் சென்றாலும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள்தான் எதிரொலிக்கின்றன.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தில் நடித்ததால் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டடது, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஏதாவது ஒரு வகையில் "வெற்றிப்படம் படிக்காதவன்" பெயர் தினந்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.
சன்டிவியில் தொடர்ந்து மலிவான விளம்பர நோக்கில் திணிக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகளும், சன்டிவியின் நிகழ்ச்சிகளின் இடையே திணிக்கப்படும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் விளம்பரங்களும் பாமரர் முதல் படித்தவர் வரையிலான எல்லாத் தரப்பு மக்களையும் முகம் சுளிக்கச் செய்வதுதான் உண்மை.
இவை எல்லாம் எங்கே தொடங்கின என்று பார்த்தால்,
ஓராண்டுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட போட்டியில் புதிய திரைப்படங்களை வாங்க முடியாமல் தோற்றுப் போன சன்டிவி நிறுவனம், அதைச் சமாளிக்க எடுத்த முயற்சிதான் சன் பிக்சர்ஸ்.
ஏற்கனவே தயாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படங்களை விலைக்கு வாங்கி வெளியிடத் தீர்மானித்த சன்டிவி நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக சன்பிக்சர்ஸ் மூலமாக கிட்டத்தட்ட ஒன்பது படங்களை விலைக்கு வாங்கி அதற்கான அறிவிப்பை ஒரு பெரும் விழாவாக நடத்தி வெளியிட்ட போதே திரை உலகில் பலவாறான குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
சண்டிவியானது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் தொலைக்கட்சிகளில் முதல் இடத்தைப் பெற்றுத் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டது மட்டுமில்லாமல் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஏகபோகமாகச் செயல்பட்டு வருகிறது.
சன்டிவி, தான் தொடங்கப்பட்டதில் இருந்து இத்தனை ஆண்டுகளில் தனக்குப் போட்டியாக எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தனது ஊடக ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட மிகப்பெரும் ஊடக பலமும், பணபலமும் கொண்ட சன் குழுமம் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்த போதே, திரைத்துறையில் உள்ள தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கக் கூடிய சிலர் இதனால் பல விபரீத விளைவுகள் ஏற்படப் போகின்றன என்று எச்சரித்தனர்.
ஏனெனில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதன்மையான தொலைக்காட்சியாக கோலோச்சும் சன்டிவியின் தயவு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முக்கியமானதாகப் போய்விட்டது. முதலில் திரைப்படங்களை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட சன்டிவி, பின்னர் தான் மனது வைத்தால் மட்டுமே திரைப்படங்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டது.
சன்டிவியில் பாடல்கள், காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மட்டுமே அதிகமான மக்களைச் சென்றடைந்து வெற்றி பெற முடியும் என்ற நிலையை சன்டிவி உருவாக்கி விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் சன்டிவிக்கு ஒட்டுமொத்த தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமைகள் கொடுக்கப்படாத திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள் மற்றும் அந்தத் திரைப்படங்களின் விளம்பரங்கள் சன்டிவியில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும்,
திரை விமர்சனம் மற்றும் பட வரிசைகளில் இக்தகைய திரைப்படங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் பல ஆண்டுகளாகவே சன்டிவியின் மீது குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் எழுந்தன.
காக்க காக்க, சச்சின், தவமாய்த் தவமிருந்து, மும்பை எக்ஸ்ப்ரஸ், மாயக் கண்ணாடி,
தற்போது ரஜினியின் குசேலன் உள்ளிட்ட எத்தனயோ திரைப்படங்களின் வெற்றியை சன்டிவியின் இருட்டடிப்பு பாதித்ததாக நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சன்டிவியே நேரடியாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தால் பின்னர் மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு சன்டிவியில் என்ன மாதிரியான மரியாதை தரப்படும் என்பதே திரைத்துறையினரின் அச்சத்திற்குக் காரணம்.
இப்போது சன் பிக்சர்ஸ் மூலமாகத் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. திரைத்துறையினர் ஏற்கனவே எதை நினைத்து பயந்தனரோ அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.
சன்டிவியின் மூலமாகத் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே சன்டிவியிலும், சன் குழுமத்தின் மற்ற எல்லா அலைவரிசைகளிலும் தற்போது ஒளிபரப்பப் படுகிறது. மற்ற எல்லாத் திரைப்படங்களும் முடிந்த அளவு இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
தற்போது சன்டிவியினர் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அத் திரைப்படங்களை வெற்றி பெறச் செய்யவும் தங்களது முழு ஊடக பலத்தையும் உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டனர்.
சன்டிவியினர் தங்களது சொந்த ஊடக பலத்தையும் - தங்களின் சொந்த பண பலத்தையும் - தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்குப் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், இவர்களின் செயல்கள் எல்லை மீறிப் போகும் போது சுட்டிக் காட்டாமல் இருப்பதும் தவறுதானே.
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் போது மற்ற திரைப்படங்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்த பட்ச முக்கியத்துவத்தையாவது தர வேண்டும் இல்லையா?
திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களில் குறைந்தபட்ச நடுநிலையாவது பின்பற்றப்பட வேண்டும் இல்லையா?
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களின் பாடல்களைக் கூட ஒளிபரப்ப மறுப்பது தவறில்லையா?
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்வது என்பது சர்வாதிகார மனப்பான்மையின் வெளிப்பாடுதானே,
தன்னுடைய மித மிஞ்சிய ஊடக பலத்தை வைத்துக் கொண்டு தனது புதிய தொழிலில் முன்னேற முயல்வது என்பது தவறான செயல் இல்லை,
ஆனால் தனது ஊடக பலத்தால் தனது சகபோட்டியாளர்களை அழித்தொழிக்க முனைவது என்பது முறையான காரியம் இல்லையே,
தொழிலில் வரும் போட்டிகளை சமாளித்து சக போட்டியாளர்களுடன் கடுமையாக போட்டியிட்டு முன்னேறி முதலிடம் பெற முயல வேண்டுமே தவிர, தனது எல்லாப் போட்டியாளர்களையும் நசுக்கிப் பின்னர் தனக்குப் போட்டியே இல்லாத நிலையை உருவாக்கிக் கொண்டு தனது வெற்றிக் கொடியை நாட்ட முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்றே தோன்றுகிறது................. அறிவிழி
5 கருத்துக்கள்:
S U re absolutely right
http://arivili.blogspot.com/2009/01/blog-post_28.html
It is true.But mind you in tamil nadu sadly televisions are controlled by DMK or other parties.We are going through one of the bad experiences both in tamil nadu politics and media
ya...dubba or mokkai movies lies kadhalil... thenavattu...and dindugal...are top 10 movies of 2008 in sun tv...konjam kuda koocha padaama idhellam hit padamamnu solikittu thiriyaranunga.... These things should definitely change...
காதலில் விழுந்தேன் படம் உண்மையில் ஹிட் படமாக இருந்தால் அதற்குள் டிவியில் போட்டு இருப்பர்களா? இவ்வளவு பீத்திக்கிறாய்ங்க்களே.. என்னதான் இருக்குன்னு பார்த்தா.... அய்யய்யோ!!! தாங்க முடியலடா சாமீ!!1
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments