தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீது ஏ….க நம்பிக்கை சினிமாக்காரர்களுக்கு… இல்லாவிட்டால் தைப் பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டுமாய் இப்படி கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள்.
அஆஇஈ என்ற படத்தையும் சேர்த்து கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் பொங்கல் கணக்கு நான்கு படங்கள்.
இவற்றில் ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற படத்தைத் தவிர மற்ற மூன்றும் குறைந்தபட்சம் திட்டி விமர்சனம் எழுதக்கூட அருகதையற்ற படங்கள்.
வில்லு! கொல்லு!
ரஜினி அல்லது எம்ஜிஆர் என்ற முகமூடி இல்லாமல் தன்னால் திரையில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது என்ற அபார தன்னம்பிக்கையை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் வில்லு படத்தில் விஜய்.
என்ன தைரியத்தில் இந்தப் படத்தை ‘இந்தியாவின் முதல் ஜேம்ஸ்பாண்டு படம்’ என்று பீற்றிக் கொண்டார்களோ.. புரியவில்லை. ஜேம்ஸ்பாண்ட் படத்தை முன்னபின்ன பார்த்திருக்கீங்களா விஜய்?
இதையெல்லாம் பிராஸ்னனோ… டேனியல் க்ரெய்க்கோ கேள்விப்பட்டால் சொன்னவங்களை டம்மி துப்பாக்கியாலேயே சுட்டுக் ‘கொன்னு’டுவாங்க!!
வேண்டாம் தனுஷ்…
படிக்காதவன் என்ற தலைப்பு ஒவ்வொரு ரஜினி ரசிகனின் நெஞ்சிலும் பச்சைக் குத்தப்பட்டது போல அத்தனைப் பசுமையான ஒன்று. அந்தப் படத்தை 400 முறை பார்த்து தினத்தந்தியில் சாதனைச் செய்தியாக மாற்றிய இரு கோவை ரசிகர்களைப் பார்த்திருக்கிறது தமிழ் சினிமா.
தனுஷ் இப்போது செய்துள்ள காரியம் அவர்களையெல்லாம் அவமானப்படுத்துவதற்குச் சமமானது!
ரஜினியின் படப் பெயர்கள் தனுஷுக்கே ஏகபோகச் சொத்தாக இருந்துவிட்டுப் போகட்டும். அதில் யாருக்கும் வருத்தமில்லை. ஆனால் குறைந்தபட்சம் அந்தத் தலைப்புகளுக்கு சின்ன மரியாதை வருமளவுக்கு கதையுள்ள படங்களாக நடித்தால் நல்லது. காரணம், படிக்காதவன் என்ற அந்த தலைப்புக்காகவே போய் படம் பார்த்துவிட்டு தலையிலடித்தபடி வெளியில் வரும் பல ரசிகர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது!!
‘அதெல்லாம் முடியாது… நான் எப்போதும் ‘சுள்ளான்’தான், மாற்றிக் கொள்ள முடியாது…’ என்றால், தயவு செய்து எம்ஜிஆர், ரஜினி படத் தலைப்புகளை தனுஷ் மட்டுமல்ல… வேறு யாருமே வைக்க முயற்சிக்காதீர்கள் (ஜானி, இளமை ஊஞ்சலாடுகிறது, ரங்கா, முத்து போன்ற தலைப்புகள் இப்போது இவர் வசம்தான் உள்ளன என்கிறது தயாரிப்பாளர் சங்கம்!).
இந்த புதிய படிக்காதவன் படத்தின் இன்னொரு கொடுமை விவேக் என்ற வக்கிரம் பிடித்த அரைகுறை. பேசாமல் ரிட்டயர் ஆகிவிடுங்கள் விவேக்… தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்!
திரைத்துறையில் சன் டிவி போன்று சர்வாதிகாரிகளை வளரவிடுவது எத்தகைய ஆபத்து என்பதற்கு காதல்னா சும்மா இல்லை என்ற ஓரளவு நல்ல படம் வந்ததே தெரியாமல் அமுங்கிப் போனதே சான்று.
ஆஸ்கர் பரிந்துரை கமிட்டி வரை போன கம்மியம் என்ற தெலுங்குப் படத்தை குறைந்தபட்ச நேர்மையுடன் ரீமேக் செய்திருந்தார்கள். ஆனால் வெறும் சப்தங்களுக்கு மத்தியில் ஒரு சங்கீதம் எடுபடாமல் போன மாதிரியாகிவிட்டது, ராஜ் டிவிக்காரர்களின் இந்த நேர்மையான முயற்சி.
ஏஎம் ரத்னம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தும், இந்தப் படத்தில் தன் மகனுக்கு தேவையற்ற பில்டப் எதுவும் கொடுக்காமல் அவரை சாதாரண கேரக்டராக வரவைத்திருந்தார்.
ஆனால் கொடுமை பாருங்கள்… சென்னையை விட்டால் அடுத்த 100 கிமீ தூரத்துக்கு வேறு தியேட்டரில் ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தையே பார்க்க முடியவில்லை. அந்தளவு தியேட்டர் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் இந்தப் படத்துக்கு.
இவர்களின் அசுர பலத்துக்கு முன்னால் யார் என்ன செய்துவிட முடியும்?
அஆஇஈ… ஏவிஎம் என்ற காலிப் பெருங்காய டப்பா(பிராஞ்ச் -2)விலிருந்து வந்துள்ள படம்… அந்த வாசனை கொஞ்சம்கூட இல்லை!
ஆக இந்தப் பொங்கல், அரசியல் தொடங்கி சினிமா வரையில் தமிழனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதாகவே வந்து போனது!
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments