Tuesday, November 04, 2008

என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?சமீப ஆண்டுகளாக இந்திய மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் பெறுகிற அளவுக்கு மிஞ்சிய ஊதியம் பல பேரது வயிற்றெரிச்சலைச் சம்பாதித்தது என்னவோ உண்மைதான். இப்போது அவர்களுக்கு வேலை பறி போவதாக அங்கொன்றும் இங்கொன்றுமென தினசரிகளில் காணக் கிடைக்கும் செய்திகள் அந்த வயிற்றில் எல்லாம் பால் வார்த்திருக்கிறது. முக்குக்கு முக்கு சிலாகித்துப் பேசுகிறார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பல 'வெள்ளை காலர்' ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்திருக்கிறது. அமெரிக்க நிறுவனங்களை நம்பியிருக்கும் இந்திய மென்பொருள் நிறுவனங்களும் இந்தப் பாதிப்பை உணராமல் இல்லை. அதனால் வேலைகள் காலியாவதும் உண்மையே. அதன் காரணிகளையும், விளைவுகளையும் அலசும் முன்னர் .....

இந்தியாவின் வேலையின்மை 2007 கணிப்பின் அடிப்படையில் 7.2 விழுக்காடு. அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்ற கேள்வியும், அதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமும் ஒரு பக்கம் ஏற்படுகிறது. இருந்தாலும் 7.2 விழுக்காடு என்று நம்புகிறோம். அமெரிக்காவில் 2008 செப்டம்பர் மாதம் 6.1 சதவீதம் பேருக்கு வேலை இருக்கவில்லை. அக்டோபரில் இன்னும் ஓரிரு விழுக்காடு கூடியிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் தனக்கு வேலை போகாமல் மற்றவர்களுக்கு வேலை போகும் போதுதான் வேலையின்மைக்கு 6, 7, 10 சதவீதக் கணக்கெல்லாம். ஒரு வேளை தனக்கே வேலை பறி போனால் வேலையின்மை 100 சதவீதம். படித்து விட்டு வேலை தேடி அலையும் போது நாட்டின் முதன்மையான பிரச்சினையாக இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் வேலை கிடைத்த பிறகு 'மக்களுக்கெல்லாம் போதுமான திறமை இல்லை' என்ற நிலைப்பாடாக உருமாறுவதைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

மற்றத் துறைகளில் பணியாற்றும் திறமைசாலிகள் எவ்வளவு உழைத்தாலும் ஈட்ட முடியாத ஊதியத்தை, கல்லூரி முடித்துவிட்டு வெளியே வரும் சின்னப் பசங்க கழுத்தில் ஐ.டி கார்டைத் தொங்க விட்டபடியே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தூக்கிக் கொடுத்தன. ஆனால் இந்த ஊதியத்தை இந்தியாவில் மற்ற வேலைகளில் உள்ளோர் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிடுவது ஒரு வகையில் தவறுதான்.

மேலை நாடுகளில் உள்ள பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொழில். உதாரணமாக கார் தயாரிப்பு, வங்கித் தொழில், இன்சூரன்ஸ், மதுபான உற்பத்தி, ஏர்லைன்ஸ் இப்படி ஏதாவது ஒரு தொழில். இவற்றின் வரவு செலவுகளைப் பேணவும், நிர்வாகத்தைத் தங்குதடையின்றி நடத்தவும் அவை சார்ந்த தகவல் அனைத்தையும் கணினியில் உட்செலுத்தி அவற்றைத் திறம்படப் பயன்படுத்துவது அவசியம். அதற்குத் தக்கபடி கணிப்பொறி மென்பொருட்களை உருவாக்க வேண்டிய தேவை அந்தக் கம்பெனிகளுக்கு இருந்தது; இருக்கிறது. அந்த வேலையை அந்த மேலை நாடுகளில் செய்வதற்கு மென்பொருள் 'வல்லுனர்கள்' மணிக்கு இத்தனை டாலர் என்று பில் எழுதினார்கள்.

தமக்கு மென்பொருள் வேலை செய்ய வரும் இந்த 'வல்லுனர்' சமூகத்திற்கு ஒரு நிறுவனம் மணிக்கு சுமார் 70 டாலர் தருகிறது என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று ஒரு நாள் நம்ம ஊரு சாஃப்ட்வேர் நிறுவனங்கள், "எங்களுக்கு மணிக்கு 40 டாலர் கொடுங்கள் போதும். நாங்கள் இந்தியாவில் இருந்து அதே பணியைச் செய்து தருகிறோம்" என்று சொல்லி ஒப்பந்தத்தை வென்றெடுத்து இந்தியாவில் ஏராளமான இளைஞர்களை வேலைக்கு எடுத்து காசு பார்த்தன. அந்த 40 டாலரில் கால்வாசியைச் சம்பளமாகக் கொடுத்தாலும் ஒரு நாளைக்கு மூவாயிரத்துச் சொச்சம் சம்பளம் தரலாம். அப்படி இருக்கும் போது இந்தியாவில் இந்தியச் சம்பளம் வாங்கும் மக்களோடு இவர்களை ஒப்பிடுவது தவறு.

சாஃப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் 70 டாலர் வாங்கிக் கொண்டு அதில் 40 - 50 டாலர் சம்பளமாகத் தருவதைக் காட்டிலும், இந்தியாவில் 40 டாலர் வாங்கிக் கொண்டு அதில் பத்து டாலரை ஊழியருக்கு சம்பளமாகக் கொடுப்பது இலாபகரமானது. இது நிறுவனங்களின் பார்வையில். அதே நேரம் இந்தியா இருக்கிற பொருளாதாரச் சூழலில் இந்த நிறுவனங்கள் தருவது அபரிமிதமான சம்பளம். மற்றப் படிப்புகளைப் படித்துவிட்டு மாதம் ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று சம்பளம் வாங்குவதைவிட எப்படியாவது மென்பொருள் நிறுவனங்களில் சேர்வது இலாபகரமானது.

சென்ற நான்கைந்து வருடங்களில் உலகப் பொருளாதாரம் வெகுவான முன்னேற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்க வாடிக்கையாளர்களின் நுகர்திறனை நம்பி சீனாவின் தொழில்துறையும், இந்தியாவின் மென்பொருள் துறையும் வாழ்ந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை மென்பொருள் கம்பெனிகளின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போனது. தகுதியுள்ள ஆள் உடனடியாக வேண்டுமென்றால் பக்கத்து கம்பெனியில் வேலை செய்பவனுக்குச் சில ஆயிரங்களை அதிகமாகக் கொடுத்து இழுத்துக் கொள்வது நடந்தேறியது. "குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர்" என்று கவுண்டமணி சொல்வது போல பேங்கில் வேலை செய்தவன், பேஃக்டரியில் வேலை செய்தவன் என எல்லோருமே சாஃப்ட்வேருக்குத் தாவினார்கள்.

புதிதாக இணைபவர்களுக்குச் சுளையான சம்பளம். புதிய பொறியியல் கல்லூரிகள் காளான்களாக முளைத்தன. B.E சீட் கிடைப்பதை விட C.A சீட் கிடைப்பது சிரமம். அத்தனை பொறியியல் கல்லூரிகள். இறுதியாண்டு முடிவதற்குள்ளாகக் கல்லூரி வளாகத்திற்கே வந்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைக் கொடுத்து 'புக்' செய்தன கம்பெனிகள். முதலில் நிலவிய B.E, M.C.A படித்தவர்கள் மட்டுமே சாஃப்ட்வேரில் நுழையலாம் என்ற நிலை மாறி என்ன படித்தாலும் வேலை கிடைக்கும் என்ற நிலை உருவானது. B.Sc முடித்தவர்கள் மேற்படிப்பு படித்துக்கொண்டே வேலை செய்யலாம் என்று சில நிறுவனங்கள் நான்கு வருடம் தாவ முடியாமல் கட்டிப் போடும் வேலையைச் செய்கின்றன. இப்படி வேலைக்குச் சேரும் ஆட்கள் சுலபமாக கம்பெனி மாற மாட்டார்கள். மேலும் சம்பளமும் குறைவு. சில நிறுவனங்கள் டிப்ளமோ படித்தவர்களுக்குக்கூடக் கதவுகளைத் திறந்து விட்டிருப்பதாகச் செய்தி.

அதிக வருவாய் தருகிற தொழில் அல்லது துறை திறமையானவர்களை ஈர்த்துக் கொள்ளும். சமீப காலமாக எல்லோருமே ஆர்வமாக பொறியியல் படிப்பதும், பாஸ் செய்து வெளியேறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியிருப்பதும் அதற்குச் சான்றாக இருக்கின்றன. டிமாண்டை ஈடு செய்வதற்கான படிப்படியாக அதிகரித்த சப்ளை இப்போது டிமாண்டைவிட அதிகரித்துவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பக்கம் சப்ளை அதிகரித்திருக்கிறது. இன்னொரு பக்கம் டிமாண்ட் மந்தமடைந்திருக்கிறது.

பிரபலமான மூன்றெழுத்து சாஃப்ட்வேர் நிறுவனம் வளாகத் தேர்வில் தேர்ந்தெடுத்த மாணவர்களை இரண்டு ஆண்டுகள் கழித்துச் சேரச் சொல்லிவிட்டதாம். இன்னொரு நிறுவனத்தில் ஐயாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புகிறார்களாம். சில இடங்களில் நிரந்தர வேலைக்கு ஆள் சேர்க்காமல் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்கிறார்கள். பரவாயில்லை என்று குறைவான சம்பளத்தில் அதிலும் ஒட்டிக்கொள்ள வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் மென்பொருள் நிறுவனங்களில் பாதிப்பு அளவுக்கு அதிகமாக விவாதிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. எண்பதாயிரம் பேர் உள்ள நிறுவனம் ஐந்தாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றும் பெரிய சங்கதியல்ல. சதவீதக் கணக்கில் பார்த்தால் குறைவே. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஒரே நாளில் 1,900 பேரைப் பணிநீக்கம் செய்தது போல அதிரடியாக எதுவும் செய்யாமல் தினசரி அங்கொன்றும் இங்கொன்றுமாக சத்தமில்லாமல் 'பிங்க் ஸ்லிப்' கொடுப்பதால் மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் ஆட்குறைப்பின் எதிரொலி மெலிதாகவே கேட்கிறது.

உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதித்தாலும் அந்தப் பாதிப்பு தற்காலிகமானதாகவே இருக்கும். அவற்றில் இலாப விகிதம் குறையலாம். ஆனால் அவை ஒட்டு மொத்தமாக அழிந்துவிடாது. ஆட்டோமொபைல் கம்பெனிகள் சில வெறும் 5-6 சதவீத இலாபத்தில் இயங்கிய போது சாஃப்ட்வேர் கம்பெனிகள் 30 சதவீதம் இலாபத்தில் செயல்பட்ட காலமெல்லாம் மலையேறி விடும். ஆனாலும் அவை குறைவான இலாபத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவு கண்டால் அது இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரம், அப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அங்கே ஆட்குறைப்பு செய்து விட்டு செலவைச் சமாளிப்பதற்காக மேலும் அவுட்சோர்ஸிங் செய்யக் கூடும் என்ற வாதத்தையும் கவனிக்க வேண்டும். அதனால்கூட நமது சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு நன்மைதான்.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு முறை அந்த தேசத்தில் தேர்தல் நடக்கும் போதும் அவுட்சோர்ஸிங், ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் மற்றும் கருக்கலைப்பு ஆகிய மூன்று விஷயங்கள் அலசப்படும். எட்டு ஆண்டுகளாக ஜார்ஜ் புஷ் நடத்திய குடியரசுக் கட்சியின் ஆட்சி பொருளாதாரத்தை விளிம்பு நிலைக்குத் தள்ளி விட்டதால் இந்த முறை அவுட்சோர்ஸிங் மேட்டருக்குக் கூடுதலான கவனம் கிடைத்திருக்கிறது. அமோகமான மக்கள் ஆதரவு இருப்பதாகக் கருதப்படும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அவுட்சோர்ஸ் செய்யாமல் அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமான வரிக் கொள்கைகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் கருத்துக் கணிப்புகள் ஒபாமாவுக்கு ஆதரவு இருப்பதாகச் சொன்னாலும், அமெரிக்காவும் சரி உலகமும் சரி ஒரு கறுப்பின அதிபரை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனவா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!! கருத்துக் கணிப்பில் 'நல்லவனாக' ஒபாமாவுக்குத்தான் எனது ஓட்டு என்று சொல்லி விட்டு வாக்களிக்கும் போது அமெரிக்காவின் பெரும்பான்மை வெள்ளையர்கள் தமது இன உணர்வை வெளிப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாறாக ஒபாமா வென்றால் அது எதிர்பார்த்த ஒன்றாகவே இருக்கும்.

ஆனால் நமது சாஃப்ட்வேர் தொழிலைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கும் வந்தாலும் பெரிய மாறுதல் இருக்காது என்று ஒரு சாரார் கூறுகின்றனர். அமெரிக்காவின் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்வதெல்லாம் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் என்பதால் ஒபாமாவின் 'அவுட்சோர்ஸிங் எதிர்ப்பு' சவுண்ட் எந்த அளவிற்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.

Related Posts0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009