Monday, November 10, 2008

ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்?மாற்றம். முடியும்! இந்த இரட்டை வார்த்தைகள்தான் பராக் ஒபாமாவின் மிகப்பெரிய முதலீடுகள். `நாடு தற்போது இருக்கும் சூழலில் இருந்து அபரிமிதமான மாற்றம் அடைய வேண்டும். அத்தகைய மாற்றத்தை சாத்தியப்படுத்த நம்மால் முடியும்!’ - இவைதான் அமெரிக்க அதிபர் பதவியை ஒபாமாவுக்கு அறுவடை செய்து கொடுத்திருக்கின்றன. கடந்த சில மாதங்களாக பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் திருவிழா தற்போது நிறைவடைந்திருக்கிறது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட பராக் ஒபாமா என்ற கறுப்பு இளைஞர் வெற்றிக்கனியைச் சுவைத்து, அமெரிக்காவின் நாற்பத்துநான்காவது அதிபராகியிருக்கிறார்.

தாய் தேசமான அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.தந்தை தேசமான கென்யாவில் ஒருபடி மேலே போய் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இறக்கைகள் முளைக்காத குறைதான். உண்மையில் கென்யாவின் ஒவ்வொரு வீடும் கல்யாணவீடாக உருமாறி களை கட்டியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் வெள்ளை மாளிகைக்குள் நுழைய இருக்கிறார் ஒபாமா, துணை அதிபர் ஸ்பைடனுடன்.

`அமெரிக்காவில் அத்தனையும் சாத்தியம் என்பதை இளைஞர்கள், முதியவர்கள், கறுப்பர்கள், வெள்ளையர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர், ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் அத்தனை பேரும் அமெரிக்கர்கள் என்ற ஒரே குடையின்கீழ் திரண்டு வாக்குகள் மூலமாக உலகத்துக்கு உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்என்று பெருமிதத்துடன் பேசுகிறார் பராக் ஒபாமா. நல்லது.

புது மாப்பிள்ளை அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதில்தான் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் குவிந்து கிடக்கிறது. அதேசமயம் வெள்ளை தேசத்தில் ஒரு கறுப்பரால் எப்படி அதிகார பீடத்தைக் கைப்பற்ற முடிந்தது என்ற ஆச்சரியம் இன்னமும் பலருக்கு நீங்கவே இல்லை. இதற்கான விடையைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் பராக் ஒபாமாவின் பூர்வீகம் பற்றிப் பார்த்து விடலாம்.

நதிமூலம், ரிஷிமூலம்!

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியர் பராக் ஒபாமா சீனியர். இவர்தான் அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை. தாயார் ஆன் டன்ஹாம். இவர் ஒரு வெள்ளை அமெரிக்கர். மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த பராக் ஒபாமா சீனியர், டன்ஹாமைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கான பரிசாக 1961-ல் கிடைத்தவர் பராக் ஹுஸைன் ஒபாமா.

அமெரிக்காவின் கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்ததால் ஏற்பட்ட விளைவுகளுள் ஒன்று விவாகரத்து. அது இரண்டே ஆண்டுகளில் டன்ஹாம் - ஒபாமா சீனியர் தம்பதிக்கு வந்துவிட்டது. பிறகு டன்ஹாம் இன்னொருவரைத் திருமணம் செய்துகொள்ள, ஒபாமா சீனியரும் அதே பாணியைப் பின்பற்றினார். பிறகு டன்ஹாம் இரண்டாவது கணவரையும் பிரிந்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டார். தாயுடன் பாட்டி வீட்டில் வளரத் தொடங்கினார் பராக் ஹுஸைன் ஒபாமா.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆக்சிடென்டல் கல்லூரி, நியூயார்க்கில் இருக்கும் கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றில் படித்துவிட்டு சமூக சேவகராக அவதாரம் எடுத்தார் ஒபாமா. சிகாகோவின் தெற்குப் பகுதிதான் ஒபாமாவின் சமூக சேவைக்குக் களமாக அமைந்தது. அப்போதுதான் ஒபாமாவுக்கு அரசியல் ஆர்வமும் வரத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஒபாமா 1992-ல் பில் கிளிண்டன் தேர்தலில் நின்றபோது அவருக்காகப் பிரசாரம் செய்தார்.

துல்லியமான புள்ளிவிவரம். தெளிவான பேச்சு. பிரமிக்க வைக்கும் கம்பீரம். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒபாமாவின் மதிப்பை உயர்த்தத் தொடங்கின. 1997-ல் மாநில செனட் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். 2004-ல் இல்லினாய்ஸில் இருந்து அமெரிக்க செனட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த குறி அதிபர் பதவி. முடியும் என்று நம்பினார். அதைச் சாதிப்பதற்கு அவர் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

மிடுக்கு நிறைந்த கறுப்பர்!

நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முக்கியமாக, ஒபாமா ஒரு கறுப்பர் அல்லது அரைக்கறுப்பர். ஆகவே, வெள்ளையர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். மிகப்பெரிய பிரச்னை. ஆனால் அவற்றை நுணுக்கமாக சமாளித்தார் ஒபாமா. `நான் ஒரு அமெரிக்கன். அமெரிக்காவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து என்னிடம் பல நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்த எனக்கு வாக்களியுங்கள்என்று கேட்டார். அத்தோடு சரி. எந்த இடத்திலும் தன்னை கறுப்பர் என்று சொல்லிக்கொள்ளவே இல்லை. அனுதாப வாக்கு சேகரிக்கவில்லை. மிடுக்குடனேயே பேசினார். மிடுக்குடனேயே பிரசாரம் செய்தார். மிடுக்குடனேயே நிதி உதவிகளையும் பெற்றார். இந்த மிடுக்குத்தான் அவருடைய மிகப்பெரிய பலமாக இருந்தது. வெள்ளையர்களின் வாக்கு வங்கி இவர் பக்கம் திரும்பியதற்கு இதுதான் முக்கியமான காரணம்.

ஒபாமா ஒரு முஸ்லிம்?

ஒபாமாவின் தந்தை ஒரு பூர்வீக முஸ்லிம். அவருடைய பெயரில்கூட ஹுஸைன் என்று இருக்கிறது. தீவிரவாதிகளுடன் ஒபாமாவுக்குத் தொடர்பு இருக்கிறது. இப்படிப் பலகதைகள் கட்டுக்கட்டாக. ஆனால் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி விரிவாக மக்களிடம் பேசினார் ஒபாமா. தான் இந்தோனேஷியாவில் படித்தது முதல் அமெரிக்கப் பாட்டியால் வளர்க்கப்பட்டது வரை அத்தனை விஷயங்களையும் பட்டவர்த்தனமாகச் சொன்னார். இதனால் கட்டுக்கதைகள் கலகலத்தன. இதில் என்ன துரதிருஷ்டம் என்றால், அவரை முஸ்லிம் என்று எல்லோரும் சொன்னபோது, `முஸ்லிமாக இருப்பது குற்றமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்க ஒபாமா விரும்பவில்லை. கேட்கவும் இல்லை. ஒருவேளை அந்தக் கேள்வியைக்கேட்டு, அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளை எதிர்கொள்ள ஒபாமா விரும்பவில்லையோ என்னவோ? திருஷ்டிப் பொட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

என்னதான் தன்னை ஒரு கறுப்பர் என்று ஒபாமா பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளாதபோதும், ஒபாமா என்ற கறுப்பர் திடுதிப்பென அதிபர் பதவிக்குப் போட்டியிட்டது, அடிமைகளாகவே நுழைந்து, அடிமைகளாக வாழ்ந்து வரும் அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய ஹீரோவாக ஒபாமாவைப் பார்த்தனர். அவர் படம் போட்ட டீ ஷர்ட்டுகளைப் போட்டுக்கொண்டனர். கைகளிலும் புஜங்களிலும் ஒபாமா டேட்டூக்களை ஒட்டிக்கொண்டனர். அமெரிக்கக் கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது. அந்தச் செல்வாக்கு வாக்குகளாக உருமாறியது.

புஷ் போட்ட `பாதை

இவை அனைத்தைக் காட்டிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஜார்ஜ் புஷ் மீது அமெரிக்கர்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு ஒபாமாவுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. போர் வெறியர், அதிரடி மனிதர், குழப்பவாதி, மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர், கோமாளி என்று ஜார்ஜ் புஷ் மீது இருந்த அத்தனை எதிர்மறை விஷயங்களும் மக்களின் கவனத்தை ஒபாமா மீது திருப்புவதற்கு வசதி செய்து கொடுத்தன. போதாக்குறைக்கு செப்டம்பர் 12, 2008 அன்று அமெரிக்காவில் அரங்கேறிய பொருளாதார சுனாமி ஜார்ஜ் புஷ்ஷின் கொஞ்ச நஞ்ச இமேஜையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அடுக்கிவைக்கப்பட்ட தீப்பெட்டிக் கோபுரம் சரிவது போல லேமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்கள் திவாலாகின.

வாக்கும் கணக்கும்!

ஊர்கூடித் தேர் இழுத்தது போல பல்வேறு சங்கதிகளும் ஒபாமாவுக்கு ஆதரவாக இருந்ததால், தற்போது அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அதிபராக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்திருக்கிறார். மொத்தமுள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் ஒபாமாவுக்கோ 364 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்த குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கையினுக்கு 163 வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்களித்த பெண்களில் ஒபாமாவுக்கு மட்டும் 56 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 74 சதவிகித வெள்ளையர்களில் ஒபாமாவுக்கு 43 சதவிகிதம் பேரும் மெக்கெயினுக்கு 55 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த 13 சதவிகித ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் 95 சதவிகிதம் பேர் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர். நிற்க.

ஈராக் : ப்ளஸ் புஷ் மைனஸ் புஷ்!

ஒபாமா சர்ச்சைக்குரிய விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். முதலில் ஈராக். ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்காவின் இமேஜை ஆழக்குழி தோண்டிப் புதைத்த விஷயங்களுள் ஈராக்குக்கு அபரிமிதமான பங்கு உண்டு. அடிப்படையில் ஒபாமா ஒரு பரிபூரண யுத்த எதிர்ப்பாளர் அல்ல என்றாலும், ஈராக் மீதான யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர். ஆகவே, தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளின்படி ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையினரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
ஒபாமா Vs ஒஸாமா!

அடுத்து, ஆப்கனிஸ்தான் யுத்தம். ஈராக் விஷயத்தில் தான் பயன்படுத்தும் அளவுகோலையே ஆப்கனிஸ்தான் விவகாரத்திலும் பயன்படுத்த ஒபாமா தயாராக இல்லை என்பதையே அவருடைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. தாலிபன்களுக்கும் அல் காயிதாவுக்கும் எதிரான யுத்தத்தில் ஒபாமாவுக்கு ஆர்வம் அதிகம். ஆகவே, ஒபாமாவின் வருகை ஆப்கனுக்கு எதிரான, ஒஸாமாவுக்கு எதிரான, அல் காயிதாவுக்கு எதிரான யுத்தத்தின் வேகத்தை அதிகப்படுத்தும் என்பதுதான் பெரும்பாலானோரின் கணிப்பு.

பாகிஸ்தானின் எதிரி?

இதே ஒஸாமா விவகாரத்தால் பாகிஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் ஒபாமா. ஜனநாயகக் கட்சியின் சார்பாகத் தேர்வாகியிருக்கும் ஒபாமாவுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜனநாயகத்தின் மீது அத்தனை பிடிப்பு கிடையாது. இதனால் நேற்றுவரை அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்குக் கிடைத்து வந்த தார்மிக ரீதியான, ராணுவரீதியான உதவிகள் நின்று போவதற்கான வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, ஆப்கன் போர் தீவிரமடைந்தால் அதன் பக்கவிளைவாக உள்நாட்டுக்குள் ஏற்படும் குழப்பங்களில்தான் பாகிஸ்தான் கவனம் செலுத்துமே தவிர, காஷ்மீர் விஷயத்தில் அதிகம் முனைப்பு காட்டாது. இதனால் காஷ்மீர் குழப்பங்கள் கணிசமான அளவுக்குக் குறையலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அண்டை நாடுகளுடனான உறவில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர்கள் காட்டும் கெடுபிடிகளையும், மூர்க்கத்தனத்தையும் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா போன்றவர்கள் பின்பற்ற மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. ஆகவே, உலக நாடுகளுடனான உறவில் அமெரிக்கா சிறிதளவேனும் மென்மைத்தன்மையை வெளிப்படுத்தும் என்பது பரவலான எதிர்பார்ப்பு.
நமக்கு என்ன லாபம்?

இந்தியாவுடனான அமெரிக்க உறவு எப்படி இருக்கும்? ஒபாமாவின் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம்? என்ற கேள்விகள் பலமாக அடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுடன் அனுசரணையாக நடந்துகொண்ட அமெரிக்க அதிபர்களுள் முக்கியமானவர் ஜார்ஜ் புஷ். அணுசக்தி ஒப்பந்தத்துக்காக பகீரதப் பிரயத்தனம் செய்ததை யாரும் அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. அதேபோல பராக் ஒபாமாவும் நடந்துகொள்வாரா என்பது சந்தேகத்துக்கு உரியதுதான்.

ஒபாமா தலைமையிலான அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு எப்படி இருக்கும் என்பது, அவர் யாரை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப் போகிறார்? அந்த அமைச்சருக்கு இருக்கும் இந்தியா மீதான அபிமானம் எப்படிப்பட்டது? அவர் எப்படிப்பட்ட பரிந்துரைகளை இந்தியாவுக்காக ஒபாமாவிடம் முன்வைக்கப் போகிறார்? என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய சங்கதி இது. எனினும், இந்தியர்கள் மீது பொதுவாக ஒபாமாவுக்கு நல்ல அபிப்ராயம் உண்டு என்பதை அவருடைய சில பேச்சுகள் வெளிப்படுத்துவதால், இந்தியாவுடன் வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமான அளவில் இருக்கின்றன.
பிபிஓ என்ன ஆகும்?

அமெரிக்காவால் இந்தியர்களுக்கு அதிக பலனளிக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறைகளில் ஏகப்பட்ட கெடுபிடிகள் வரக்கூடும். இதனால் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்பது இந்தியர்களுடைய பயம். அதை வலுப்படுத்தும் விதமாகவே ஒபாமாவின் பேச்சுகளும் இருக்கின்றன. ஆனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பிபிஓ அவுட்ஸோர்ஸிங் என்ற வேலைப் பகிர்வை ஒபாமாவால் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் யதார்த்தம் என்கிறார்கள் தொழில்வல்லுநர்கள். வேண்டுமானால் அரசு தன்னுடைய வேலைகளை இந்தியாவுக்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ அவுட் ஸோர்ஸிங் செய்யாமல் இருக்கலாம். அடுத்து, அவுட் ஸோர்ஸிங் செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு சிலபல கெடுபிடிகளை விதிக்கலாம் அல்லது சலுகைகளைப் பறிக்கலாம். ஆனால் நீண்டகால நோக்கில் இது பலன் தராது. அவுட் ஸோர்ஸிங் காலத்தின் கட்டாயம், குறிப்பாக அமெரிக்காவுக்கு.

வெளிவிவகாரம் எல்லாம் சரி. அமெரிக்காவின் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒபாமாவுக்கு முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கின்றன. முதலில் உள்நாட்டு சவால்கள். முக்கியமாகப் பொருளாதாரச் சரிவு. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஒபாமா.
சரிந்த கோபுரங்கள் நிமிருமா?

முதல்கட்டமாக, அரசு செய்யும் அநாவசிய செலவுகளை முற்றிலுமாகக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்குவார். உதாரணமாக, ராணுவம், அந்நிய நாட்டின்மீது படையெடுத்தல் போன்றவற்றை படிப்படியாகக் குறைத்து, அதற்குச் செலவிடும் நிதியை, சமீபகாலமாக சப்பிரைம் கடன்களால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணமாகக் கொடுக்க ஏற்பாடுகள் செய்வார். ஏழை மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றில் பெரும் உதவிகளைச் செய்வார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

வழக்கமாக குடியரசுக் கட்சி அதிபர்கள் வர்த்தகக் கண்காணிப்பில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இதுதான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியின் தோற்றுவாய். அமெரிக்காவைப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீட்கும் வகையில் வர்த்தகக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவார் ஒபாமா என்பது சர்வ நிச்சயம். அதேபோல பெரிய தொழில் நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்.

Tax and Spend என்ற தங்களுடைய கொள்கையின்படி அதிக அளவில் வரிகளை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படுத்தும் நடவடிக்கையில் ஒபாமா அரசு தீவிரம் காட்டும். அதேசமயம், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகைகளும், மேல்தட்டு மக்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பும் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

`அதிபர் நாற்காலி மட்டும்தான் நாம் எதிர்பார்த்த மாற்றம் அல்ல. நாம் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் பதவி ஒரு வாய்ப்புஎன்று கூறியிருக்கிறார் ஒபாமா. அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கு நிறையச் சவால்கள் காத்திருக்கின்றன ஒபாமாவுக்கு. இனி மூச்சு விடுவதற்குக்கூட அவருக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஒபாமாவை நினைத்துப் பெருமிதம் பொங்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள், உலகெங்கும் வாழும் கறுப்பர்கள்!

Related Posts0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009