Friday, November 07, 2008

ஒபாமா வென்றது எப்படி?


ஒபாமாவின் வெற்றியின் பின்னணியில் நேர்த்தியாக ஒன்றிணைக்கப்பட்ட பிரச்சாரக் குழுவின் கடும் உழைப்பு மறைந்துள்ளது. ஒபாமாவின் பிரச்சாரக் குழு ஒருங்கிணைக்கப்பட்ட விதம் எவ்வளவு சிறப்பாக அமைந்திருந்ததென்றால் அது ஒபாமாவின் அனுபவமின்மையையை வலுவற்ற கருத்தாக்கியது. தேசிய அளவில் தனது எதிர் போட்டியாளைர்கள் அளவுக்கு அறியப்பட்டிராத ஒரு சாதாரண செனெட்டர் உட்கட்சி தேர்தலில் வென்றதை பலரும் ஒபாமாவின் செயல்திறனுக்குச் சான்றாகக் கண்டனர்.

துவக்கத்திலிருந்தே ஒபாமா எடுத்துக்கொண்ட பிரச்சாரக் கரு ‘மாற்றம்’. வீழ்ந்து கிடந்த ஜார்ஜ் புஷ்ஷின் Approval Ratingஐ தனக்கு சாதகமாக பயன்படுத்தியது ஒபாமாவின் அணி. ஒரே செய்தி. மாற்றம். ஒரே செய்தி. நம்பிக்கை. ஒரே செய்தி. நம்மால் முடியும். மீண்டும் மீண்டும் ஒபாமாவின் பிரச்சாரம் ஒபாமா என்றாலே மாற்றமும் நம்பிக்கையும் தரும் தலைவர் என்பதை நிறுவியது. ஒரு கட்டத்தில் ‘மெசியா’ என எதிரணியினரால் கேலி செய்யுமளவுக்கு இதன் உச்சம் இருந்தது.

ஒபாமாவின் சிறப்பான வெற்றி உட்கட்சி தேர்தல் வெற்றிதான். வெள்ளையினத்தவர் பெரும்பான்மை இருக்கும் ஐயோவா மகாண உட்கட்சி தேர்தலில் அவர் வென்ற பின்னரே அவர் ஒரு முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். அந்த வெற்றி தந்த ஊக்கமும் நம்பிக்கையும் கறுப்பினத்தவரை தூண்டிவிட்டது. அதன் பின்னரே வரலாறு உருவாக்கப்பட்டது.

மெக்கெயினின் தோல்விக்கும் அவரது பிரச்சாரம் மிகப் பெரிய காரணம். தன்னிச்சையாக முடிவெடுக்கும் ‘மாவெரிக்’ என தன்னைக் காட்டிக்கொண்ட மெக்கெய்ன் முற்றிலும் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களையும், வலதுசாரிகளையும் மட்டுமே திருப்திப்படுத்தும் பிரச்சாரத்தை செய்தார். ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளால் ரிப்பப்ளிக்கன் கட்சி மிகவும் வலுவிழந்திருந்தது. அதன் அடிப்படை ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த அதொருப்தி நிலவியது. அவர்களை மீட்டெடுக்கும் வேலை மெக்கெய்னுக்கு பெரிதாய் பட்டது. இதன் விளைவாக சாரா பேலின் துணை அதிபர் போட்டியாளரானார். ஒபாமாவுக்கு எதிரான அனுபவமின்மை குற்றச்சாட்டு வலுவிழந்தது. மட்டுமல்ல ஊடக நேர்காணல்களில் படு மோசமாக பதிலளித்து கேலிக்குரியவரானார் பேலின். மெக்கெய்னுக்கு சுமையாக அமைந்தார். அடிப்படை ரிப்பளிக்கன் கட்சிக்காரர்கலைத் தவிர்த்த பெண்கள் பேலினை தங்கள் பிரதிநிதியாகக் கொள்ளவில்லை.

டெமெக்ராட்டிக் கட்சி முதன் முறையாக 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்வது என முடிவு செய்தது. தங்களுக்கு அதிகம் ஆதரவு தரும் மகாணங்களிலும் மேலும் எந்தப்பக்கமும் சாயலாம் என இருக்கும் நடுநிலை மகாணங்களிலுமே இரு கட்சிகளும் போட்டியிடுவது வழக்கம். ஒபாமா 50 மகாணங்களிலும் பிரச்சாரம் செய்தார். விளைவாக தேசிய அளவிலான கருத்துக் கணிப்புக்களில் சாதகமான முடிவுகளைப் பெற முடிந்தது. இதற்கு தேவைப்பட்ட நிதியை அவரால் திரட்டவும் முடிந்தது. அமெரிக்கத் தேர்தல்களிலேயே அதிக நிதி செலவிடப்பட்ட தேர்தல் இது. அதிக செலவு செய்தவர் ஒபாமா.

மெக்கெய்னின் பிரச்சாரம் ஒபாமாவின் தனிப்பட்ட குணாதிசயங்களை குறிவைத்தது. தன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காயன்றி ஒபாமா மேல் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் முயற்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அத்தகைய எதிர்மறை பிரச்சாரம் ரிப்பளிக்கன்கள் மத்தியில் செல்லுபடியானதை மறுக்க இயலாது. விளைவாக மெக்கெய்ன், பேலின் பிரச்சாரக் கூட்டங்களில் வந்தவர்கள் ஒபாமாவை தீவிரவாதி என்றும் கொல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியது கட்சி சாரா நடுநிலையாளர்களை வெறுப்பேற்றியது.

இந்தத் தேர்தலில் இளைஞர்களின் பங்கு சிறப்பானது. உட்கட்சி தேர்தல் முதலே ஒபாமாவின் பிரச்சாரம் இளைஞர்களை ஈடுபடுத்தியது. இணையம் முதற்கொண்ட இளைஞர்களின் களங்களில் ஒபாமாவின் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கதாயிருந்தது. இறுதியில் இளைஞர்களை வாக்குச் சாவடிகளுக்கு இட்டுச் சென்றது. பல இளைஞர்களும் தங்கள் பெற்றோருக்கும் வீட்டிலிருந்த பெரியவர்களுக்கும் ஒபாமாவை குறித்த உண்மைகளைச் சொல்லி விளங்கச் செய்தனர். மெக்கெய்னின் வயது அவருக்கு எதிரான பண்பாக அமைந்தது.

ஆளுமை விஷயத்தில் மெக்கெய்ன் முதலிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு ரிப்பப்ளிக்கன் செனெட்டராக இரு கட்சிக்காரர்களுடனும் சுமூக உறவை வைத்துக் கொண்டவரும், கட்சிக்கு எதிரான முடிவுகளை துணிந்து எடுப்பவரும் ஊடகங்களால் விரும்பப்படுபவருமாயிருந்த மெக்கெய்ன் விவாதங்களின்போது எரிச்சலுடனும் கோபத்துடனும் நிதானமிழந்தும் காணப்பட்டது கவனத்துக்குள்ளானது. குறிப்பாக ஒபாமாவின் திடமான், உறுதியான ஆளுமைக்கு எதிரில் மெக்கெய்னின் ஆளுமை சறுக்கல்கள் பூதாகரமாய் தெரிந்தன.

ஒபாமாவிற்கு பெரும்பாலும் வாக்களித்தவர்கள் பெண்களும் சிறுபான்மையினருமே. ஜனநாயகத்தில் ஒருங்கிணைந்த சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்பதை கறுப்பினத்தவர்களும், இங்குள்ள ஹிஸ்பானிக்குகளும் உணர்த்தியுள்ளனர்.

ஒபாமா இனப்பின்னணியில் பிரச்சாரம் செய்யவில்லை. அப்படியே அவர் செய்திருந்தாலும் அதற்கு வலுவிருந்திருக்காது. அவர் அடிமைகளின் வழி வந்த ஆப்ரிக்க அமெரிக்கர் அல்லர். அவர் முழுக்க முழுக்க வெள்ளையினப் பின்னணியில் வளர்ந்த கறுப்பர். நிறத்தினனடிப்படையில் பிரிவினை என்கிறபோது நிச்சயம் அவருக்கும் பல கசப்பான இனப் பிரிவினை அனுபவங்கள் இருந்திருக்கும். ஆயினும் மற்ற பல கறுப்பினத் தலைவர்களைப்போல கசப்பான அடிமைத்தன வரலாற்றை கேட்டோ அனுபவித்தோ வளர்ந்தவரல்ல ஒபாமா. இந்த வித்தியாசம் மிக நுணுக்கமானதும் முக்கியமானதுமாகும். இதனாலேயே அவர் தன்னை அமெரிக்காவில் வாழும் ஒரு கறுப்பன் என்றில்லாமல் கறுப்பாகத் தெரியும் ஒரு அமெரிக்கனாக முன்நிறுத்த முடிந்தது. அவரது ஆளுமை அமெரிக்காவின் மதிப்பீடுகளில் தோய்ந்தது, வெறும் கறுப்பின ஆளுமையல்ல அது. அவரது கனவுகள் அமெரிக்காவுக்கானதாயிருந்தது கறுப்பினத்தவருக்கானதாயில்லை. அமெரிக்க மதிப்பீடுகளின் மையத்தை நோக்கி எல்லா இனத்தவரையும் அவரால் இழுக்க முடிந்தது இதனாலேயே.

மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சார அணி, துவக்கத்திலிருந்தே சொல்லப்பட்ட நிலையான பிரச்சார செய்தி, இனம் தாண்டி அனைவரையும் உள்ளடக்கிய பிரச்சாரம், கூடவே ஒபாமாவின் கவர்ச்சிகரமான, நிகழ்காலத் தலைவருக்கு தேவையானதாய் கருதப்படுகிற ஆளுமை ஒபாமாவின் பலமாய் அமைந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் தோல்விகளும், தவறுக்கும் மேல் தவறிழைத்த, தன் ஆதரவாளர்களை மட்டுமே திருப்தி செய்த பிரச்சாரமும் மெக்கெய்னின் பலவீனமாய் அமைந்தது.

Related Posts



1 கருத்துக்கள்:

Anonymous said...

super

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009