இது தேர்தல் சீஸன்!
அதிகாரம் யாருக்கு என்பதுதான் எல்லாத் தேர்தல்களும் தீர்மானிப்பது. மக்களின் விருப் பங்கள் என்ன என்று தெளிவு பெற விகடன் எடுத்தது மெகா சர்வே.
அதுவும் வாக்குச் சாவடிக்கு வலது காலை முதல் தடவையாக எடுத்துவைக்கும் இளம் தலைமுறை என்ன நினைக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினோம்.
'இளைஞர் ஓட்டு யாருக்கு?' என்ற கேள்வியே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதுதான் முதல் மெகா சர்வேயின் அடித்தளம். அரசியல் மேடைக்கு இந்தத் தலைமுறை முதல் முத்தம் வைப்பதற்கு முன்னால் அவர்களின் ஆசைகள், கோபங்கள், விருப்பங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரியான கேள்வி கள் தயாரிக்கப்பட்டன. வாக்களிக்கும் வயது 18 என்பதால் கேள்விகளும் 18.
'உங்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் மனிதரிடம் முதல் தகுதியாக என்ன எதிர்பார்ப்பீர்கள்?' என்பதில் ஆரம்பித்து, 'அடுத்த பிரதமராக வரப் போவது யார்?' என்பதில் முடிகின்றனகேள்வி கள். தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்ற நமது டீம், 18 வயதைத் தாண்டிய கல்லூரி மாணவ-மாணவியர், வேலை பார்க்கும் இளைஞர்கள், வேலைக்குக் காத்திருப்போர், விவசாயி கள், தொழிலாளர்கள் என இளவட்டங்களாகப் பார்த்து கேள்வித் தாள்களை நீட்டினோம்.
'இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் அக்கறை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்ற கவலையே இல்லை. காலேஜ், சினிமா... இரண்டைத் தாண்டி எதுவுமே தெரியாது' என்று பெருசுகள் உதிர்க்கும் அவச் சொற்கள் அத்தனையும் பொய். ஐந்தாவது கேள்விக்கான பதில்களில் 'ஓட்டுக்குத் துட்டு கொடுக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற பதிலை ஏன் சேர்க்கலை?' என்று மதுரை கல்லூரி மாணவி ஒருவர் கேட்டார். நம் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் மட்டுமல்ல, அக்கறையும் அதைத் தாண்டிய தீர்க்கமான முடிவுகளும் இருக்கின்றன என்பதுதான் விகடன் கண்டுபிடித்த முதல் ரிசல்ட். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்!
''இளைஞர்களுக்கு அரசியல் அறிவு இல்லாததால்தான் நல்ல தலைவர்கள் உருவாவது தடைப்பட்டது'' என்று பெரியகுளம் ஜெயராஜ் கலைக் கல்லூரி மாணவர் முருகன் காரணம் சொன்னார். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவி உமா கௌரி அடித்த காமென்ட்டுகள் விறுவிறுப்பானவை. ''ஓட்டுப் போடவே எரிச்சலா இருக்கு. ஆனா, ஓட்டுதான் அரசியல் மாற்றத்துக்கான ஒரே ஆயுதம் என்பதால் நிச்சயம் வாக்களிப்பேன். அரசியல் இன்று வியாபாரமாக ஆகிவிட்டது. அதை மாற்றக்கூடியவர்கள் இளைஞர் படைதான்'' என்று கொட்டித் தீர்த்தார்.
அரசியல்வாதிகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் கோபங்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. 'தேர்தலுக்குச் செலவழிப்பதற்குப் பதில், தங்களுக்குள் பேசி முடிவெடுத்து ஆறு மாதங்களுக்கு ஒருவர் என்று சுரண்டித் தின்ன வேண்டியதுதானே?'' என்று கொதித்தார் திருவாரூர் ராஜா என்ற மாணவர்.
ஊழல் அரசியலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கிச் சொத்து குவிப்பதை அருவருப்பாகவும் இன்றைய இளைஞர்கள் நினைப்பது நம்பிக்கை தருவதாக இருந்தது.
இன்று தமிழ்நாட்டில் சூடான பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது இலங்கை விவகாரம். இது குறித்துஇளைஞர் களுக்குக் கவலைகள் அதிகம் இருக்கின்றன. 'எந்தக் கட்சியும் இலங்கைத் தமிழர்களுக்குச் சரியான நம்பிக்கையைத் தர வில்லை' என்கிறார்கள். 'நிச்சயமாக இலங்கைப் பிரச்னை, காங்கிரஸையும் அதோடு ஒட்டி உறவாடும் கட்சிகளையும் பாதிக்கும்'' என்று ஆவேசப்பட்டவர் திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமார். 'இலங்கைத் தமிழருக்காக இதுவரை எதுவும் செய்யாம, இப்ப திடீர்னு உண்ணாவிரதம் உட்கார்றாங்களே. ஏன் இந்த திடீர் கரிசனம்?' என்று கிண்டலடித்தார் அதே ஊரைச் சேர்ந்த உதயா என்ற மாணவி. ஓட்டுக்காக அரசியல்வாதிகள் இந்தப் பிரச்னையை உருட்டிக்கொண்டு இருப்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளார்கள்.
எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டேன் என்று விஜயகாந்த் சொல்லி வந்தாலும், அவர் எதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் சேருவார் என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கிறது. ''தனியாப் போட்டியிட்டால்தான் அவருக்கான உண்மையான செல்வாக்கு என்ன என்பது அவருக்கே தெரியும்'' என்று ராமநாதபுரத்தில் ஒரு மாணவி சொல்ல, அவருடன் இருந்த தோழி, ''அப்படி அவரு போட்டியிட்டா நிச்சயம் எல்லாத் தொகுதியிலயும் டெபாசிட் போகும். அதைப் பார்த்தாவது புதுசா யாரும் கட்சி ஆரம்பிக்க மாட்டாங்க'' என்று அதிர்ச்சி ஊட்டினார்.
யார் பிரதமராக வர வேண்டும் என்ற கேள்விக்கு மன்மோகனும் அத்வானியும்தான் இளைஞர்களின் சாய்ஸாக இருந்தது. மாயாவதியில் ஆரம்பித்து ஜே.கே.ரித்தீஷ் வரை தங்களுக்குப் பிடித்த ஆட்கள் பெயரைச் சொல்லி காமெடி பண்ணவும் தவறவில்லை. அக்கறையுள்ள இந்தியன், நேர்மை யானவர், நாட்டுப்பற்றுள்ளவர் பிரதமராக வர வேண்டும் என்பது பலரது ஆசை.
விகடன் டீம் சந்தித்தது மொத்தம் 2,301 இளைஞர்களை. அவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் மகத்தான செய்திகளை நாட்டுக்கு அறிவிப்பதாக அமைந்துள்ளன. யாரு டைய தாக்கமும் இல்லாமல் சுய முடிவுப்படிதான் நாங்கள் வாக்களிப்போம் என்று இளைஞர்கள் சொன்னது நம்பிக்கை யாக இருந்தது. தனது பிரதிநிதியாக சட்டமன்ற, நாடாளு மன்றத்தில் இருப்பவர் படித்தவரா, உள்ளூர்க்காரராஎன்பதை விட, ஊழலற்ற மனிதரா என்பதே முக்கியம் என்கிறார்கள். சாதி அரசியலை வெறுக்கும் இளைஞர்கள், ஓட்டைத் துட்டுக்கு விற்கும் செயலைக் கொடும் குற்றமாகக் கருது கிறார்கள். ஓர் அரசியல் தலைவரின் வாரிசு தகுதியானவராக இருந்தால், அவரை அரசியலுக்குக் கொண்டுவருவது தவறல்ல என்றும் கருதுகிறார்கள் இளைஞர்கள். அரசியல்வாதிகள் மீது எல்லாக் கோபங்களும் வைத்திருக்கும் இளைஞர்கள் வாக்களிப்பது அவரவர் விருப்பம் என்று சொல்லி அதிர்ச்சி ஊட்டுகிறார்கள். ஓட்டுப் போடு என்று கட்டாயப்படுத்துவதை விரும்பவில்லை. அரசாங்கம் வழங்கும் சலுகைகளை ரத்து செய்யலாம் என்றும் பலர் வாக்களித்துள்ளார்கள்.
கல்லூரிகளுக்குள் அரசியல் புகுவதை இவர்கள் விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்துக்குள் அரசியல் புகுந்து, நடுநிலையான அமைப்பைச் சிதைத்து வருவதை வேதனையுடன் பார்க்கிறார்கள். ஈழப் பிரச்னையில் கருணாநிதியின் அணுகுமுறை தமிழினத் துரோகம் என்று முகத்தில் அடிப்பது மாதிரி தீர்ப்பளித்துள்ள இளைஞர்கள், ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தையும் பச்சையான சந்தர்ப்பவாதம் என்று கண்டிக்கிறார்கள்.
மதத் தீவிரவாதத்தை எதிர்த்துப் பேசுவதில் இளைஞர்கள் ஓட்டை இடதுசாரிகளால் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. பெண்களுக்கு அ.தி.மு.க-தான் அதிக முக்கியத்துவம் தருவதாக இவர்கள் சொல்கிறார்கள்.
'வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபட விருப்பமா?' என்ற கேள்விக்கு, 'எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ்ந்தால் நிச்சயமாக வருவேன்' என்று 2,301 பேரில் 1,141 பேர் சொன்னார்கள்.
எல்லா இரவும் விடியும் என்பதே நம்பிக்கை!
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments