சென்னைக்கு வரும் ஹீரோ, ஒண்டி ஆளாக நின்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலங்கடிப்பதுதான் கதை! கதை புதுசு. காட்சிகள் பழசு என்பதால் கடுப்பும், கைத்தட்டல்களுமாக கலப்பட ரசனைக்குள்ளாக்குகிறார் இயக்குனர் கிச்சா.
ஆரம்ப காட்சியில் சென்சார் கொஞ்சம் அசந்திருந்தாலும் ரசிகர்களுக்கு முடி கயிறு வைத்தியம் அவசியப்பட்டிருக்கும். நல்லவேளை... நிர்வாண கோலத்தில் ஓங்கு தாங்காக நடந்து வரும் சுந்தர்சி க்கு ஒரு கட்சி பேனரை இடுப்பில் கட்டி காப்பாற்றுகிறார் தலைவாசல் விஜய். பின்பு அதே கட்சியில் எம்.எல்.ஏ ஆகிற அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்கிறார் சுந்தர்சி.
பிரபல அரசியல் தலைவனிடம் திட்டம் போட்டு தஞ்சமடையும் இவர், அவர்களை பழிவாங்குவதுதான் க்ளைமாக்ஸ். ஏன் என்பதற்கு நெஞ்சை பதற வைக்கும் ஒரு பிளாஷ்பேக். அநேக படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும், பின்னாளில் ஹீரோவின் அழிச்சாட்டியங்களுக்கு சப்பை கட்டு கட்டுகிறது இந்த பகுதி. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு 'ரிவார்டு' கிடைக்கிறதோ இல்லையோ, 'ரிவிட்' உண்டு என்பதை கலங்கடிக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
பிளாஷ்பேக்கில் இன்ஸ்பெக்டர் சாமியாக அவதாரம் எடுத்திருக்கிறார் சுந்தர்சி. இவரால் பாதிக்கப்படுகிற எம்.எல்.ஏக்களை லாக்கப்பில் தள்ளுகிறார். 'ஏய் நான் யாரு தெரியுமா' என்று நெஞ்சை நிமிர்த்துபவர்களுக்கு இவர் கொடுக்கிற சூடு ஒவ்வொன்றும் பெட்ரோல் குண்டு! தனது உயர் அதிகாரியையே லாக்கப்பில் தள்ளும் சுந்தர்சி யின் வீரத்திற்கு கைதட்டல்கள் நிச்சயம் உண்டு.
இரண்டாம் பாதியில் இவருக்கு ஜோடி நமீதா. அரசியல்வாதிகளை கைக்குள் வைத்திருக்கும் நடிகை வேடம். நமீதாவை நடுவில் நிற்க வைத்துவிட்டு நாலு புறமும் நின்று கண்காட்சி நடத்தியிருகிறது கேமிரா. நமீதா-சுந்தர்சி மசாஜ் காட்சிகள் 'கெட்டக்கல்' ஆர்ய வைத்திய சாலை! சில காட்சிகளில் புடவை கட்டியும் இருக்கிறார். கண் 'கொள்ளாக்' காட்சி!
நியாயமான போலீஸ் அதிகாரியாக மனோஜ் கே ஜெயன். இவரது பதவிக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த சுந்தர்சி செய்கிற காரியங்கள் பரபரப்பு என்றால், வீறு கொண்டு எழும் காவல் துறையினர் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வேலை நிறுத்தம் செய்து ஸ்தம்பிக்க வைப்பது அதிர்ச்சி. போலீஸ் இல்லையென்றால் நாடு என்னாகும் என்பதற்கு இன்னும் உருப்பாடியாக சீன்களை யோசித்திருக்கலாமே கிச்சா?
உடம்பில் எந்தெந்த பகுதிகளில் கத்தியால் குத்துபட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை விவரமாக அறிந்து கொண்டபின், குத்துப்பட்டு ரத்தம் கக்கும் சுந்தர்சி அதுபோல இன்னும் சில காட்சிகளில் கலக்குகிறார்.
சுமார் ஒரு டஜன் வில்லன்கள் இருந்தும், மாறாத ஆக்ரோஷம்! தேறாத சவடால்கள்!
அவ்வளவு நெருக்கமான எதிரி, யூனிபார்மை கழற்றிவிட்டு வந்தால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா, அவனையே எம்எல்ஏ ஆக்குகிறார்களே? லாஜிக்கிற்கும் சேர்த்து தீ மூட்டியிருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'கா கா கா' ரீமிக்ஸ் துள்ளல். (படமாக்கிய விதம்தான் அல்லல்)
தீ- பட்டால் என்னாகுமோ அதுதான் நடக்கிறது வெளியே வரும்போதும்!
கேபிள் சங்கரின் தீ – திரைவிமர்சனம்
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments