
அமெரிக்க அதிபராக பதவியேற்க ஒபாமா, ஆப்ரகாம்லிங்கனைப் போல ரயிலில் வந்திருக்கலாம். ஆனால் பரபரப்பான அதிபர் பதவியில் இருப்பவர் எப்போதும் ரயிலை நம்ப முடியுமா என்ன. அவரை சுமந்துச் செல்ல ‘ஏர் போர்ஸ் ஒன்’ தயார்.
ஏர் போர்ஸ் ஒன் என்றால் அமெரிக்காவை பொறுத்தவரை, அது அமெரிக்க அதிபரைச் சுமந்து செல்லும் தனி விமானத்தைத்தான் குறிக்கும். முதல் குடிமகன் என்பது போலத்தான் இதுவும். அதிபரை சுமக்கும் ஏர் போர்ஸ் ஒன் விமானம் 747-200B வகையிலான போயிங்க் விமானம்தான் என்றாலும், அதில் உள்ள வசதிகளை அறிந்தால் உங்கள விரல் தானாக மூக்கின் மேல் தடவ ஆரம்பிக்கும்.
அதிபர் பயணிக்கும் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் மேற்புறத்தில் ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ என்ற வழக்கமான கொட்டை எழுத்துக்களுடன் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் முத்திரையும் காணப்படும். அவை பறக்கும் போதும் சரி, ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போதும் சரி, தனியாகத் தெரிகிற வகையில் பளிச்சென மின்னும் வகையில் பொறிக்கப்பட்டிருக்கும்.
அமெரிக்க அதிபர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வானத்தில் பறந்துகொண்டே இருக்கலாம். ஏர் போர்ஸ் ஒன் விமானத்திற்கு எரிபொருள் பற்றிய கவலையே வேண்டாம். அதிகபட்சமாக நிரப்பிக் கொள்ளும் டாங்க்கை அது கொண்டிருந்தாலும், தேவைப்படும்பட்சத்தில் வானத்திலேயே நிரப்பும் வகையில், பெட்ரோல் விமானங்கள் வந்து பெட்ரோல் நிரப்பிவிட்டுச் செல்லும்.
இதன் உள்கட்டமைப்பும் பிரமிக்கத்தக்கது. எலக்ட்ரோ மேக்னடிக் அலைகளால் விமானம் பாதிக்கபடாத வகையில் இதனுள்ளே எலக்ட்ரானிக் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு விஷயத்திலும், தகவல்தொடர்பு சங்கதியிலும் நவீன கருவிகளைத் தன்னகத்தே கொண்டது.
அமெரிக்காவின் மீது எதாவது தாக்குதல் என்றால் வானத்தில் இருந்தே செயல்படும் ‘உத்தரவு மையமாக’ செயல்படும் திறன் கொண்டது ஏர் போர்ஸ் ஒன்.
படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்

அந்த விமானத்தை இயக்கும் அறை தவிர, அதிபருக்கென்று உள்ள பிரத்யேகமான மருத்துவ அறையில் ஒரு தலைசிறந்த மருத்துவர் எந்நேரமும் தங்கியிருப்பார். அதற்குள் அவசர அறுவை சிகிச்சை அறையும் உண்டு. அத்துடன் அதிபர் மற்றும் அவருடன் பயணிக்கும் (100 பேர்வரை) நபர்களுக்கும் இரண்டு அறைகளில் உணவு தயாராகிக்கொண்டேயிருக்கும்.
அமெரிக்க அதிபருடன் அவருடைய ஆலோசகர்கள், ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள், நிருபர்கள், மற்ற விருந்தினர்களும் பயணிப்பார்கள். மேலும், அதிபரின் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தின் மேலாக சில கார்கோ விமானங்கள் பறந்து வரும். அதிபரின் தேவைகளை பூர்த்தி செய்யும் அத்தியாசியமான பொருட்கள் இவற்றில் இருக்கும்.
இந்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தை வெள்ளை மாளிகையின் ராணுவப் பிரிவைச் சேர்ந்த ‘பிரெஸிடென்சியல் ஏர்லிப்ட் குரூப்’ என்ற பிரிவு இயக்குகிறது. இந்தப் பிரிவானது பிராங்களின் ரூஸ்வெல்ட் அதிபராக இருந்த காலத்தில், 1944ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதிலிருந்து இதன் கீழ்தான் ஏர்போர்ஸ் ஒன் இயக்கப்பட்டு வருகிறது. ஜான் கென்னடி (1962) அதிபரானதும் போயிங் - 707 வகையிலான தனி விமானத்தை தனக்கென்று வாங்கி பயன்படுத்தினாராம். இடைப்பட்ட காலத்தில் ஏர் போர்ஸ் ஒன்னிற்கு பல வகையிலான ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
தற்போதுள்ள போயிங் விமானம் அமெரிக்க அதிபராக புஷ் பதவியேற்றதும், 1990இல் இருந்து நடைமுறையில் உள்ளது.
நன்றி - தமிழ்வாணன்
0 கருத்துக்கள்:
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments