Wednesday, December 17, 2008

தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க ஐடியாக்கள் சில



கூடிய விரைவில் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வரப்போகிறது. இப்போதே நம் அரசியல் பெருந்தலைகள் தேர்தல் அறிக்கைகளுக்கு விஷயங்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிடுவர். நாட்டுக்காகப் படாதபாடு(!) படும் அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு யோசிக்க வேண்டாமே என்ற நல்லெண்ணத்தில், செய்யவேண்டிய அதிமுக்கிய வேலைகளையும் தூக்கி ஓரமாய்ப் போட்டுவிட்டு முடிந்த வரை முக்கி முக்கி யோசித்ததில் வந்து விழுந்த ஐடியாக்கள் தான் இவை.

இவை முழுக்க முழுக்க காப்பிரைட்(!) செய்யப்பட்டவை என்றும் இவற்றை உபயோகப்படுத்திக்கொள்ள தகுந்த கட்டணம் செலுத்த வேண்டுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். திராவிடக் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்!

கட்டணம்?? ஏதோ நீங்க பார்த்துப் போட்டுக்குடுத்தா சரிதான் முதலாளி... நம்பிக்கை தானே வாழ்க்கை!

கவிதை எழுதும்போது மானே தேனே அப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும்னு குணா படத்தில் கமல் சொல்வார். தேர்தல் அறிக்கைன்னா அது போல, நிச்சயமாக, ஆணித்தரமாக, உறுதியாக, கடவுள் சத்தியமாக, மக்கள் தலைமேல் ஆணையாக(!) இப்படியெல்லாம் நடுநடுவே போட்டுக்கணும். அப்போதான் கொஞ்சம் வெயிட்டா இருக்கும். கடைசியில மக்கள் 'குணா' மாதிரி ஆகணும்ல!!

பாயிண்ட்சுக்குப் போவோமா..

1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையைத் தூக்கி நிறுத்தி, சென்செக்ஸ் 50,000 புள்ளிகளுக்கு எகிறடிப்போம் என்பதை அறுதியிட்டுக் கூறுகிறோம்.

2. இந்திய ஹாக்கி அணிக்கு குளுக்கோஸ் கொடுத்து, புத்துயிரூட்டி 2040ல் நிச்சயம் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுவிடுவோம்.

3. இந்திய நதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து குழாய்களில் அரபு நாடுகளுக்குத் திருப்புவோம். பதிலுக்கு எண்ணெய் பெற்று இந்தியாவை வளப்படுத்துவோம்.

4. கோதாவரியையும், நர்மதையையும் பெப்சிக்கும், கோக்கிற்கும், தாரை வார்த்து குளிர்பான அறுவடை செய்வோம்.

5. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் பெருவெற்றியைத் தொடர்ந்து இந்தியா முழுவதிலும் கிளைகள் தொடங்குவோம். இந்தியாவை தண்ணியில்லாக் காடு என்று யார் சொல்ல முடியும்?

6. இந்தியக் கிரிக்கெட் அணியின் சிறப்பான வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் ஐநூறு கோடி ரூபாய் ஒதுக்குவோம்.

7. புதிதாக சாப்ட்வேர் பார்க் தொடங்க இடம் இல்லாததால் சத்தியமங்கலம் காடுகளை அழித்து இடம் உருவாக்கப்படும். இதன்மூலம் லட்சோபலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

8. சிறப்பான தமிழ் தலைப்புகளை படத்தின் பெயராக வைத்து 'தமிழ்' மொழியைப் பாதுகாத்து வரும் படத் தயாரிப்பாளர்களுக்கு அகில இந்திய அளவில் விருதுகள் வழங்கப்படும்.

9. ஐக்கிய நாடுகள் சபையை இந்தியாவிற்கு இடமாற்றம் செய்ய ஆவன செய்யப்படும்.

10. அமெரிக்காவிற்கு முன்னால் செவ்வாய்க்கு ஆள் அனுப்பி வெற்றிக்கொடி நாட்டப்படும்.

11. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த மென்பொருள் நிறுவனங்களின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். படிப்படியாக அடுத்த ஐந்து பட்ஜெட்களில் இது ஈடுகட்டப்படும்.

12. அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

13. நான்குவழிப்பாதை திட்டம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகியும் அது இன்னும் முடியாமல் இருப்பதால் கையோடு எட்டு வழிப்பாதையாகவும் ஆக்கிவிடுவோம்.

14. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

15. மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்படும்.




நன்றி ------ ரிஷிகுமார்

Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009