உள்துறைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட கையோடு சிதம்பரம் இரண்டு புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். மும்பை பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தச் சட்டங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. நிலவுகிற பயங்கரவாதச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, இருக்கிற சாதாரணச் சட்டங்கள் போதாது என்பது அரசின் வாதம். பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆதரவோடு இவை இயற்றப்பட்டுள்ளன. இடதுசாரிகளின் பலவீனமான முணுமுணுப்புகள் நாடாளுமன்றத்திற்குள் எடுபடவில்லை. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. வைத்த ஒரே விமர்சனம், இன்னும் கடுமையாக இந்தச் சட்டம் அமையவில்லையே என்பதுதான்.
இந்தச் சட்டங்களின் மூலம் தேசிய அளவில் இன்னொரு புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு மாநில அரசுகளின் கையில் இருந்த போதும் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைப் புலனாய்வு செய்யும் அதிகாரத்தைப் புதிய அமைப்பு எடுத்துக் கொள்கிறது. இன்னொரு பக்கம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள `சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்' பல புதிய கடுமையான கூறுகளை உள்ளடக்கித் திருத்தப்பட்டுள்ளது.
தேசியப் புலனாய்வு அமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கும் என்பது எதிர்பார்த்ததுதான். எல்லாவற்றையும் அமெரிக்கா போலவே மாற்றிவிட வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ரொம்ப காலமாகச் சொல்லிக் கொண்டிருந்ததுதான். ஏதாவது பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றால் `பொடா' சட்டம் நீக்கப்பட்டதுதான் காரணம் என்கிற ரீதியில் அத்வானி பேசுவதும், அமெரிக்காவிலுள்ள எஃப்.ஐ.ஏ. போல இங்கும் ஒன்று தொடங்க வேண்டும் என மன்மோகன் சொல்லுவதும் வழக்கமாக இருந்து வந்தது.
`குற்ற நீதிவழங்கு முறை தொடர்பான புதிய தேசியக் கொள்கை'யை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட என்.ஆர். மாதவமேனன் குழு, ஜூலை 2007-ல் அறிக்கை சமர்ப்பித்தபோது இந்தப் பரிந்துரையை முன் வைத்திருந்தது. ஜூன் 2008-ல் அறிக்கை சமர்ப்பித்த `நிர்வாகச் சீர்திருத்தக் குழு'வும் புதிய புலனாய்வு அமைப்பின் தேவையை வற்புறுத்தி இருந்தது.
பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் ஒரு மாநிலத்திற்குள் நின்று விடுவது இல்லை. சாதாரணச் சட்டங்கள், நீதி வழங்கு நெறிமுறையில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அடிப்படைகள் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளப் போதாது என்பது அரசின் வாதம். ``சில அடிப்படையான மனித உரிமை நெறிகளைத் தூக்கி எறிவது தவிர்க்க இயலாது'' என்கிறார் மன்மோகன்.
இந்தக் காரணங்களுக்காகவே இந்தப் புதிய சட்டங்களை மனித உரிமை இயக்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. நீதி வழங்கு முறையில் உலகெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்படும் நெறிகள் மூன்று:
ஒன்று : குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவரை குற்றமற்றவராகவே கருத வேண்டும்.
இரண்டு : அரசியல் சட்டத்தின் 20(3)வது பிரிவின்படி விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருக்கலாம்.
மூன்று : குற்றத்தை நிரூபிக்கும் சுமை குற்றத்தைச் சுமத்தும் காவல்துறையுடையது.
இதில் முதலாவது அம்சத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் வெளிப்படையாக மறுக்கிறது. புதிய திருத்தத்தின்படி பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை உண்மை என ஏற்றுக்கொள்ளும். `இல்லை' என நிறுவும் பொறுப்பு குற்றம் சுமத்தப்பட்டவரின் சுமை ஆகிறது. எனவே, மன்மோகன்சிங் சொன்னது போல முதல் மற்றும் மூன்றாம் நெறிகள் இதன் மூலம் தூக்கி எறியப்படுகின்றன. இரண்டாம் நெறிமுறையும் மறைமுகமாக மறுக்கப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் இந்நிலையில் பதில் சொல்லாமல் இருக்க முடியாது என்பது தவிர, உண்மை அறியும் சோதனைகளின் மூலமும் அவர் கட்டாயமாகப் பதில் சொல்ல வைக்கப்படுகிறார்.
பிரமாண்டமான அரசு எந்திரம், காவல்துறை, உளவு நிறுவனங்கள் ஆகியவற்றின் முன் சட்டத்தின் துணை ஒன்றை மட்டுமே நம்பி நிற்பதாலேயே குற்றம் சுமத்தப்பட்டவருக்கு இந்த உரிமைகள் உலக அளவில் வழங்கப்படுகின்றன. எனினும் இவை இன்று குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.
ஒன்றைச் சொல்ல வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யு.எல்.ஏ.பி சட்டம்) திருத்தப்படுவது இது முதல் முறை அல்ல. காங்கிரஸ் தலைமையிலான இன்றைய மத்திய அரசு, அதன் தேர்தல் வாக்குறுதிக்கிணங்க 2004-ல் பொடா சட்டத்தை நீக்கியபோது, கூடவே யு.எல்.ஏ.பி. சட்டத்தையும் திருத்தியது. பழைய சட்டத்துடன் மூன்று புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு `பொடா' சட்டத்தின் பல கடுமையான கூறுகள் இதில் இணைக்கப்பட்டன. இன்று இந்திய அளவில் கைது செய்யப்பட்டுள்ள பல மனித உரிமைப் போராளிகள் மீது இச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈழப் பிரச்னை பற்றி அத்துமீறிப் பேசினால் இச்சட்டம் பயன்படுத்தப்படும் என சமீபத்தில் அமைச்சர் துரைமுருகன் மிரட்டியது நினைவிருக்கலாம்.
எனினும் 2004-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் பிணை விதிகள் (bail provisions) மட்டும் திருத்தப்படவில்லை. இன்று அவையும் திருத்தப்பட்டுள்ளன. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமலும் பிணையில் விடுதலை செய்யாமலும் சிறையில் வைத்திருக்கும் குறைந்தபட்ச காலம் மூன்று மாதம் என்பதிலிருந்து ஆறு மாதங்களாக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் என்றால் அவர்களுக்குப் பிணையே கிடையாது. இந்தியக் குடிமக்களாக இருந்த போதும் பிராசிகியூஷன் தரப்பில் அனுமதி இல்லாமல் பிணை விடுதலை கிடையாது.
இப்படியான கடுமையான பிணை விதிகள் தவிர, குற்றம் சுமத்தப்பட்டவரின் நிதி ஆதாரங்களை முடக்குதல், பறிமுதல் செய்தல் ஆகிய உரிமைகளும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின் 16கி பிரிவின்படி வெடிமருந்து வைத்திருத்தல் முதலான குற்றங்களுக்குப் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். உதவி செய்பவர்களுக்கு ஐந்தாண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கலாம்.
ஆக, விசாரணையின்போது, காவல்துறையினர் முன் வழங்கும் வாக்குமூலங்களைச் சாட்சியாக ஏற்றுக் கொள்ளுதல் என்கிற ஒன்றைத் தவிர, மற்ற அனைத்துப் `பொடா' சட்டக் கூறுகளையும் ஏற்றுக்கொண்ட புதிய பொடா சட்டம்தான் இது. சித்திரவதைகளின் மூலம் பெறுகிற வாக்குமூலங்களையே ஆதாரங்களாக ஏற்பதையும் உள்ளடக்கவில்லை என்பதை மட்டுமே புதிய சட்டத்தின் ஒரே குறையாக இன்று பா.ஜ.க. முன் வைக்கிறது. கடுமையான சட்டங்களின் மூலம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக வரலாறு இல்லை. `பொடா' சட்டம் இருந்த போதுதான் நாடாளுமன்றத் தாக்குதல், செங்கோட்டைத் தாக்குதல், அக்ஷர்தாம் தாக்குதல் எல்லாமும் நடந்தன. இப்போதும் மகாராஷ்டிரத்தில் கடுமையான `எம்கோகா' சட்டம் உள்ளது.
ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. `தடா', `பொடா' முதலானவை தாற்காலிகச் சட்டங்கள். இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றே அவற்றை நீட்டிக்க முடியும். யு.எல்.ஏ.பி. சட்டமோ நிரந்தரச் சட்டம். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத்திய அரசு நெருக்கடிச் சூழலுக்குரிய அசாதாரணச் சட்டக் கூறுகளை (Extraordinary provisions) சாதாரண வழமையான (Normal/ordinary) நிரந்தரமான சட்டங்களாக மாற்றிவிட்டது.
தேசியப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே இங்கு ஐ.பி., `ரா', சி.பி.ஐ. போன்ற மத்திய அளவிலான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. `பாதுகாப்புத்துறை நுண்ணறிவு முகமை' (டி.ஐ.ஏ), `தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு' (என்.டி.ஆர்.ஓ), `போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு' (என்.சி.பி), `ரெவின்யூ நுண்ணறிவு மற்றும் கூட்டு நுண்ணறிவுக் குழு' (ஜே.ஐ.சி) எனப் பல மத்திய அமைப்புகள் சமீப காலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை உருவாக்கப்பட்டபின் எந்தப் பெரிய புதிய சாதனைகளும் நிகழ்ந்துவிடவில்லை. இன்னும் ஒரு புதிய அதிகாரத்துவ அமைப்பாக மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படுவதே இன்றைய `தேசியப் புலனாய்வு அமைப்பு' என்கிற விமர்சனம் இன்று வைக்கப்படுகிறது.
இத்தகைய அமைப்புகள் வெளிப்படையற்றுச் செயல்படுவதாலும், அதிகாரத்தில் உள்ளவர்களோடு மிக நெருக்கமாக இருப்பதாலும் உலக நாடுகள் பலவற்றில் இயங்கும் இத்தகைய அமைப்புகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளன. 48 ஆண்டுகாலம் அமெரிக்க எஃப்.ஐ.ஏ. தலைவராக இருந்த எட்வர்ட் ஹுவர், பாகிஸ்தான் எஃப்.ஐ.ஏ பொறுப்புகளில் இருந்த குலாம் அன்சார், ரெஹ்மான் மாலிக் ஆகியோர் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பிற நாட்டு உளவு அமைப்புகளுடன் ரகசிய உறவைப் பேணினர் என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.
திருத்தப்பட்ட யு.எல்.ஏ.டி சட்டம், அணு ஆற்றல் சட்டம், விமானக் கடத்தல் எதிர்ப்புச் சட்டம் உள்ளிட்ட எட்டு சட்டங்களின் கீழ் வரும் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ எடுத்துக் கொள்கிறது. சட்டம் - ஒழுங்கு மாநிலப் பிரச்னையாக இருந்த போதிலும் தானாகவே இவற்றில் தலையிடும் (suo moto) உரிமையை மத்திய அரசு இதன் மூலம் பெறுகிறது.
இவ்வாறு மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது அரசியல் சட்ட உரிமைகளுக்கு எதிரானது. இதனால்தான் இத்தகைய புலனாய்வு அமைப்பைப் பரிந்துரைத்த மாதவமேனன் குழு, `அரசியல் சட்டத்திலுள்ள சிரமங்களை மீறி இதைக் கொண்டு வரவேண்டும்' எனப் பரிந்துரைத்தது.
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது. இருக்கின்ற புலனாய்வு மற்றும் உளவு அமைப்புகளைப் பலப்படுத்துவது, திறமையாகச் செயல்படுத்துவது ஆகியவற்றின் மூலமே இதைச் சாதிக்க முடியும். பயங்கரவாதத்தின் பெயரால் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது அரசியல் சட்ட அடிப்படையிலான ஆளுகை என்பதை கேலிக்கூத்தாக்கிவிடும்.
1 கருத்துக்கள்:
இசுலாம் மதத்துக்காக எனும் போராளிகளுக்கு ஷரியத் சட்டம் சொல்லும்படியே கண்ணுக்கு கண்,கைக்கு கை என தன்டனை வழஙக வேண்டும்
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments