Tuesday, December 23, 2008

அடங்காத ஐங்கரன்... இடம் மாறிய எந்திரன்! - ஷங்கர், அருண்பாண்டியன் கசப்பு...


நன்றி - ஜூனியர் விகடன்

முதலில் கமல்... அடுத்து ரஜினி... அதன் பின் அஜீத்... அப்புறம் ஷாரூக்கான் என்றெல் லாம் பேசப்பட்டு, கடைசியில் திரும்பவும் ரஜினியிலேயே வந்து முடிந்த படம், ஷங்கரின் கனவுத் திட்டமான 'ரோபோ'!
'ஐங்கரன் இன்டர்நேஷனல் மூவீஸ்' தயாரிப்பில் தொடங்கப்பட்டு, 'ரோபோ' என்ற பெயர் மாறி, 'எந்திரன்' என்றாகியும் மாற்றங்களில் திருப்தி போதா மல், தயாரிப்பாளரையும் மாற்றிக்கொண்டு 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்திடம் போய்ச் சேர்ந்திருக்கிறது இத்திரைப்படம்!
ஏன் இந்த இடமாற்றம்..?


பாதியில் நின்ற படப்பிடிப்பு..!

ஷங்கர், ரஜினி, ஐஸ்வர்யாபச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று மெகா கூட்டணியில், இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதபடி 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க முதலில் ஒப்புக்கொண்டார் 'ஐங்கரன் இன்டர்நேஷனல் மூவீஸ்' லண்டன் கருணா. பல ஆண்டுகளாகவெளிநாட்டில் பட விநியோகம் செய்துவரும் கருணா, ஈழத்தமிழர். சமீபத்தில் அஜீத் நடித்து வெளிவந்த 'ஏகன்' படம்தான் அவருடைய தயாரிப்பில் முதல் வெளியீடு. விஜய் ஹீரோவாக நடித்து பொங்கலுக்கு வரவிருக்கும் 'வில்லு' படமும் கருணாவின் சொந்தப் படம்தான்.

'எந்திரன்' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பிரேசில் நாட்டில் நடந்தது. அடுத்ததாக கோவாவிலும் சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு பங்களாவிலும்

நடந்தது. கடைசியாக தி.நகரில் இருக்கும் 'பிரசாந்த் ரியல் கோல்டு டவர்' கட்டடத்தின் கீழ்த்தளத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. பகலில் படப்பிடிப்பு நடந்தால், ரஜினியைப் பார்க்கக் கூட்டம் எகிறிவிடும் என்பதற்காக, தொடர்ந்து மூன்று நாட்கள் இரவில் ஷ¨ட்டிங் நடந்தது. ஹீரோ ரஜினியும், வில்லன் ரஜினியும் சந்திக்கும் ஒரு காட்சியை அந்த பில்டிங்கின் மாடியில் இருக்கும் ஜாய் ஆலுக்காஸ் நகை மாளிகையின் தளத்தில் படமாக்கினார்கள்.

அடுத்ததாக டிசம்பர் 18-ம் தேதி படப்பிடிப்பு நடக்கும் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப் பட்டது. ஆனால், என்ன நடந்ததோ... அந்தத் தேதியில் 'எந்திரன்' படம் கருணாவின் கையை விட்டே போய்விட்டது!

பகீர் பணச்செலவுகள்...

'எந்திர'னில் ரஜினியின் சம்பளத்தைப் பற்றிச் சொல்லும்போது, 'சிவாஜி'யில் ரஜினி வாங்கிய சம்பளம் 'ஜுஜுபி' என்கிறார்கள். ஷங்கருக்கும் அப்படியே! ஐஸ்வர்யா பச்சனுக்கு ஏழரை கோடி பேசி, 2 கோடி அட்வான்ஸாகக் கொடுக்கப்பட்டது என்று மும்பை பக்கம் பேச்சு! ஹாங்காங்கில் இருக்கும் ஸ்டன்ட் மாஸ்டருக்கு, கிராபிக்ஸ் வேலை செய்யும் டீமுக்கு என்று எல்லாமே கோடிகளில்தான் வாரி இறைத்திருக்கிறார் கருணா. இதுவரை ஆன செலவு 35 கோடி ரூபாய் என்றும், வட்டிக் கணக்கு பார்த்தால் 50 கோடியை நெருங்கும் என்றும் பட்டியல் போடுகிறது ஐங்கரன் தரப்புக்கு நெருக்கமான வட்டாரம். இதெல்லாம் கோலிவுட் வட்டாரத்தில் 'எந்திரன்' படம் சம்பந்தமாகப் பேசப்பட்டு வரும் தகவல்களில் ஒருசில.

லாரியில் போன கார்..!

'எந்திரன்' படத்தில் பயன்படுத்து வதற்காக லேட்டஸ்ட் மாடல் பென்ஸ் கார் ஹீரோ ரஜினிக்கு, பி.எம்.டபிள்யூ. கார் வில்லன் ரஜினிக்கு என்று எல்லாமே செமத்தியான ஸ்டைலாகத்தான் செலவு செய்திருக்கிறார் கருணா. கோவாவில் ரஜினி, ஐஸ்வர்யாபச்சன் தொடர்பான காட்சியைப் படமாக்கியபோது, ரஜினி பயன்படுத்த வேண்டிய பென்ஸ் காரை சென்னையிலிருந்து லாரியில் கோவாவுக்கு அனுப்பினார்களாம்.

ஷங்கர், அருண்பாண்டியன் கசப்பு...

திரைப்பட நடிகர் அருண்பாண்டியன், கருணாவின் நீண்டகால நண்பர். முதலில் ஐங்கரன் மூவீஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த அருண்பாண்டியன், நாளடைவில் கருணாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் 'ஏகன்' படத்தில் தயாரிப்பாளரில் ஒருவராக உயர்த்தப்பட்டார். பொதுவாக, தான் இயக்கும் படங்களின் ஸ்டில்கள் வரையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குக்கூட காட்டாமல் கடைசி வரை சஸ்பென்ஸாகவே வைத்திருப்பார் இயக்குநர் ஷங்கர். எல்லாம் முடிந்தபிறகு முழுமையான 'புராடக்ட்'டை தன் திருப்திக்கேற்ப செதுக்கிவிட்டுக் காட்டுவதுதான் அவருக்குப் பிடிக்கும் என்கிறார்கள். ஏவி.எம் போன்ற பெரிய தயாரிப்பாளர்களே இந்த மாறுபட்ட அணுகுமுறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய நிலைதான்!

ஆனால், 'எந்திரன்' பட விஷயத்தில் ஷங்கரின் அணுகுமுறைக்கு அடங்காமல், தனி ரூட்டில் பயணித்திருக்கிறார் அருண்பாண்டியன். 'எந்திரன்' படத்துக்காக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளை ஷங்கரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல், அந்த ஃபிலிம் ரோலை டெவலப் செய்து அருண்பாண்டியன் போட்டுப் பார்த்துவிட்டார் என்பது தான் 'எந்திரன்' இடம்மாறி 'சன் பிக்சர்ஸ்'ஸ§க்குப் போய்விட முக்கியக் காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது! பாடல் காட்சிகள் திரையிட்டுப் பார்க்கப் பட்டன என்ற விஷயம் தெரிந்தவுடன், ஷங்கர் டென்ஷனாக... அந்த டென்ஷன் படத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று ரஜினியும் டென்ஷனாகிவிட்டாராம்.

ஷங்கரை மாற்றிய ராஜு...

அருண்பாண்டியன் மீதிருந்த வருத்தத்தின் பிரதிபலிப்பாக, அடுத்து நடத்தவேண்டிய படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாராம் ஷங்கர். நாளாக நாளாக தயாரிப்புத் தரப்பு மீது அவருக்குக் கோபம் அதிகரித்துவந்ததே தவிரக் குறையவில்லை. இந்நிலையில், ஒரு நாள் எதேச்சையாக டான்ஸ் மாஸ்டர் கம் டைரக்டரான ராஜுசுந்தரத்தை சந்தித்திருக்கிறார் ஷங்கர். தன்னுடைய வருத்தம் முழுவதையும் அவரிடம் கொட்டித்தீர்த்திருக்கிறார். ''ரெண்டு பாட்டைப் போட்டுப் பார்த்ததுக்கே இப்படி கோபப்படுறீங்களே... நான் ஆசை ஆசையா 'ஏகன்' படத்தை எடுத்து முடிச்சேன். அருண்பாண்டியன் வந்து எடிட்டிங் ரூம்ல உட்கார்ந்துகிட்டு நான் பண்ணி வச்சிருந்த ஐடியாவையெல்லாம் மாத்தினாரு. இது ரசிகர்களுக்குத் தெரியுமா? படம் தோல்வி அடையும்போது டைரக்டர் மேலேதான் எல்லா பாரமும் விழுது!'' என்று சொல்ல... ஷங்கர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போனாராம்.

ஜகா வாங்கிய சகா..!

'எந்திரன்' படத்துக்காகப் பிரத்தியேகமாக, கோடிகளை கருணாவின் கையில் திணித்தது வேறொரு தயாரிப்பு நிறுவனம். ஆனால், அந்தப் பணத்தில் 'ஏகன்', 'வில்லு' படங்களைத் தயாரித்தார் கருணா. அதோடு, வெளித் தயாரிப்பாளர்களின் படங்களையும் மொத்தமாக வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம். 'ஏகன்' வெற்றிபெறாததை உணர்ந்து, விழித்துக்கொண்டது பணம் கொடுத்த நிறுவனம். உடனே, கணக்குவழக்குகளைப் பக்கத்திலிருந்து பார்க்க தன் பிரதிநிதி இருவரை சென்னைக்கு அனுப்பியதாம். இதுவரை ஐங்கரன் மூவீஸ் சினிமாவுக்காக செலவு செய்தவிதத்தில் திருப்தியில்லாததால் 'எந்திரன்' படப்பிடிப்புக்கு மேற்கொண்டு பணம் ரிலீஸ் செய்யாமல் பின்வாங்கத் தொடங்கியதாம்.

தயங்கிய ரஜினி...

ஏற்கெனவே அருண்பாண்டியன் நடவடிக்கையால் நொந்து போயிருந்த ஷங்கர், இதையும் ரஜினி யிடம் சொல்லி வருத்தப்பட.... 'இதற்கு மேலும் படப்பிடிப்பு தள்ளிப் போனால், அது தனக்கான இமேஜையும் சேர்த்தே பாதிக்கும்' என்று தீவிர முடிவுக்கு வந்தாராம் ரஜினி. இதுவே சன் டி.வி. குரூப்பிடம் பேசிப் பார்க்கலாம் என்று திசை மாறியதாகச் சொல்கிறார்கள். இந்த யோசனை வந்த சமயம், தி.மு.க-வின் பெரிய குடும்பத்துக்குள் சமாதானம் ஏற்படவில்லை. 'இப்படியரு முடிவெடுப்பதில் படத்துக்கு என்னவிதமான ப்ளஸ் - மைனஸ்கள் ஏற்படும்' என்ற கோணத்திலும் ரஜினி தீவிரமாக யோசித்தாராம். இதற்கிடையில், 'ஏவி.எம். நிறுவனத்தின் வசம் படத்தை ஒப்புவித்தால் என்ன?' என்ற கோணத்திலும் யூனிட்டுக்குள் பேச்சு வந்திருக்கிறது. ஏதோ சில காரணங்களால் அது மேற்கொண்டு முன்னேறவில்லை. அதன்பிறகே, ''இந்த 'எந்திரன்' படத்தை சன் டி.வி-யால்தான் தயாரிக்க முடியும். அதனால் இதுவரை எடுத்து முடித்தவற்றை அவர்களிடமே ஒப்படைத்து விடலாம். இதுவரை செலவான தொகையை அவர்களிடம் வாங்கலாம்'' என்று சென்னை வந்த வேறொரு தயாரிப்பு பிரதிநிதியிடம் விளக்கியிருக்கிறார் ஷங்கர்.

ஏமாந்த கருணா...

கடந்த 14-ம் தேதி, சென்னைக்கு அருகில் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் ஏசியானா ஸ்டார் ஹோட்டலில் தன் அக்காள் மகளின் கல்யாணத்தையும் மறுநாள் ரிசப்ஷனையும் மிகப் பிரமாண்டமாக நடத்தினார் 'ஐங்கரன்' கருணா. அந்த வைபவத்துக்குத் தமிழ்ப்பட உலகமே திரண்டு வந்தது. ஆனால், ரஜினியும் டைரக்டர் ஷங்கரும் அழைப்பிதழ் கொடுத்தும் வரவில்லை. அதோடு, 'எந்திரன்' படத்துக்காகப் பணியாற்றி கருணாவோடு பழகிய ஷங்கரின் உதவி இயக்குநர்களும்கூட நிகழ்ச்சிக்கு வரவில்லை. அப்போதே 'எங்கோ இடிக்குதே' என்று யோசித்திருக்கிறார்கள் சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ரஜினி, ஷங்கர், கேமராமேன் ரத்தினவேலு மற்றும் ரஜினியின் நண்பர் நாகராஜராஜா ஆகியோருடன் கலாநிதி மாறன் சந்திப்பு பற்றிய செய்தியும், 'எந்திரன்' இடம் மாறிய விஷயமும் பரபரப்பாக வெளியானதைத் தொடர்ந்து, கருணாவைத் தொடர்பு கொண்டு அவருடைய நண்பர்கள் விசாரிக்க... ''படத்தை விடுங்க. ரஜினி என் 25 வருட நண்பர். அவர் எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வராம ஏமாத்திட்டாரே...'' என்று மட்டும் சொன்னாராம் கருணா.

கருணா மீது கோபம்..?

''கலைஞர் டி.வி. ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு முழு ஆதரவு கொடுத்தார் கருணா. தமிழ்நாட்டில் மட்டும் தெரிந்த கலைஞர் தொலைக்காட்சியை லண்டன், ஐரோப்பிய நாடுகள் என்று ஒளிபரப்ப முக்கிய உதவி செய்தார் அவர். 'சன்' பிக்சர்ஸின் 'காதலில் விழுந்தேன்' படம் ரிலீஸானபோது, வெளிநாடுகளில் தன் வசமிருக்கும் தியேட்டர்களில் அதை அவர் வெளியிடவுமில்லை!'' என்று பழைய கதைகளையும் சிலர் நினைவுகூர்கிறார்கள்.

கலாநிதி மகிழ்ச்சி!

ரஜினி, ரஹ்மான், ஐஸ்வர்யாபச்சன் ஆகியோ ரின் கால்ஷீட் வாங்குவதே குதிரைக் கொம்பான சங்கதியாக இருக்கும் நிலையில், இவர்களோடு இயக்குநர் ஷங்கரும் சேர்ந்து லட்டாகக் கிடைத் ததாலேயே, நேரடித் தயாரிப்பில் கலாநிதி மாறன் கால்பதித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், ரஜினியின் படத்தைத் தயாரிப்பது தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் பேனரை இன்னும் உயரத்துக்கு ஏற்றிப் பிடிக்கும் என்று கணக்கிட்டாராம். அதிலும், ''ரஜினியே தனது வீடு தேடி வந்து பேசியதை நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறார் கலாநிதி...'' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில், தங்களுக்கு பக்கபலமாகிவிட்ட 'சன்' குழுமத்துடன் ரஜினி கைகோப்பது கட்சிக்கும் ஒருவகையில் சைலன்ட்டான பாசிடிவ் சிக்னல்களைத் தரும் என்று தி.மு.க. கணக்கிடுவது தனி டிராக்

'வில்லு'... விலைபேசும் சன்னு..?

சமீபத்தில் 'வில்லு' படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. விஜய் ஏனோ அந்த ஃபங்ஷனுக்கு வரவில்லை. படத்தின் இயக்குநரான பிரபுதேவாவும் ஆப்சென்ட். பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் அந்தப் படம் வேறு கைகளுக்கு மாறுகிறதா என்பதும் இப்போது பேச்சாக இருக்கிறது.

நோ கமென்ட்ஸ்...

''ஷங்கர் படம்பிடித்த 'எந்திரன்' பாடல் காட்சிகளை அவர் அனுமதியில்லாமல் நீங்கள் பார்த்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என்கிறார்களே..?'' என்று அருண் பாண்டியனிடம் நாம் கேட்டோம். ''அது தவறான கருத்து. நாலு நாள் பொறுங்க, நானே எல்லாத்தையும் சொல்றேன். இப்போதைக்கு நோ கமென்ட்ஸ்!'' என்று எதற்கோ சஸ்பென்ஸ் வைத்தார்அவர். - எம்.குணா (vikatan)

இதையும் பாருங்க -- எந்திரன் புதிய படங்கள் , எந்திரன் கதை

Related Posts



3 கருத்துக்கள்:

Joomla Techie Sathish on February 7, 2009 at 3:20 PM said...

நிறைய தெரிந்து கொன்டேன்... மிக்க நன்றி...

கோவி.கண்ணன் on March 4, 2009 at 1:38 PM said...

ஐயோ.....இவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நடந்திருக்கா ?

தகவலுக்கு நன்றி !

ஷங்கர் Shankar on March 4, 2009 at 4:33 PM said...

ஆமாங்க கோவி.கண்ணன்

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009