RAW - Research and Analysis Wing வெளிநாட்டு பாதுகாப்பு உளவுப்பிரிவு
மும்பையில் நிகழ்ந்திருக்கும் தாக்குதல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு நாளுக்கு நாள் எத்தனை சீர்கெட்டுப் போகிறது என்பதை அடுத்தடுத்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
பொடா, தடா சட்டங்களைப் போன்ற கெட்டிப்பட்ட சட்டங்களைத் திரும்பக் கொண்டுவரும்படி இப்போதும் அரசியல்வாதிகள் கூச்சலிடுகிறார்கள். ஒரே பாட்டு. ஒரே பல்லவி. ஒரே ராகம். ஒரே தாளம்.
ஒரு தீவிரவாதச் செயலை நடக்கவிடாமல் தடுக்க என்ன செய்யவேண்டும்? அதற்கு யாரும் எந்த உபயோகமான யோசனைகளையும் தெரிவிப்பதில்லை. உளவுத்துறை என்ன செய்கிறது என்று ஒருவார்த்தை கேட்பதில்லை. உளவுத்துறையின் வேலை என்னவென்பதே பலருக்குச் சரிவரத் தெரிவதில்லை. வெற்றுக்கூச்சல்கள், இந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி வெடிப்புச் சத்தங்களைக் காட்டிலும் நாராசமாக இருக்கிறது.
கடந்த பெங்களூரு, அஹமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போதும் டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தின்போதும் முன்னதாக ஜெய்ப்பூர் சம்பவத்தின்போதும் இந்தியன் முஜாஹிதீன் குறித்துச் சில செய்திகள் வந்தன. இப்போது டெக்கன் முஜாஹிதீன் என்று இன்னொரு பெயர். இதெல்லாமும் அவர்களே மின்னஞ்சல் அனுப்பி, தங்களைப் பற்றித் தெரிவித்துக்கொள்வதால் கிடைக்கும் பெயர்களே தவிர, நம்மவர்கள் தேடிக் கண்டுபிடிப்பவையல்ல.
டிசம்பர் 13, 2001ல் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து இன்றுவரை இதுதான் நிலைமை. முஹம்மது அஃப்சல் மாதிரி யாராவது முன்னாள் போராளி கிடைத்தால் பிடித்துப் போட்டு, கேசை முடித்துவிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, உருப்படியாக ஒன்றுமில்லை.
உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான உளவுப்பணிகளை கவனிக்கும் அமைப்பான ஐ.பி. என்கிற இண்டலிஜென்ஸ் ப்யூரோவின் அதிகாரிகள் அனைவருக்கும் அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக வேலை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது போலிருக்கிறது. சில மாதங்கள் முன்பு தலைநகரில் நடைபெற்ற குதிரை பேரத் திருவிழாவின் சமயம் இவர்களுக்கெல்லாம் இரவு பகல் பாராத டியூட்டி இருந்தது நினைவுக்கு வருகிறது.
செய்யட்டும், தப்பில்லை. தேசப் பாதுகாப்புக்காகவும் கொஞ்சம் வேலை பார்க்கலாம். அதுவும் தப்பில்லை.
ஐ.பியின் பணிகள் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டவை. ஹாம் ரேடியோ என்று அழைக்கப்படும் அமெச்சூர் ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணிப்பது இவர்களின் மிக முக்கியமான பணி. குறிப்பாக எல்லைப்புற மாகாணங்களில் இந்த ரேடியோ அலைவரிசைக் கண்காணிப்பு எப்போதும் மிகத் தீவிரமாக இருக்கும்.
அடுத்தபடியாக புதிதாக உள்நாட்டில் யார் எங்கே பதவியேற்றாலும் அவர்களுக்கான செக்யூரிடி க்ளியரன்ஸ் வழங்குவதும் ஐ.பியின் பணிதான். பதவிக்கு வருபவரின் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்வதில் தொடங்கி, அவரது பின்னணி, முன்னணி விவரங்கள், ஆதரவாளர்கள், எதிரிகள் பற்றிய விவரங்கள், அவர் எத்தனை பர்செண்ட் அபாயகரமானவர், அல்லது நம்பக்கூடியவர், கட்சிமாறியா, கேப்மாரியா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, அன்னார் பதவியேற்பதற்கு உரிய சூழல்தானா, தாக்குப்பிடிப்பாரா, என்ன ஆவார், ஏது ஆவார் என்றெல்லாம் ரிப்போர்ட் எழுதுவார்கள். ஒன்றும் பிரச்னையில்லை, பதவி ஏற்கலாம் என்று ஐ.பி. சொன்னால்தான் காரியம் நடக்கும். அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என்று இந்தக் கண்காணிப்பு வட்டத்துக்குள் வருபவர்கள் ஆயிரக்கணக்கானோர்.
அடுத்த பணி, தாம் பேசுவது தெரியாமல் மீடியாவுடன் பேசுவது. இன்ன தகவல் போய்ச் சேரவேண்டும் மக்களுக்கு என்று மத்திய அரசு சொல்லும் தகவல்களை உரிய முறையில் மீடியா வழியே மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஐ.பி.தான். சிக்கல் மிகுந்த, கலவரம் நிறைந்த தருணங்களில் வெளிப்படையாகவும் பேசுவார்கள்.
இதெல்லாம் தவிர ஒரு நாளைக்குச் சுமார் ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் கடிதங்களை உடைத்துப் படித்துப் பார்ப்பதும் இவர்களுடைய முக்கியப் பணிகளுள் ஒன்று. இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதல்ல. தேசம் முழுதும் அனைத்து மாநிலங்களிலும் உண்டு. இதன் தொடர்ச்சிதான் டெலிபோன் ஒட்டுக்கேட்பு வைபவங்களும். அதற்கெல்லாம் அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் திரட்டும் தகவல்களைத் தொகுத்து, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த தெளிவான அறிக்கைகள் தயாரிப்பது, அதை உள்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வைப்பது என்பதுதான் ஐ.பிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி. இந்திய - சீன யுத்தத்துக்குப் பிறகு RAW என்று வெளிநாட்டுப் புலனாய்வு ஏஜென்சி தனியே பிரிக்கப்பட்டபின் ஐ.பிக்கு இருக்கும் பணி இதுதான்.
மாநில போலீஸ், பிராந்திய ராணுவ முகாம்களுடன் ரெகுலரான தொடர்பு வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிலவரங்களை ஆராய்வது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது, மாநில போலீசுடன் எப்போதும் சுமூக உறவு பேணுவது, சந்தேக கேஸ்களைத் தொடர்ந்து கண்காணிப்பது, இயக்கங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், ரகசியக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்களை கவனிப்பது, கூடப்போய் பேச்சுக்கொடுத்து உண்மையறிவது என்று பல ஜோலிகள் இவர்களுக்கு உண்டு.
நமது கெட்ட நேரம், உள்நாட்டில் குழப்பம் விளைவிக்கும் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் வெளிநாட்டு இயக்கங்களாகவோ, அவர்களது பினாமிகளாகவோ இருப்பதனால் ஐ.பி., ‘ரா’வுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவேண்டியது அவசியமாகிறது.
இன்றைய தேதியில் ‘ரா’ எனப்படும் ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்கின் தலைபோகிற வேலை என்பது காஷ்மீர் இயக்கங்களைக் கண்காணிப்பதுதான். அதாவது பாகிஸ்தானை கவனிப்பது. எப்போதெல்லாம் குட்டை குழப்ப விருப்பமோ, அப்போதெல்லாம் இலங்கை. போரடித்தால் அருணாசல பிரதேசத்துப் பக்கம் கொஞ்சம் சீனாவை முன்வைத்து வேலை பார்ப்பார்கள். அப்புறம் பங்களாதேஷைக் கவனிப்பது. அவர்களுக்கு வேறு பெரிய ஜோலி கிடையாது.
ஆனால் இதற்கே மூக்கால் அழுதுகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய தகவல் சேகரிப்பது, பின் தொடர்வது, சுற்றி வளைப்பது போன்ற காரியங்களை ‘ரா’வின் ஒத்துழைப்பில்லாமல் ஐ.பியால் செய்துவிட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்த்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் உள்ளூரில் தீர்மானிக்கப்படுவதே இல்லை. பெரும்பாலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உதிக்கிற திட்டங்கள் இவை. சில சமயம் பங்களாதேஷ் உளவு அமைப்பான டி.ஜி.எஃப்.ஐ [Directorate General of Forces Intelligence] தீர்மானிக்கும். பங்களாதேஷை நாம் நமது தோழமை தேசம் என்று சொல்லிவந்தாலும் டிஜிஎஃப்ஐயைப் பொறுத்தவரை அவர்கள் அல் காயிதாவின் தோழர்களாகவே பல சமயம் செயல்பட்டு வருபவர்கள். பங்களாதேஷில் அதன் உளவுத்துறை தனியொரு அரசாங்கமே நடத்திக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் இயங்கும் உல்ஃபா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு இந்த உளவு அமைப்பில் நல்ல செல்வாக்கும் நட்பும் புரிந்துணர்வும் உண்டு. இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலங்களையும் பெரு நகரங்களையும் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஏதேனுமொரு மசூதியை மையமாக வைத்து முஸ்லிம் இளைஞர்களை இழுத்து மூளைச் சலவை செய்து நாசகாரியங்களில் பயன்படுத்தும் பணியை ஆத்மசுத்தியுடன் செய்துவரும் அமைப்பு இது.
2007 ஆகஸ்ட் 26 அன்று ஹைதராபாத் லும்பினி பார்க்கில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதல்களும் அங்கே நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதுமான சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தது பங்களாதேஷ் உளவு அமைப்புதான்.
எதற்கு இதெல்லாம்?
நமது உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய ஐ.பி., அந்தப் பணியில் பெரும்பாலும் ‘ரா’வின் உதவியைக் கோரியிருக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.
பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா போன்ற தேசங்களிலிருந்து நமக்கு வரக்கூடிய அபாயங்களையும் ஆபத்துகளையும் கணித்து, தடுத்து நிறுத்தவேண்டிய ‘ரா’வே சுகமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது ஐ.பியால் என்ன செய்யமுடியும்?
அதனால்தான் குண்டு வெடிக்கிறது. கராச்சியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் போலக் கப்பலில் வந்து இறங்கி நகரெங்கும் சுட்டுவிட்டுப் போகிறார்கள். நூற்றுக்கணக்கான பலிகளுக்கும் பொருள் இழப்புக்கும் ஆளாகவேண்டி வருகிறது.
மன்மோகன் சிங் நல்லவராக இருப்பதால் பெரிய நன்மைகள் ஏதுமில்லை. அடுத்தடுத்து நடைபெறும் இம்மாதிரியான தீவிரவாதச் செயல்கள் மத்திய அரசின்மீது அழுத்தமான அவநம்பிக்கையையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
நன்றி -பா.ராகவன்
3 கருத்துக்கள்:
RAW இக்கு இருக்கிற முக்கிய வேலையே பிரபாகரன் என்ன செய்கிறார் என்பதை மஹிந்தவிடம் சொல்லுவது தான் . முதல் ல உங்க விட்டுப் பிரச்சினைய தீர்க்க பாருங்க அப்புறம் இலங்கைக்கு ஆயுதம் குடுங்க இல்ல வந்து சேர்ந்து புலி இடம் அடி வாங்குங்க . யாரு வேண்டாம் எண்டு சொன்னது.
unmai thaan...
innum vazhu serkalaam !
Post a Comment
Welcome! Give Your Wonderful Comments